வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்' சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.
கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எடுக்கும் முடிவுமே கதை. இக்கதை என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும். தலைப்பில் இருப்பது போல் பொதுவாக நகரம் குறித்தோ, மதுரை குறித்தோ ஒரு புனைவாக எந்தவொரு சித்திரத்தையும் நமக்கிது அளிப்பதில்லை. கிராமத்திலிருந்து வரும் வள்ளியம்மாளுக்கு மருத்துவமனையில் ஏற்படும் அனுபவங்கள் அந்நகரம், அங்கிருக்கும் மக்கள் குறித்த சித்திரத்தை அளிக்கிறதா அல்லது நகரிலிருக்கும் மருத்துவமனை குறித்த சித்திரத்தை அளிக்கிறதா என்பது தெளிவில்லை. நகரத்திலிருக்கும் ஒரு மருத்துவமனை மூலம் அந்நகரைக் குறித்த குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்க முயற்சிக்கிறார் என்று எடுத்துக்கொள்ளளாமா? கதையில், அவளின் அகத்தினூடாக அந்நகர் விரிவதில்லை. தலைப்பிற்கும் கதைக்கும் இருக்கும் ஒரே இணைப்பு கதைசொல்லி மதுரை நகரைக் குறித்து தரும் புறவயமான விவரணைகளே. அவை வெறும் தகவல் குவிப்பாகவே எஞ்சுகின்றன.
முதல்முறை, பெரிய டாக்டர் பாப்பாத்தியை பரிசோதனை செய்யும் இடமெல்லாம் ஏதோ போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை வாசிப்பது போலவே இருந்தது. “அந்த க்யூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. இறந்து போன தன் கணவன்மேல் கோபம் வந்தது”. என்று வள்ளியம்மாளின் கணவன் குறித்து ஓர் இடம் வரும். இவ்விடத்தில் அவளுக்கு அவனின் மீது ஏன் கோபம் வருகிறது? அவளின் குடும்பம் கணவன் உயிருடன் இருக்கும் வரை வசதியுடன் இருந்து, அவனது இறப்பிற்குப் பிறகு வீழ்ச்சியடைந்த குடும்பமா அல்லது அவன் உயிருடன் இருந்திருந்தால் மருத்துவமனையில் தான் தன் மகளுடன் இருந்து, கணவன் அவ்வேலைகளையெல்லாம் செய்திருப்பானே என்ற ஏக்கத்தினாளா? எதுவாயினும் ஒரு கிளைக்கதைக்கான பொறி அதில் இருக்கிறது. எனக்கது பிடித்திருந்தது.
பெரும்பாலும் கதை சொல்லியின் மொழியிலேயே நகரும் கதையில், இறுதியில் மட்டும் வள்ளியம்மாள் தனக்குள் பேசுவதாக அமையும் பத்தி அந்நியமாக இருந்தது. எல்லாவற்றையும் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் கதையில் எந்த கதாப்பாத்திரமும் நம்முடன் உரையாடுவதில்லை. வள்ளியம்மாள், திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அழும் பொழுது, ஓர் ஆள் வந்து ஓரமாக ஒதுங்கி நின்று அழச் சொல்வான். அவ்விடம் மட்டும் நகரம், ஒரு மனிதனை எப்படி இறுகிப் போனவனாய் மாற்றியுள்ளது என்று சொல்வது போல் இருந்தது. பேசாமல் "அரசு மருத்துவமனையில் ஏழை படும் பாடு" என்று தலைப்பு வைத்திருக்கலாம். யாருக்கான கதை இதுவென்று சொல்ல தெரியவில்லை. கதையை வாசித்தவர்கள் கருத்துப் பெட்டியில் எழுதுங்கள். விவாதிப்போம்.
Comments
Post a Comment