இனிமே நெக்ஸ்ட் பட்டன அழுத்த முடியாது, ப்ளேபேக் ஆப்ஷன் கிடையாது, ப்ளேலிஸ்ட ஷஃபுள் பண்ண முடியாது, அது பாட்ற ஆடர்ல தான் பாட்டு கேட்க முடியும். இப்படியெல்லாம் ஒரு நாள் நம் திறன்பேசியின் திரையில் தோன்றும் போது தான், ஒரு இசை செயலிக்கு எவ்வளவு அடிமையாகிக் கிடக்கிறோம் என்றே உணரத் தொடங்கினோம்.
ஸ்பாடிஃபைக்கு முன்னால் பாடல்களை எப்படி கேட்டோம்?
90'ஸ் கிட்டுகளைக் கேட்டால் டேப்ரெக்கார்டர், டிவிடி ப்ளேயர் என்று ஆரம்பித்து ஏகப்பட்ட சாதனங்களை லிஸ்ட் போடுவார்கள் என்பதால் டுகே கிட்டுகளிடம் நேராகச் சென்று விடலாம். பல டுகே கிட்டுகளுக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்ட அனுபவம் தொலைக்காட்சியிலேயே இருந்திருக்கும். மெமரி கார்டுகள் போட்டுக்கொள்ளும் வசதியுள்ள செல்பேசிகளின் வருகைக்குப் பிறகு இளையராஜா ஹிட்ஸ், ரஹ்மான் ஹிட்ஸ் என்று மொத்தமாக ஏற்றி பாடல்களைக் கேட்கத் தொடங்கினோம்.செல்பேசியிலேயே பாடல்களைக் கேட்கும் வசதி இருந்ததால் பாடல்களைக் கேட்பதற்கென்று தனி சாதனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. டிவிடிகளும் பென்ட்ரைவாகச் சுருங்கின.
திறன்பேசிகளின் வருகைக்குப் பிறகு திருட்டுத்தனமாக பாடல்களை வெளியிடும் இணையதளங்களில் இருந்து பாடல்களைத் தறவிறக்கம் செய்து வி.ல்.சி மீடியா ப்ளேயரில் பாடல்கள் கேட்க ஆரம்பித்தோம். அதுவரை ஏதோவொரு வகையில் பணம் செலுத்தி வாங்கி, அந்த பாடல்களுக்கு உரிமையாளராக இருந்த நாம், இலவசமாகக் கிடைக்கிறது என்று பாடல்களுக்கான உரிமையை இழக்கத் தொடங்கியது அந்த புள்ளியில் தான். பின்னர், இணைய சேவையின் விரிவாக்கத்தினால் அன்லிமிட்டட் டேட்டா கிடைக்கவே பாடல்களை இணையத்திலும் செயலிகளிலும் கேட்கத் தொடங்கினோம். அதாவது, பாடல்களின் உரிமை நம் கையிலும் இல்லை, நமது ஸ்டோரேஜிலும் இல்லை. இணையத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவரிடமிருந்து பாடல்களின் சேவையைப் பெறுகிறோம்.
ஸ்பாடிஃபையின் வருகை
இந்த சமயத்தில் தான், எந்த நேரத்திலும், எந்த மொழியிலேனும், எத்தனைப் பாடல்களேனும், எத்தனை முறையேனும் இலவசமாகக் கேட்கலாம் என்று ஸ்பாடிஃபை வந்தது.
எந்த மொழியிலும் பாடல்கள் கேட்கலாம், நமக்குப் பிடித்தமான இசைக் கலைஞர்கள் அத்தனைப் பேரின் பாடல்களும் ஒரே இடத்தில் இருக்கும், விருப்பமான ப்ளேலிஸ்டை உருவாக்கலாம், அதுவும் இதனையெல்லாம் இலவசமாகவே பண்ணலாம் என்பது பலப் பேரைக் கவர்ந்தது. "நெட்ல திருட்டுத்தனமா டவுன்லோட் பண்றதுக்கு இதுல ஃப்ரீயாவே கேட்கலாம்" என சிந்திக்க வைத்து, நம் குற்றவுணர்ச்சியையும் போக்கிக் கொள்ள உதவியது என்றே சொல்லலாம். இடையிடையே வரும் விளம்பரங்களைத் தவிர பெரிய குறைகள் ஒன்றும் அப்பொழுது அதில் இல்லை.
ஸ்பாடிஃபையில் என் அனுபவம்
ஸ்பாடிஃபை போன்ற செயலிகளில் என்னை எரிச்சலூட்டுவது அதன் பர்சனலைசேஷன் தான். நாம் எந்த நேரத்தில் எந்த மாதிரியான பாடல்களைக் கேட்கிறோம் என்று பகுத்து உனக்கு ஏற்றார்போல் நான் பாடல்களைத் தருகிறேன் என்று அது தருவது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
யோசித்துப் பார்த்தால், கேட்ட பாடல்களையேதான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஏதோவொரு பாடல் கேட்க உள்ளே சென்று அதன் ரெக்கமண்டட் ஃபார் யூ, மேட் ஃபார் யூ சுழலில் சிக்கி, பாடல்களைக் கேட்க விருப்பமில்லையேனும் நீண்ட நேரம் அதிலேயே சிக்கி விடுகிறேன். அடியே சக்கர கட்டி...நெஞ்சுக்குள்ள ஸ்டிக்கர ஒட்டி... என்று கால் மணி நேரத்திற்கொருமுறை அது கூவும் போதெல்லாம் ஆத்திரமாக வரும். என் இசை ரசனையே சொல்லப் போனால் அதற்கேற்றார் போல் மாறியிருக்கிறது என்று சொல்லலாம்.
