பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின் 'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.
பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை. சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. வெ வின் புனைவில் சம்பவங்களோ, திருப்பங்கங்களோ நம்மை பயமுறுத்துவதைவிட காற்புள்ளிகளும் அடைப்புக்குறிகளுமே நம்மை நடுங்குரச் செய்பவை. நான்கு பக்கங்களுக்கு நீளும் வாக்கியங்கள் முற்றுப்புள்ளியைக் கண்டாலே ஏதோ மோட்சம் கிடைத்தது போலான பரவசத்தை அளிக்கும். தெளிவான மெல்லிய நீரோடையாகத் தொடங்கி இடையில் அடைப்புக்குறி சுழலில் சிக்கி மீள்வதென்பது மூச்சைப் பிடித்து உயிர் பிழைப்பதற்கு சமானம். அடைப்புக்குறி, அடைப்புக்குறிக்குள் அடைப்புக்குறி என வாக்கியங்கள் தாமரை மலருள் இதழ்களை அடுக்கி வைத்தது போலான ஆனால் மையத்தை நோக்கியிராத ஒரு அடுக்குமுறை.
ஒரே வாக்கியத்திற்குள், கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம், நிகழ்காலத்திலிருந்து கடந்த காலம், அடுத்து எதிர்காலம் என காலம் பகடிக்காயாய் உருள்வதில் ஏதோ புதிருக்குள் மாட்டி உருள்வது போன்றெதொரு உணர்வு. நிறுத்தற்குறிகள் சில இடங்களில் பயமுறுத்துபவையாக இருந்தாலும், நிறுத்தற்குறி இல்லாமல் நீளும் சில வரிகள் மந்திரத்தன்மை வாய்ந்தவை. சொற்களை மேற்கொண்டு வாசிக்க முடியாமல் இரண்டு மின் காந்தங்களுக்கிடையில் மாட்டியது போல் அதிர்ந்து பின் இலகுவாகி ஆசுவாசமடைந்தால், வழுக்கி பள்ளத்தில் விழுந்துவிடும் அபாயமுள்ளவை. அதனால் கயிறை இருகப்பற்றி மலையேறுவது போல் சில இடங்களில் மேல் செல்ல வேண்டும். ஒரு இசைத்தன்மையுடன் இயங்குபவை.
பல வருடங்களுக்கு முன்னர், 'லெ ஃப்லர் பூர் லெ சொம்' என்னும் ஃப்ரெஞ்ச் மஞ்சள் பத்திரிகையில் வெளியான பெண்ணொருத்தியின் புகைப்படங்களின் உரிமை யாருக்கு என்று இரண்டு ஆண்கள் வாதிடுவதாகத் தொடங்குகிறது கதை. நிர்வாணம் குறித்தான விவாதம் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. சுமதி, தன் நிர்வாணத்தை இறுதிவரை பூடாகரமாக்காமல், கணவனுக்கு மூன்றாவதாகத் தான் திருமணம் செய்து வைத்த தன் தங்கை ஊர்மிளாவின் நிர்வாணத்திலும் விஸ்வனாதனை தன் நிர்வாணத்தைத் தேட வைக்கிறாள். விஸ்வனாதனால் பார்க்க மறுத்த பவித்ராவின் நிர்வாணம், உச்சநிலை உணர்ச்சிவெளியில் வெளிப்படும் இந்திய நிர்வாணத்தை காட்சிப்படுத்த விழையும் லோத்தர் எனும் ஃப்ரெஞ்ச் புகைப்படக்காரனால் கலையாகிறது. பன்னிரண்டு வருடத் திருமண வாழ்வில் தன் கணவனால் தீண்டவேப்படாத தன் உடலை வாராணசி சுடுகாடாக, எரியும் சிதையாக உருவகிக்கிறாள் பவித்ரா. இறுதியில் இதாவின் நிர்வாணத்தில் அது பூரணமடைகிறது. இச்சைகளுக்கு வடிகாலாகப் பெண்ணுடலின் நிர்வாணத்தைத் தேடி அலையும் ரெகுபதி என்பவனின் கையில் கிடைத்த பவித்ராவின் நிர்வாணப் புகைப்படங்கள் சுமதியின் உயிரை வாங்கி, விஸ்வநாதனை புத்தி பேதலிக்கச் செய்து பவி பவி என்று பிதற்றச் செய்கிறது.
விஸ்வநாதன், சுமதியின் செயல்களெல்லாம் சரியா தவறா என்று எந்த சார்பும் நாவலில் இல்லை. அதையெல்லாம் நாமே விவாதித்து ஒரு முடிவிற்கு வரலாம். விஸ்வநாதன் சுமதியின் மீது அவளைப் போலவே காதலில் இருக்கிறான். ஆனால் பெரியவர்களின் பேச்சைத் தட்டமுடியாமல் பவித்ராவை திருமணம் செய்கிறான். பின்பு சுமதியையும் ஊர்மிளாவையும் திருமணம் செய்கிறான். இதற்கு பெரியவர்கள் மீதான பயமும் சுமதியின் காதலும் மட்டுமே காரணமாக இருக்குமா என்ன. அவன் ஒரு கோழை. நாவலில் எங்கும் அவனை இரக்கத்திற்குரியவனாய் காட்டவில்லை. ரெகுபதிக்குக் கிடைத்த பவித்ராவின் புகைப்படங்களிருக்கும் இதழை வைத்து ரெகுபதியும் விஸ்வநாதனும் வார்த்தை போரில் ஈடுபடும் இடத்தில் இரண்டு ஆண்களின் மனவெளிப்பாடு அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும்.
