சங்க கால ஆட்சியாளர்களான சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்திருக்காவிடினும் தான் சார்ந்த பகுதி முற்காலத்தில் எந்த அரசின் ஆட்சிப்பகுதியாக இருந்திருக்கும் என்று தெரிந்துக் கொள்வதில் அனைவருக்கும் ஆர்வமிருக்கும். மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தங்களைப் பாண்டிய நாடு என்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சோழ நாடு என்றும் கோவையைச் சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சேர நாடு, கொங்கு நாடு என்றும் வகைமைப்படுத்திக் கொள்வர். ஆனால் யாதொருவராலும் கண்டுகொள்ளப்படாத, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்தினர், நீங்களெல்லாம் எந்த அரசின் ஆட்சிப்பகுதியில் இருந்திருப்பீர்கள் என்று கேட்டால் உதட்டைப் பிதுக்குவார்கள். நாமெல்லாம் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிப் பகுதியில் வருவோம், அவனது மூதாதையர்கள் சேர மரபைச் சார்ந்தவர்கள். அதனால் நாம் சேர மண்டலத்தைச் சார்ந்தவராக இருப்போம், அதியமான் சோழப் பேரரசின் கீழ் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அதனால் சோழ மண்டலமாக இருக்கலாம் மாவட்டத்தில் எத்தனை கல்வெட்டுகள் கன்னட...