நெக்ஸ்ட் பட்டனை வைத்து தான் என் வண்டியே ஓடிக்கொண்டிருந்தது. நான் ஸ்பாடிஃபை லைட் வைத்திருந்ததால் ஸ்பாடிஃபையின் புதிய விதிமுறைகள் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் எனக்கு நடைமுறைக்கு வந்தது. ஒரு மணி நேரத்தில் ஆறு முறை தான் நெக்ஸ்ட பட்டன் அழுத்த முடியும், ப்ளேபேக் ஆப்ஷன் கிடையாது, ப்ளேலிஸ்டை ஷஃபுள் செய்ய முடியாது. மொத்தத்தில் அது பாட்டுக்கு ஒரு வரிசையில் பாடும், நாம் அதைக் கேட்கணும். அதற்கு நாம் சன் மியூசிக்கிலேயே பாடல்கள் கேட்டு விடலாமே. ஒரு இசைச் செயலி எதற்கு?
இசை நிறுவனங்கள், செயலிகளின் மறுமுகம்
"ஓசில பாட்டுக் கேக்குறோம் அப்ப அவன் சொல்றதக் கேட்டு தான ஆகனும்;வேணும்னா சப்ஸ்கிரிப்ஷன் கட்டு, அப்படி இல்லையா வேற ஏதாச்ச ஆப்ல கேளு" என்று சொல்லி கடந்துச் செல்லும் விஷயம் கிடையாது இது. நம் இசையின் உரிமை, ரசனை சார்ந்த பிரச்சனை இது.
மாதம் 149 ரூபாய் சந்தா செலுத்தினாலும் பாடல்கள் முழுமையாகச் சொந்தமாகி விடாது. டவுன்லோட் செய்த பாடல்களை அந்த செயலியைத் தவிற வேறெதிலும் கேட்க இயலாது. எனக்கு, அந்தச் செயலி பிடிக்கவில்லையென்று அதை நீக்கினாலோ வேறு ஏதாவது செயலிக்கு மாறினாலோ அந்தப் பாடல்களின் கதி அதோ கதி தான். டவுன்லோட் செய்த பாடல்களில் ஓர் இம்மியைக் கூடக் கத்தரித்து வேறு எங்கும் பயன்படுத்தவோ டிவிடியைப் போல் என் நண்பர்கள் கேட்டுக் கொள்ளவோ நான் அனுப்ப முடியாது. இலவசமாகத் தருகிறேன் என்று சொல்லி ஏகப்பட்ட விளம்பரங்களைப் போடுவது மட்டுமல்லாமல் நமது பர்சனலைஸ்டு டேட்டாவை வேறு எடுத்து மற்ற நிறுவனங்களுக்கு விற்கிறது இச்செயலிகள்.
வணிகப் பயன்பாடு தவிர்த்து பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவோ தம் திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்திலோ பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. பணம் செலுத்தச் சொல்லி, அத்தனை விதிகளுக்குட்படுத்தும் செயலிகளும் இசை நிறுவனங்களும் இசைக் கலைஞர்களுக்காவது நன்மை பயக்கிறதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஸ்பாடிஃபை, இசைக் கலைஞர்களுக்கு கொடுக்கும் தொகையினைப் பற்றிய புலம்பல்களை ஸ்பாடிஃபை பாட்காஸ்டிலேயே கேட்கலாம். காப்புரிமையில், ஃபேர் யூஸின் பயன்பாடு தற்போது கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. யூடியூபில், வெறும் ஐந்து நொடிகள் ஒரு பாடலைப் பாடியதற்கெல்லாம் இசை நிறுவனங்கள் காப்புரிமை கோரி அவர்களின் வருமானத்தை பறித்திருட்பது, நம் குரல்வலையை நசுக்கும் செயலாகும். சாலையோரத்தில் வயிற்றுப்பசிக்காகப் பாடி யாசகம் பெறுபவர்களின் தட்டிலிருந்து திருடுவதைப் போன்றது அது.
என்னதான் தீர்வு?
ஒரு இசை செயலி நான் போட்றத நீ கேளு என்கிறதென்றால், ஒரு இசை நிறுவனம் நீ வாயில பாட்ற பாட்டோட உரிம என்கிட்ட இருக்கு, என்று இவ்வளவு தைரியமாகச் சொல்கிறதென்றால், நாம் அந்த செயலிகளில் மூழ்கியிருப்பதும் இசைக்கான நுகர்வோரின் உரிமை நம்மிடம் இல்லாததும் தான் காரணம். இதற்கு தீர்வென்று தீர்க்கமாக எதையும் என்னால் சொல்ல முடியாவிட்டாலும் மாற்று யோசனை என்று சிலவற்றைக் கூறுகிறேன்.
