Skip to main content

சித்தா-ஒரு பார்வை



படம் வெளியான சமயத்தில் இருந்தே விமர்சனங்கள் நல்லபடியாக இருந்தமையால் ஒரு ஹைப்பில் ஓடிடியில் ரிலீஸ் ஆனதும் படத்தைப் பார்த்தாச்சு.திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்கு திரைப்படக் கலையின் நுணுக்கங்களோ,கதை,திரைக்கதை வடிவமைப்பு போன்றவற்றைப் பற்றிய அறிவெல்லாம் கிடையாது. இத்தனை வருடங்களாக படங்கள் பார்க்கிறோம்,சரியோ தவறோ நமக்குத் தெரிந்ததை எழுதலாம் என்ற துணிவு இப்பொழுதுதான் வந்துள்ளது.அதனால் என் பார்வையில் படம் எப்படி இருந்தது என்று எழுதுகிறேன். விமர்சனங்கள் இருப்பின் கருத்துப்பெட்டியில் தெரிவிக்கலாம்.

கதை என்ன?

பழனி நகராட்சியில் அலுவலராகப் பணியாற்றும் சித்தார்த்(ஈஸ்வரன்) இறந்த தன் அண்ணனின் மகள்,அண்ணியுடன் வசித்து வருகிறார்.தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் நாயகிக்கும்(சக்தி) சித்தார்த்துக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதல்.இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டிருந்ததற்கு ஒரு முன்கதை இருப்பதாகக் காட்டப்படுகிறது.தன் நெருங்கிய நண்பனின் அக்கா மகள்(பொன்னி) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக,அந்தப் பழி சித்தார்த்தின் மீது விழுகிறது.அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் சித்தார்த் எடுக்கும் முடிவுகளுமே கதை.

பிடித்த விஷயங்கள்

1. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து படம் எடுக்கிறேன் என்று சமுத்திரக்கனி மோடுக்கு போகாமல் இருந்தது.

2. இரண்டாம் பாதியில் படம் நாடகத்தனமாகப் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் முடிந்தளவிற்கு தவிர்த்திருப்பது.படத்தில் இருக்கும் நாடகத்தன்மையைப் பற்றி பின்பு பார்ப்போம்.

3. சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான(சுந்தரி) பிணைப்பு.அவர்கள் இருவரின் நடிப்பும் அப்படியே நம் வீட்டில் தன் சித்தப்பாவுடன் சேர்ந்து ஒரு பள்ளிக்குச் செல்லும் சிறுமி செய்யும் சேட்டைகளைப் பார்ப்பது போலவே உள்ளது.படம் பார்த்து முடிக்கும் பொழுது அவர்கள் இருவருமே மனதில் நிறைகின்றனர். 

4. படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் பழனி,அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் மனிதர்களைப் போலவே உலவுகின்றனர்.அதற்கு படத்தின் ஆடை வடிவமைப்பு,மேக்கப்பிற்கு க்ரிடிட்ஸ் கொடுத்தாக வேண்டும்.அதிலும் நாயகி, பக்கத்திலிருக்கும் கடைக்குச் செல்வதற்கு கூட சுடிதாருக்கு ஸ்டெப் ஷாவ்ல் அணிந்துச் செல்லும் ஒரு பெண்ணைப் பார்ப்பது போலவே இருக்கிறார்.

5. படத்தின் இசையைச் சொல்லலாம்.அதுவும் கண்கள் ஏதோ... பாடல் ஆங்காங்கே கொஞ்சம்  இளையராஜா சாயல் அடித்தாலும் நம்மைக் கேட்காமலேயே மனதிற்குள் நுழைந்து விடுகிறது.பின்னணி இசை படத்தின் இரண்டாம் பாதியின் க்ரைம் த்ரில்லர் மோடுக்கு பெரிதும் உதவினாலும் சில இடங்களில்,ஏன் இப்படி வயலினை வைத்து இழுக்கிறார்கள் என்று இருந்தது.

6. நாயகியின் முன்கதையை க்ளைமேக்ஸில் பொருத்தியது. அதுவரை,இந்த ஹீரோயின் கேரக்டர் எதுக்கு தேவையில்லாம மூஞ்ச வெறப்பா வெச்சிக்கிட்டு அங்கையும் இங்கையும் சுத்திக்கிட்டு திரியுது என்று தான் தோன்றியது.அவருக்கு நேர்ந்ததை உணர்ச்சிகரமாக சித்தார்த்திடம் சொல்லுகையில் அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்பது புரிந்து அந்த பாத்திரத்தின் அழுத்தம் கூடுகிறது.

7. தீண்டப்படாத பெண் உடலே இங்கு கிடையாது;ஆனால் எல்லா ஆண்களும் இங்கு உத்தமர்கள் தான். வெட்டுவன்,குத்துவன் என்றால் யாரைக் குத்துவது?தன் குடும்பத்துப் பெண்ணை சிதைத்தவனைக் கொன்று தன் வெறியை தீர்த்துக் கொள்ள பார்க்கிறார்களே தவிர,அந்த சமயத்தில் கூட பெண்களின் தேவை என்ன? அவர்களின் அப்போதைய மனநிலை என்னவாக இருக்கும் என்று ஆண்கள் சிந்திப்பதில்லை என்பதே படத்தின் அடிநாதம்,அதனை நீதிமன்றத்திற்கு வெளியிலும் இறுதிக்காட்சியிலும் நாயகி சித்தார்த்திடம் பேசும் வசனங்களின் மூலம் ஆழமாகப் பதிவு செய்கின்றனர்.

பிடித்தும் பிடிக்காத,லாஜிக் மீறல்கள்

லாஜிக் மீறல்களை எல்லாம் எழுத வேண்டுமா என்றால்,"இந்தப்படம் ஒரு தீவிரமானக் கதையைக் கொண்டுள்ளது" என்கின்ற குரலை எங்கும் கேட்க முடிகிறது.அப்படியானால் அதில் உள்ள பிரச்சனைகளையும் பேசியாக வேண்டுமல்லா?பேசலாம்.

1. தன் நண்பனின் அக்கா மகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் சித்தார்த் தான் என்று அவர் மீது பழி விழுவதிலிருந்து கதை தொடங்குகிறது. அந்தப் பகுதி முழுவதுமே சுத்த நாடகத்தனமாகத் தான் இருந்தது.எதன் அடிப்படையில் சித்தார்த்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்,அந்த வீடியோவை யார் எடுத்தது,எப்படி சரியாக அந்த நேரத்தில் எடுத்தார்கள்,சித்தார்த் தவறு செய்கிறார் என்றால் ஏன் அந்த நேரத்தில் அந்த நபர் தடுக்கவில்லை என்பது போன்ற எந்த கேள்விக்கும் படத்தில் விடையில்லை.

2. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சில சமயங்களில் ஆண்கள் எவ்வாறு முறையாக விசாரிக்கப்படாமல் குற்றம் சுமத்தப்படுகின்றனர்,அதனால் எவ்வாறான மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர் என்பதைக் காட்ட நினைத்ததெல்லாம் சரிதான்.ஆனால் சித்தார்த்திற்கு தன் மீது தவறில்லை எனும் பட்சத்தில் எதற்காக சுந்தரியை தனியாக விட்டுச் சென்றார் என்று சொல்வதில் தயக்கம் என்ன?குட் டச்,பேட் டச் குறித்து தன் அண்ணி சுந்தரியிடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கையில் பாதியில் வந்து கேட்டு கோபித்துச் செல்வது,நாயகி,''ஏன் சுந்தரியை தனியா விட்டுட்டு போன?''என்று கேட்கும் பொழுது கத்துவதெல்லாம் மிகு நாடகத்தனமாக இருந்தன.

3. இரண்டாம் பாதியில் படம் க்ரைம் த்ரில்லர் மோடுக்கு போகும் பொழுது தான் இது குழந்தைகளுக்கு நடக்கும்  பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து எடுத்திருக்கும் விழிப்புணர்வு படமா,இல்லை அதை வைத்து நாயகன் குற்றவாளியைப் பழிவாங்கும் கதையா,இல்லை சீரியல் கில்லர் திரைப்படமா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

4. போலீஸார் வில்லனை புத்திசாலி,அடுத்த குழந்தை கிடைக்கும் வரை தான் இந்த குழந்தையின் உயிருக்கு உத்திரவாதம் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். அவனின் பின்னணி என்ன?இந்தக் குற்றங்களையெல்லாம் செய்வதற்கான காரணம் என்ன?என்பதையெல்லாம் படத்தில் சொல்லவில்லை. முட்டாள்தனமாகத் தான் பல சமயங்களில் நடந்துக் கொள்கிறான். அதனால் அந்த  பாத்திரம் பலவீனமாகத்தான் இருக்கிறது.

6. சித்தார்த்தின் அண்ணி,நண்பனாக வரும் வடிவேலு பாத்திரங்களின் நடிப்பு சுமாராகவே உள்ளது.அதிலும் வடிவேலு பாத்திரம் பல சமயங்களில் சும்மாவே நின்றுக் கொண்டிருக்கிறது.என்னதான் நண்பன் போலீஸாக இருந்தாலும் பேருந்தில் அத்தனைப் பேருக்கு முன்னர் வைத்து கொலை செய்தவனை எப்படி அவ்வளவு எளிதில் காப்பாற்ற முடியும்?படத்தின் உப க்ளைமேக்ஸ் அவர்கள் முன்னர் நிறுவ முயன்ற கருத்திற்கு எதிராகவே உள்ளது.

7. விமர்சனங்களில், படம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை விட அதற்குப் பின்னர் அக்குழந்தையும் அவரது குடும்பத்தினரும் எப்படி அதிலிருந்நு மீள்கின்றனர் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறது என்று சொல்லியிருப்பதைப் பார்த்தேன். அதில் பெரிய கவனம் செலுத்தியதாக ஒன்றும் தெரியவில்லை.வன்கொடுமைக்கு ஆளான பின்னர் தனக்கு நன்கு தெரிந்த ஆண்களின் இயல்பான தொடுதல்கள் கூட அவர்களுக்கு எவ்வாறு இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.முதலில் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையின் குடும்பம் சந்தேகிக்கப்படும் நபரை அத்தனை பேருக்குத் தெரிந்து விசாரிப்பார்களா என்பது தெரியவில்லை.பெரும்பாலான குடும்பங்கள்  அவர்களுக்குள்ளாகவே தான் தீர்வு காண முயல்கின்றனர்.


விமர்சனங்கள் பல இருப்பினும் ஒரு குட்டிக் குழந்தை-சித்தப்பாவின் பிணைப்பில் அதனைப் பொறுத்துக் கொண்டு படத்தை பார்க்க வைத்து விடுகின்றனர்.சோஷியல் மீடியா ஹைப்பிற்குள் விழாமல் இருப்பது சிறப்பு.

Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...