Skip to main content

இன்செப்ஷன்-ஒரு பார்வை

கனவு, கனவுக்குள் கனவு ,அந்தக் கனவுகள் கனவு என கனவினூடே பயணித்து கனவைக் களவாடி,கனவிற்குள் மாட்டி, அதிலிருந்து தப்பித்து,கனவுக்குள் விதைத்து என கனவை வைத்து நாயகனும் அவன் கூட்டாளிகளும் ஆடும் களியாட்டமே இன்செப்ஷன்.

இந்தக் கதையை ஒரு நேர்க்கோட்டில் புரிந்துக் கொள்வது கடினம். நாயகன் விளக்கும் கனவுக் கோட்பாடுகளை அவன் விவரணையிலேயே நூல் பிடித்துச் சென்றால் மட்டுமே ஓரளவிற்குச் சரியாகக் கதையைப் புரிந்து கொள்ள இயலும்.அதிலிருந்து கொஞ்சம் விலகினாலும் தூக்கத்திலிருந்து விழித்த பின், கனவில் என்ன கண்டோம், எங்கு இருந்தோம் என்று காட்சிகள் மங்கி நிகழ்காலத்தில் சிக்கிக் கொள்வது போல்,நாயகனின் இன்செப்ஷன் கோட்பாட்டைச் சரியாகப் பின் தொடர முடியாமல் நாமும், இது எந்தக் கனவு, கனவுக்குள் கனவா? என்று அவன் கனவுலகிற்குள் சிக்கிக் கொள்வோம்.

ஓர் இயற்பியல் பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கும் முன் அதன் அடிப்படைக் கோட்பாடுகளை தெளிவாகப் படித்தல் அவசியம் .ஏனெனில்,அதையொட்டி தான் அந்தப் பாடமே மேற்கொண்டுச் செல்லப் போகிறது. அதுபோல,படத்தின் ஆரம்பக் காட்சிகளைச் சரியாகப்புரிந்துக் கொண்டால்,கனவுலகில் பயணிக்க நாமும் தயாராகி விடலாம்.

கோட்பாடு இதுதான்:

கனவு காணும் பொழுது,ஒருவரின் சுயநினைவு குறைந்திருக்கும். அச்சமயத்தில், அவரின் கனவிற்குள்  இன்னொருவர் பயணிக்கும் பொழுது அங்குள்ள தகவல்களைக் களவாட முடியும் .ஆனால் நம்முடைய உள்ளுணர்வின் மூலம்,தகவல்கள் களவாடப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.இப்படி,கனவின் ஒரு நிலைக்கு தான் செல்ல முடியும் என்றில்லை .உள்ளே சென்றுள்ள கனவில்,உறக்க நிலைக்குச் சென்று கனவின் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். கனவிற்குள் கனவு என  ஒருவரின் கனவிற்குள் பல பேர் பயணிக்கலாம்.தூங்கியவர் விழிப்பு கொள்ளும் வரை கனவு தொடரும்.அல்லது காரியத்தை முடித்துக் கொண்டு விழித்துக் கொள்ள வேண்டும்.

கதை இதுதான்:

நாயகன் காப், க்ளைன்ட் ஒருவரின் அசைன்மென்ட்டை முடிக்க, சைத்தோவின் கனவிற்குள் தகவல்களைத் திருடி வரச் செல்கிறான். ஆனால்  அவன் தன் உள்ளுணர்வால் அதனைத் தடுத்து, நாயகனிடம் ஒரு புது அசைன்மென்ட்டைக் கொடுக்க, சந்தர்ப்பவசத்தால் இருவரும் கூட்டாளி ஆகின்றனர் .அதன் பின்னர் நாயகனும் அவன் கூட்டாளிகளும் அதைச் செய்து முடித்தார்களா,அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று விறுவிறுப்புடன் ஒரு மீள முடியாக் கனவுலகிற்குள் நம்மை கடத்திச் செல்கிறது கதை.

எதிராளியின் சாம்ராஜ்யத்தை அழித்து தான்தான் உலகின் நம்பர் ஒன் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்பது சைத்தோவின் லட்சியம் .அதற்காக தொழில் போட்டியாளரான, இளம் தொழிலதிபர் ஃபிஷரைத்  தன் தந்தைக்கு எதிராகத் தானே செயல்பட வைக்க வேண்டும்.அப்படி ஒரு எண்ணத்தை அவன் உள்ளுணர்விற்குள் ஆழமாக விதைக்க வேண்டும்.

இந்த சுயநலமிக்க 'உன்னத' நோக்கத்திற்காகத்தான் இந்த இன்செப்ஷன் திட்டமே. 


திட்டம் இதுதான்:

நாயகன் காப் சந்தர்ப்பவசத்தால் அசைன்மென்டைச் செய்ய ஒப்புக்கொண்டாலும் தன் குழந்தைகளுடன் இணைய, இத்திட்டத்தைக் கச்சிதமாகச் செய்து முடிக்க,ஒரு பக்காவான குழுவைத் தேர்ந்தெடுக்கிறான் .நாயகனின் தோழன் ஆர்தர் அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறான். எதிராளியின் முடிவுகளை மாற்றி அமைக்க அவனின் கனவிற்குள் சென்று ஆழமாக அவன் உள்ளுணர்விற்குள் நுட்பமாக இவர்களின் சிந்தனையை விதைக்க வேண்டும்.அவன் அறியும்படி மாற்றங்கள் செய்தால் முயற்சி பலனளிக்காது.அவன் சுதாரிக்க முடியாத,தீர்வுகளை அடைய இயலாத புதிர்களைப் போன்றதொரு கனவுலகை வடிவமைக்க வேண்டும்.அப்படி ஓர் உலகை வடிவமைக்க காப்பிற்கு ஒரு வடிவமைப்பாளரின் உதவி தேவை.

அவனுக்கு உதவுவதற்காக வருகிறாள் புத்திக்கூர்மையும் படைப்பாக்கமும் கொண்ட அரியர்த்னே. ஓர் ஐந்து நிமிட தூக்கத்திலெல்லாம் இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.இடையூறு இல்லாத ஓர் ஆழ்உறக்க நிலையில் தான் செய்து முடிக்க முடியும். நிகழ் உலகில் ஐந்து நிமிடம் என்றால் கனவு உலகில் ஒரு மணி நேரம். இவ்வாறு ஒரு கனவுலகிலிருந்து இன்னொரு கனவிற்குச் செல்ல செல்ல காலம் அதிகரிக்கும்.உதாரணமாக, முதல் கனவுலகில் ஒரு வாரம் என்பது இரண்டாம்  கனவுலகில் ஆறு மாதமாக இருக்கலாம்.காரியத்தைச் செய்து முடிக்கும் வரை கனவுலகில் வருடங்களாகக் கூட நீளலாம்.இடையில் ஒரு சிறு தவறு நேர்ந்தாலும்,ஒட்டுமொத்த திட்டமுமே பாலாகும்.ஆழ்உறக்க நிலையை, குழுவும் எதிராளியும் அடைய வேதியாளரான யூசுஃபின் வேதிமருந்து தேவைப்படுகிறது. அவனை இன்செப்ஷனை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த காபின் பழைய நண்பன் இயேம்ஸ் அறிமுகப்படுத்துகிறான்.

இந்தப் பயணத்தில் யாரேனும் இறக்க நேர்ந்தால், சரியான சமயத்தில் கனவில் இருந்து அனைவரும் விழிக்க வேண்டும்.இல்லையெனில்,அனைவரும் ஒரு மீளமுடியா லிம்போவிற்குள் மாட்டி விடுவர்.அதாவது நிஜ உலகிற்குள் திரும்ப முடியாமல் கனவுலகிலேயே மாட்டிக் கொள்வர்.நிஜ உலகில் அவர்களின் மூலை செயலிழந்துவிடும்.கனவிற்குள் அவர்கள் அனைவரும் இணைந்துப்  பயணிக்க,ஒரு கருவி அடிப்படையாக இருக்கிறது.கனவில் இருந்து விழித்துக் கொள்ள ஒரு 'கிக்' தேவைப்படுகிறது. கனவிற்குள் செல்லும் ஒவ்வொருவரும் அவரவர் டோட்டத்தை கையில் வைத்திருப்பது அவசியம்.அதனை வைத்து தான் நிஜ உலகிற்கு திரும்பவும்  தன் கனவு களவாடப்படுகிறதா என்பதை அறியவும் இயலும்.

நாயகனின் மனச்சிக்கல்:



கனவுலகை வடிவமைக்க நாயகனாலே முடியும். ஆனால்,ஒரு காலத்தில் இன்செப்ஷன் பரிசோதனையில் அவனும் அவன் மனைவி மாலும் ஈடுபட்டிருக்கையில்,அவர்களின் நினைவுகளின் மூலம் ஒரு கனவுலகத்தை உருவாக்கி அதில் வாழ்ந்து வருகின்றனர்.அதில் அவன் மனைவி,ஒரு கட்டத்தில் கனவுலமே நிஜமென்று குழம்பி தற்கொலைச் செய்து கொள்கிறாள். பழி நாயகன் மீது விழுகிறது.அதனால் குழந்தைகளைப் பிரிய நேர்கிறது.மீண்டும் அவர்களுடன் சேர்ந்து வாழ  அந்தப் பணியையே திர்ம்பச் செய்ய வேண்டியதாயிருக்கிறது.இங்கு தான் நாயகனின் மனச்சிக்கல் ஆரம்பமாகிறது.மனைவியின் பிரிவுத் துயரைத் தாங்க இயலாமல் ,தன் நினைவுகளால் அவளைச்  சிறைப்படுத்தி வைத்திருக்கிறான்.அது அவன் உள்ளுணர்விலும் பிரதிபலிக்கிறது,அவன் கனவுலகில் பயணித்து காரியங்களைச் செய்து முடிக்க அது தடையாக இருக்கிறது.இன்செப்ஷன் அசைன்மென்டில் தன் குழுவினரைக் காப்பாற்ற,தன் நினைவில் இருந்து மனைவியை  நீக்கி,அசைன்மென்ட்டை வெற்றிகரமாக முடித்து குழந்தைகளிடமும் சேர்கிறான்.

படத்தின் பலம்,பலவீனம்:

இந்தச் சிக்கலானக் கதையைச் சிந்தித்து,ஒரு திரைவடிவத்திற்குள் கொண்டு வருவதே ஒரு பெரிய சவால். நடிகர்களின் நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்,இசைக் கோர்ப்பு என எல்லா துறைகளிலும் அவரவரின் சிறப்பை வெளிக்கொண்டு வந்ததன் மூலம் இயக்குனர் இப்படத்தைச் சிறப்பாக  நமக்கு அளித்துள்ளார். இந்தக் குழப்பமான கதையே படத்திற்கு பலமும் பலவீனமும் ஆகும்.என்னதான் புதுமையான,சுவாரஸ்யமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த சிக்கலானக் கதையே பார்வையாளருக்கு குழப்பத்தையும் சலிப்பையும் உண்டுபண்ணுகிறது. 

ஒரு கற்பனைக் கதையை எந்த அளவிற்கு நம்பும்படியாகச் சொல்லி, பார்வையாளனை கேள்வி கேட்க விடாமல் செய்கிறதோ அதில் தான் அதன் வெற்றி இருக்கிறது."என்ன சொல்றாங்கன்னு தெரியல, ஆனா என்னமோ சொல்றாங்க"என்று படம் முடியும் வரை பார்வையாளனைக் கேள்வி கேட்க விடாமல் ,படம் வெற்றி பெறுகிறது.இருப்பினும்,அது எப்படி ஒரு கருவியால் ஒருவரின் கனவிற்குள் செல்ல முடியும்,அப்படிச் சென்றாலும் பல பேர் ஒரே சமயத்தில் ஒருவரின் கனவிற்குள் எப்படிச் செல்ல முடியும்?என்பது போன்ற கேள்விகள் படம் பார்த்து முடிந்தவுடன் எழுவது தவிர்க்க முடியவில்லை. படம் சுவாரசியமாகச் சென்றாலும் இவையனைத்தும் ஒருவனின் சுயநலத்திற்ககாத்தானே என்று தோன்றும் எண்ணம்,படத்திலிருந்து சில சமயம் ஒன்ற விடவில்லை.நாயகனின் மனைவி செண்டிமென்டும் பெரிதாக எடுபடவில்லை. இதுபோன்ற அதிநவீனக் கருவிளெல்லாம் ஒரு சமயம் கண்டுபிடிக்கப் பட்டாலும்,இது போன்ற அபாயகரமானக் காரியங்களைச் செய்யதான் வழிவகுக்குமோ என்ற அச்சம் எழுகிறது.

வழக்கமான ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்சன் படங்களைப் பார்த்து சலித்தவர்களுக்கு,கண்டிப்பாக இது ஒரு மெட்டா அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

Comments

  1. புது முயற்சிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Uggaloda muyarchikku vaazhthukkal senthamil 😍😀

    ReplyDelete
  3. மிகவும் அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் செந்தமிழ்

    ReplyDelete
  4. all the best

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...