காதல் இவ்வளவு குரூரமாக, இரக்கமற்றதாக இருக்க, முக்கால் நூற்றாண்டிற்கு முன்பாக இங்கு நிலவிய சமூகக் கட்டமைப்பும் ஒரு காரணம். ஒரு பெண்பித்தனிடமிருந்து மூத்த மகளைக் காப்பாற்றுவதாய் எண்ணி இளைய மகளின் காதல் தெரிந்தும் அவனின் காதலனுக்கு மூத்த மகளை மணமுடித்து அது எத்தனை மனங்களை பிறழ்வாக்கிறது, உயிர் பலிவாங்குகிறது. சுமதி, தன் காதலனை அடைய பவித்ராவின் உடலை சிதையாக்குகிறாள். அவன் ஆண்மையை நிரூபிக்க இதாவைப் பெற்றெடுக்கவைத்து ஊர்மிளாவை பலிகொடுக்கிறாள். விஸ்வநாதனும் இவையனைத்திற்கும் சம்மதிக்கிறான். அவன் நினைத்திருந்தால் முடிந்தவரை ஊர்மிளாவின் வாழ்க்கையை காப்பாற்றியிருக்கலாம். பவித்ராவிற்கு வேறொருவனை திருமணம் செய்து வைத்து, விஸ்வநாதனும் சுமதியும் விரும்பியவாறு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் இத்தனை இழப்புகள் நேர்ந்திருக்காது. குடும்பத்தில் பெற்றோர்-பிள்ளைகள் எனும் படிநிலை, இறுக்கமான சம்பிரதாயங்களை உள்ளடக்கிய பிராமணச் சமூகம் இத்தனை துயரங்களுக்கு காரணமாகியிருக்கிறது. சுமதி-விஸ்வநாதன் மட்டுமே அனைத்திற்கும் காரணமாயிருக்க முடியாது.
நாவலில் இதாவின் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் விரித்திருக்கலாமோ என்று தோன்றியது. சோனுவுக்காக அஸி கட்டம் தெரியும் பவித்ராவின் புகைப்படத்தை வைத்து என்ன பணயம் வைக்கிறாளென்று சரியாக எனக்குப் புரியவில்லை. பூனேவிலிருந்து ஒஷோவின் பாதங்களைச் சென்றடைய வேண்டும் என்ற திட்டத்திலிருக்கும் இதா, சுமதியின் மரணச் செய்தி கேட்டு ஒசூருக்கு வருபவள், தந்தையை மயக்கநிலை தோற்றமாக ஆக்கிரமித்திருக்கும் பவித்ராவை தேடிச்செல்லும் வாராணசி பயணத்தில் ஆரம்பத்தில் ஆர்வமில்லாதவளாய் இருந்தவள் ஒரு கட்டத்தில் பவித்ராவின் பிரதிபலிப்பாய் தன்னையே உணர்கிறாள். அது வெறும் எல்.எஸ்.டியோ மாரீஜூனாவின் விளைவோ மட்டுமன்று.
'பொன்னியின் செல்வன்' திரைப்படமாக வந்த பொழுது ஏன் நிறைய பேருக்கு பிடிக்கவில்லையென்று இந்நாவலை படிக்கும் பொழுதுதான் தெரிந்தது. லோத்தரும் பவித்ராவும் இணைந்து வாராணசியின் படித்துறைகளில், பாழடைந்த அரண்மனைகளில், கல்லறைகளில் எடுக்கும் புகைப்படங்களின் உருவாக்க பக்கங்களை, என் மனதில் நான் எழுப்பிய கற்பனைகளை எந்தத் திரையிலும் என்னால் காண இயலாது. நாவலில், பவித்ராவோ, வேறு யாருனுடைய தோற்ற வர்ணனையோ இருக்காது. அதனால் பவித்ரா எப்படி இருப்பாள் என்று எனக்கொரு கற்பனை வந்து இறுதியில் நானும் சிறிது நேரம் பவித்ரா பவித்ரா என்று பிதற்றிக்கொண்டிருந்தேன்.
ஆரம்பகட்ட வாசகர்கள் பா. வெ வின் புதிர்ப்பாதைக்குள் நுழைந்து வெளிவருவது கொஞ்சம் சிரமம் தான். பா. வெ வின் ஓட்டத்தை பிடிக்க வேண்டும் அவ்வளவுதான். பிடித்துவிட்டால் சொற்களுக்குள் சுழல வேண்டியதுதான். இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்கள், கொஞ்ச நாள் எதிலாவது போய் மாட்டிக் கொண்டு தத்தளிக்கலாம் என விரும்பும் தெளிவான மனநிலை உள்ளவர்கள் இந்நாவலை வாசிக்கலாம். அவரின் மற்றைய இரு நாவல்களான பாகீரதியின் மரணமும் தாண்டவராயன் கதையும் அவரின் அபுனைவுகள், சிறுகதைகளை வாசித்துவிட்டு வாசிக்கலாம் என்றிருக்கிறேன். மனதிற்கு மிகவும் நெருக்கமான நாவலாக மாறியுள்ளது இது.

very nice review 👌👌
ReplyDeleteநன்றி
ReplyDelete