தருமபுரியின் பொக்கிஷம்
1939ம் ஆண்டு டி.கோபால செட்டியார் அவர்கள் எழுதிய, தருமபுரியின் முதல் வரலாற்று நூலான "தருமபுரி பூர்வ சரித்திரம்" எனும் நூல், பதிப்பாசிரியர் இ.தங்கமணி அவர்களின் தீவிரமான முயற்சியால் திருவள்ளுவர் பொத்தக இல்லத்தின் வெளியீடாக 2022ம் ஆண்டு மறுபதிப்பு கண்டிருந்தது.
பேராசிரியர் த.பழமலை அவர்கள் இயற்றிய "தருமபுரி மண்ணும் மக்களும்" என்னும் நூலில் இடம்பெற்றிருந்த கோபால செட்டியார் பற்றிய குறிப்புகள், இந்த நூலின் தேடலுக்கு வித்தாகியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்து தமிழ் திசை நாளிதழில் இதன் நூல் அறிமுகம் இருந்தது. தருமபுரி புத்தகத் திருவிழாவில் தான் கண்டுபிடிக்க முடிந்தது. நானும் இத்தனை ஆண்டுகளில் தருமபுரியின் வரலாற்றை முழுமையாகப் படித்ததில்லை.
அதியமான் முதல் தாமஸ் மன்றோ வரை
அதியமானைப் பற்றி தருமபுரி மக்கள் அதிகபட்சம் அறிந்தது, "ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான்" என்பதுதான். தருமபுரி நகரின் நான்கு ரோடு சந்திப்பில் அக்காட்சியை சிலையாக வைத்திருப்பார்கள். ஒருமுறை அந்த சிலையில் நெல்லிக்கனி காணாமல் போக, மீண்டும் புதுப்பித்தார்கள். கோபால செட்டியார், சங்க காலப் பாடல்களில் இருக்கும் அதியமானைப் பற்றிய பதிவுகளிலிருந்து தருமபுரியின் வரலாற்றைத் தொடங்கியுள்ளார். நூல்களிலிருந்து தொகுத்த தகவல்கள் மட்டுமல்லாமல் வரலாற்று எச்சங்கங்களின் அப்போதைய நிலையை தான் கண்டவற்றிலிருந்தும் எழுதியிருக்கிறார்.
தருமபுரியின் பழங்காலத்துப் பெயர் 'தகடூர்' என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அது எப்படி 'தருமபுரி' என்று மாறியதென்று கேட்டால் விழிப்பர்கள். தருமபுரி என்ற பெயரே இந்நூல் எழுதப்படுவதற்கு முன்னூறு வருடங்களுக்கு முன்னர் தான் வந்தது என்ற தகவல் முற்றிலும் புதிதாக இருந்தது.அதன் விளக்கத்தை நூலில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
அதியமான் நெடுமானஞ்சியின் மகன் பொருட்டெழினிக்குப் பிறகு தகடூர் அரசர்களின் சங்கதிகள் ஏதும் தோன்றவில்லை. எழினி வம்சத்தினர் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம் வரை ஆண்டு வந்ததாகவும் பின்னர் கொங்கு நாட்டு அரசருக்கு பாத்தியப்பட்டு அவர்கள் வசமிருந்ததாகவும் குறிப்பிடப்பட்படுள்ளது.
பதினாறாம் நூற்றாண்டில் பெனுகொண்டாவின் விஜயநகர அரசனின் மருமகனான ஜகதேவராயர் என்பவரின் பாராமஹால் (சேலம் ஜில்லா) ராஜ்ஜியத்தின் கீழ் தருமபுரி வந்துள்ளது. பின்னர் மதுரையைச் சார்ந்த நாயக்கரின் ஆட்சியின் கீழ் வந்து மைசூர் ராஜ்ஜியத்துடன் இணைந்துள்ளது. அது ஹைதர் அலியின் வசமாகியிருக்கிறது. ஹைதரின் மகன் திப்பு சுல்தான் ஆட்சியில் ஆங்கிலேயரிடையே நடந்த போரில், 1792ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி போரில் தோற்றமையால், திப்பு சுல்தான் தன் ராஜ்ஜியத்தில் பாதியை ஆங்கிலேயருக்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தது. இப்படியாக ஆங்கிலேயரின் வசம் தருமபுரி வந்திருக்கிறது.