சப்ஸ்கிரிப்ஷனுக்கென்றே மாதாமாதம் தனியாக பட்ஜெட்டில் பணம் ஒதுக்கும் தனவந்தர்கள், SPOTIFY MOD APK வைத்திருப்பவர்கள் இந்தப் பக்கம் வர வேண்டாம்.
1. பேன்ட்கேம்ப்(Bandcamp) போன்ற மாற்று செயலிகளை உபயோகித்துப் பார்க்கலாம். அதில் குறிப்பிட்ட முறை மட்டுமே இலவசமாக ஒரு பாடலைக் கேட்க முடியும். அதற்கு மேல், அந்தப் பாடலை பணம் கொடுத்து வாங்கி தான் கேட்க முடியும். அந்தப் பாடலின் உரிமமும் நமக்குக் கிடைக்கும். இதில் நேரடியாகவே இசைக் கலைஞர்களுக்கு பணம் சென்று விடும். செயலியும் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ளும். சுயாதீனக் கலைஞர்களே இப்பொழுது பெரும்பாலும் இதில் இருக்கின்றனர். நிறைய பேர் உள்ளே வரும் பொழுது நமக்கு பிடித்த பிரபலமான கலைஞர்கள் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது.
2. பின்குறிப்பு : பைரசியை ஆதரிக்கும் நோக்கத்தில் கீழ்வரும் யோசனையைச் சொல்லவில்லை. இசைக்கு என்று தனியாகப் பணம் ஒதுக்க முடியாத இசைப் பிரியர்கள் இதனை முயற்சிக்கலாம்.
இசை செயலிகளில் பாடல்களைக் கேட்கத் தொடங்கிய பின்னர், எந்தப் படத்திலிருந்து எந்த இசையமைப்பாளரின் பாடல்களைக் கேட்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கிறோம். ஏதோவொரு ப்ளேலிஸ்டை போட்டு ஏதோவொரு பாடலைக் கேட்கத் தொடங்கி விட்டோம். இணையதளத்தில் பாடல்களை பதிவிறக்கம் செய்வோர், ஓய்வு நேரத்தில் ஒரு இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால் நமக்குப் பிடித்தமான பாடல்கள் மொத்தத்தையும் பதிவிறக்கம் செய்து தொகுத்து விடலாம்.
முதலில் நீங்கள் அதிகமாக கேட்கும் பாடல்களின் இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்துங்கள். இணையத்தில், உதாரணமாக, ஹாரிஸ் ஹிட்ஸ் டவுன்லோடு என்று போட்டால் அவரின் படங்கள் அனைத்தும் வரும். அதற்குள் சென்று நமக்குப் பிடித்த பாடல்களை ஒவ்வொன்றாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அந்த வரிசையில் இளையராஜா, ரஹ்மானை விட்டுவிடுவது நல்லது. மிகவும் பிடித்தமான பாடல்களை மட்டும் அதன் பெயரைப் போட்டு பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதனைக் கேட்பதற்கு மலைப்பாக இருக்கலாம். ஆனால் செய்வது சுலபம். ஏனென்றால், எல்லா படத்திலும் எல்லா பாடல்களும் கேட்கப் போவதில்லை. நமக்குப் பிடித்த பாடல்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் சிரத்தையெடுத்துத் தேடினால் நம் ரசனைக்கேற்ப வி.ல்.ஸி மீடியா ப்ளேயரில் ப்ளேலிஸ்டுகளை உருவாக்கிவிடலாம். இதற்கு சோம்பேறித்தனம் பட்டு தான் இசை செயலிக்குச் சென்று ஏதோவொரு பாடலைக் கேட்கத் தொடங்கினோம்.
3. அயல்மொழி இசைக் கேட்பவர்கள், ஆன்லைனில் நல்ல இசை அனுபவம் வேண்டுமென்று நினைப்பவர்கள், கூகுலுக்கு மாற்று வேண்டுமென்று நினைப்பவர்கள், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் செயலிகளான விங்க் மியூசிக், ஜியோ சாவ்ன் போன்றவற்றை முயற்சித்துப் பார்க்கலாம். எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன். உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள்.
இதுலா ஒரு விஷயம்னு இவ்வளவு நேரம் எழுதிட்டுருக்கியா என்று கேட்பீர்களானால், உங்கள் வீட்டில் நீங்கள் முணுமுணுக்கும் பாடலுக்கும் உரிமைக் கோர ஒருவர் வரும் நாள் வந்தாலும் வரும்! நமக்குப் பிடித்த இசையைக் கேட்பதற்குதான் தொழில்நுட்பம் உதவ வேண்டுமே தவிர, அது கொடுப்பதை நாம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பாடல்களைக் கேட்பதை நாம் விட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன.

Nice
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete