Skip to main content

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் 2018 தேர்தல் நினைவுகளும்

 


ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நாடே பரபரப்பில் இருக்க, 'மிக்ஜாம்' புயல் சென்னையைத் தாக்கி ஒரு நாள் கூச்சலோடு, தமிழக ஊடகங்களை திசை திருப்பிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரும் மாநில தேர்தல்களை அரையிறுதி என்று சொல்லி அரசியல் நோக்கர்கள், ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே கட்டுரைகள் எழுதத் தொடங்குவதும் காட்சி ஊடகங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்து விவாதங்கள் வைத்து கத்தத் தொடங்குவதும் வழக்கம். தினமும் நாளிதழ்களைப் புரட்டும் பொழுதும், செய்தி சேனல்களை மாற்றும் பொழுதும், ''நாட்ல எலக்‌ஷனத் தவர வேற எதுவுமே நடக்கலயா? வேற ஏதாச்ச இருந்தா காட்டுங்கப்பா'' என்று தான் சலிப்பு தட்டும்.

அதனால், இந்த முறை தேர்தல் செய்திகள், கட்டுரைகள், அலசல்கள் என்று எதுவும் பார்க்காமல் நேரடியாக முடிவுகளுக்குப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று முடிந்தவரை தவிர்த்திருக்கிறேன். இது, தேர்தலுக்கு முன்பு வரை எந்த வாய் என்னவெல்லாம் உருட்டியிருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளவும் உதவும் என்று நம்பினேன். ஊடகப் பரபரப்புகளுக்குள் செல்லாமல் இந்த தேர்தலை நோக்கிய என் அனுபவங்களையும் 2018ம் ஆண்டின், அரையிறுதி என்று சொல்லப்பட்ட ஐந்து மாநிலத் தேர்தல் நினைவுகளையும் இக்கட்டுரையில் எழுதுகிறேன். 

ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

2018 சமயத்திலெல்லாம் இந்திய அரசியலின் நகர்வுகளை நோக்குவதில் ஈடுபாடு இருந்ததால் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம், அரையிறுதி போன்ற பதங்களெல்லாம் அப்போதுதான் கேள்விப்பட்டது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்று பல சோதனைகளைக் கடந்து வந்திருந்ததால், மறுபடியும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் என்ன நேருமோ என்று,  இடதுசாரி பத்திரிக்கைகள் கட்டுரைகளாக எழுதிக்குவித்துக் கொண்டிருந்தனர்.  

கல்லூரி விடுதியில் செல்பேசி வைத்துக்கொள்ள அனுமதி இல்லாததாலும் வெளியில் சென்று வர முடியாததாலும் நாளிதழ்களை வாசிப்பதைத் தவிர ஊரில் என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்வது சிரமம். அதிலும் சில பிரதிகளே இருக்கும் என்பதால் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு கடும் போட்டி இருக்கும். விடுதியில் கிடைக்கும் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், கல்லூரி நூலகத்தில் இருக்கும் பருவ இதழ்கள் என்று ஒன்று விடாமல் தேர்தல் தொடர்பான செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன். சொல்லப்போனால் அதை மட்டும் தான் படித்துக் கொண்டிருந்தேன். ஆழமாக ஏதாவது வாசித்திருந்தால் கூட ஒரு சித்தாந்தத்திலோ கொள்கையிலோ பிடிப்பு ஏற்பட்டிருக்குமோ என்னவோ. எதிலும் ஒட்டவில்லை. 

காங்கிரஸ் அலை என்று இந்த தேர்தலில் எழுதியது போலெல்லாம் அன்று பெரிதாக யாரும் எழுதவில்லை. கூட்டணி அமைத்து சரியான வியூகம் அமைத்தால் பா.ஜ.க ஒன்றும் வீழ்த்த முடியாதது அல்ல, அரையிறுதியில் வென்றால் வெற்றி நிச்சயம் என்ற ரீதியில் பா.ஜ.க வின் தவறான கொள்கைகள், சட்டத்திருத்தங்களை விளக்கி நிறைய கட்டுரைகள் வெளியாகின. தேர்தலுக்கு பல நாட்களுக்கு முன்பாகவே பல ஆழமான கட்டுரைகள் இந்து தமிழ் திசையில் வெளியாகின. அந்த சமயத்தில்,  நடுநிலைமை என்று சொல்லப்படுகிற சில இதழ்களில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, மக்களின் மனதைப் பிரதிபலிப்பவை என்றெல்லாம் நம்பிக் கொண்டிருந்தேன். 