தருமபுரியில் தாமஸ் மன்றோ
டி.கோபால செட்டியார்:
இவர் 1867ம் ஆண்டு, அன்றைய சேலம் ஜில்லாவில், தருமபுரி தாலுகா, கடத்தூரில் பிறந்துள்ளார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் F.A படிப்பு முடித்துவிட்டு தருமபுரியில் சிறிது காலம் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
சட்டக் கல்வி முடித்து திருப்பத்தூரில் 1894 முதல் 1911 வரை வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். பல பொதுநல வழக்குகளையும் எடுத்து நடத்தியுள்ளார். சைவ சித்தாந்தத்தில் வேரூன்றியவரான இவர் பின்னாட்களில் ஸ்காட்லந்து நாட்டைச் சார்ந்த இம்மானுவேல் ஸ்வீடன்பர்க்கின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு இரண்டு தத்துவங்களையும் ஒப்பிட்டு ஆய்வுகளை மேற்கொண்டு பல நூல்களை இயற்றியுள்ளார். ஸ்வீடன்பர்க்கின் பெயரில் "ஸ்வீடன்பர்க் சொஸைட்டி" என்ற அமைப்பை நடத்தியிருக்கிறார்.
பெரியாருக்கு முன்னோடி
சென்னையில் 1907ம் ஆண்டு "The New Reformer" எனும் ஆங்கில மாத இதழைத் தொடங்கி 1917 வரை நடத்தியுள்ளார். தொடர்ச்சியாக சமூக, சமய, பொருளாதார மறுமலர்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய பல சீர்திருத்தக் கருத்துக்களுக்கு The New Reformer இதழே காரணம் என்று கூறியதாகச் சொல்கிறார்கள்.
அவரின் இதழுக்கு வெளிநாட்டிலிருந்து பல சந்தாதாரர்கள் இருந்திருக்கின்றனர். ஆறாம் ஜார்ஜ் இளவரசர் இந்தியா வந்திருந்த பொழுது இவரை அழைத்து, தன்னால் ஆகும் உதவி உண்டா? என்று கேட்டதற்கு, தனது இதழை ஆங்கில நாட்டு நூலகங்களில் வாசகர்கள் படிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டாராம்.அவரின் நினைவாக "Prince of Wale's Reading Room" என்ற வாசக சாலையை திருப்பத்தூரில் வைத்து நடத்தியுள்ளார். முதலாம் உலகப் போரினால் காகிதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு இதழை நிறுத்தும்படியாக ஆயிற்று. அவர் நடத்திய இதழின் ஒரு பிரதி கூட கிடைக்ககாதது இதழியல் துறைக்கொரு இழப்பு.
டால்ஸ்டாயுடனான கடித உறவு
உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரும் தத்துவியலாளருமான லியோ டால்ஸ்டாயுடன் கோபால செட்டியாருக்கு கடிதப் போக்குவரத்து இருந்திருக்கிறது. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவர் இந்தியாவெங்கும் அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் கூட அவர் அறியப்படவில்லை. அக்கடிதகங்களை The New Reformer இதழில் கோபால செட்டியார் வெளியிட்டு வந்துள்ளார்.
டால்ஸ்டாய் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தன்னைப் பற்றிய அபிப்பிராயங்களை எழுதுமாறு உலகில் உள்ள இருநூறு பேருக்கு கடிதம் எழுதினார். அதில் ஐம்பத்தைந்தை மட்டுமே ஏற்றுக் கொண்டார். அவற்றுள் இந்தியாவில் கோபால செட்டியாரும் ஆல்மாமூன் சக்கரவர்த்தி என்பருமே ஆவர்.
இத்தகவலை நாம் எளிமையாகக் கடந்துவிட முடியாது. அந்தப் பட்டியலில் காந்தியோ நேருவோ இருந்திருந்தால் இந்நேரம் அக்கடிதம் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால் கோபால் செட்டியார்-டால்ஸ்டாய் கடிதங்களில் ஒன்று கூட இன்று கிடைக்கப்பெறவில்லை. நாம் நமது மண்ணின் அறிஞர்களையும் வரலாற்றுப் பொக்கிஷங்களையும் அவற்றின் அருமை தெரியாமல் எப்படி மறக்கடிக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கோபால செட்டியாரின் நூல்கள்
- தருமபுரி பூர்வ சரித்திரம் திருவள்ளுவர் பொத்தக இல்லம்,தருமபுரி|9360224172
- Swedenborgianism in India:D. Gopaul Chetty and the Marriage of Swedenborg and Saiva Siddhanta-Eleanor Schnarr
- New light upon The Philosophy of India (or) Swedenberg and Saiva Siddantha-https://amzn.eu/d/iyx5XuZ
- ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்-https://amzn.eu/d/dd1HBMv
- Saivism,The Religion or The Ancient Britons
- சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
- பதி பசு பாச விளக்கம்
- முப்பொருளுறவு
- வாழ்க்கை போதம்
- பரம இச்சாஞான தீபிகை
- சுடர் சிவஞான சூரன் பராக்கியம்
- நூதன மறுமை விளக்ககம்
- தமிழர் சரித்திரம்
- Leo Tolstoy:His life and teaching
- New Reformer Essays
- Chidambara Rahasyam Revealed



Comments
Post a Comment