காங்கிரஸ், ராகுல் காந்தியின் தலைமையின் மீது அதிருப்தி, பல மாநிலங்களில் உட்கட்சி பூசல், கூட்டணி கட்சிகளுடன் முரண்படுதல் என்று பலவீனமாகத்தான் இருந்தது. பா.ஜ.க அரசின் மீதான அதிருப்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்று விடும் என்று ஒரு நிச்சயமும் இல்லை. தேர்தல் முடிவுகள் நாளன்று, முடிவை  அடுத்த நாள் செய்தித்தாளில் தெரிந்துக் கொள்ளும் வரை பொறுமையில்லாமல் அவசரமாக நூலகத்திற்குச் சென்று கணினியில் முடிவுகளைப் பார்த்தேன். ஐந்து மாநிலங்களில் இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை, ஒரு மாநிலத்தில் கூட்டணி ஆட்சி. பா.ஜ.க ஒரு மாநிலத்தில் கூட வெல்லவில்லை. காங்கிரஸின் வெற்றியைப் பார்த்து மக்கள் தெளிவாக இருக்கின்றனர்,  நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ,க வீழ்ந்துவிடும் அது இது என்று ஊடகங்கள் ஏகத்திற்கும் கொண்டாடின.
மக்களின் முடிவு என்றுமே வினோதமானதுதான். ஆம், வினோதமாகத்தான் வரவிருந்த நாடாளுமன்ற தேர்தலிலும் முடிவளித்தனர். 

அரையிறுதி...அரையிறுதி...

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 'பப்பூ'வாக இருந்த ராகுல் காந்தியை ஹீரோவாக மாற்ற, பிரியங்கா காந்தியை இந்திராவின் வாரிசாக விளம்பரப்படுத்தி பல காமெடிகள் நடந்தன. தோழிகள், இந்த முறை யார் வருவார்கள் என்று கேட்ட பொழுது, மோடி ஒன்னுமே இல்லாத விஷயத்த ஊதி பெருசு பண்ணி ஜனங்ககிட்ட சொல்லி அவங்க மனசுல இடம் புடிச்சிடுறாரு. ராகுல் காந்திக்கு, நேரடியா ஜனங்க பாதிச்ச விஷயத்தக் கூட அவங்க கிட்ட வீரியமா சொல்லத் தெரியல, கூட்டணி விஷயத்துலயும் ரொம்ப சொதப்புராங்க. பா.ஜ.க தான் வருமோனு தோணுது என்று சொன்னேன். சரியான திட்டு விழுந்தது.  தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் அமோகமாக வென்றது. அரையிறுதி வெற்றிக் கணிப்பெல்லாம் சுக்குநூறானது. சாத்தான் காலில் சலங்கை கட்டியாயிற்று. 

2023 க்கு வந்தோமானால், இந்த ஐந்து வருடங்களில் காட்சிகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. நானும் நிறைய மாறியிருக்கிறேன். வெகுஜன ஊடகங்களின் பின்னே ஆட்டுக்குட்டியைப் போலச் சென்று வெட்டுவாங்குவதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று கொஞ்சம் கற்றிருக்கிறேன். சரியோ தவறோ நமக்கென்று ஒரு பார்வை இருக்க வேண்டும்; அடுத்தவரின் வாத்தியத்திற்கு நாம் ஆட கூடாதென்று முடிந்தளவிற்கு ஊடகங்களில் தேர்தல் குறித்த செய்திகளைத் தவிர்த்தேன். 

பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. நம்மூரில் தேர்தல் நடைபெறாததால் தேர்தல் நடைபெறுவதற்கான சுவடே தெரியவில்லை. இடையில் சந்திர சேகர ராவின் தேர்தல் வாக்குறுதியை மட்டும் பார்த்து வாய் விட்டு சிரித்தேன். கடந்த முறை பக்கம் பக்கமாக தேர்தல் கட்டுரைகளை வெளியிட்ட இந்து தமிழ் திசை, தேர்தல் நாளன்று மட்டும் அரைப்பக்க கட்டுரையுடன் நின்றுக் கொண்டது. போதாக்குறைக்கு, தினகரனில் வரும் பீட்டர் மாமா போன்ற அபத்தங்களை வேறு வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது. 

கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே எதிர்கட்சிகள் இணைந்து இண்டியா(!?)வாக இணைந்தார்கள். ஆரம்பம் முதலே குழப்பம் தான். காங்ரஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றே நினைத்தேன்.  அரையிறுதி அரையிறுதியென்றே இம்முறையும் எல்லா வாய்களும் உரைத்தன. கடந்த முறை அரையிறுதியின் வெற்றியைப் பார்த்து மகிழ்ந்த யாவருக்கும் இந்த அரையிறுதியின் வெற்றியைப் பார்த்தால் குளிர் ஜுரம் தான் வரும். இரண்டையும் பார்க்கும் பொழுது, அரையிறுதியும் கிடையாது, காலிறுதியும் கிடையாது. மக்களின் முடிவு என்றுமே வினோதமானதுதான். வினோதத்திற்காகக் காத்திருப்போம். 

Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...