Skip to main content

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

 






முதல் முறை பெருநகரத்தில் வசிக்க நேர்ந்த பொழுது அன்பினால் சில இன்னல்களுக்கு ஆளானேன். நீ என்ன வேணாலும் செய்யலாம், எப்படி வேணாலும் இருக்கலாம் நான் உன் விஷயத்துல தலையிட மாட்டேன் . நீயும் என் விஷயத்தில் தலையிடக் கூடாது. நான் பிரியப்படும் நேரத்தில் நீ என்னுடன் இருக்க வேண்டும். ஆனால் நீ பிரியப்படும் நேரத்தில்  நான் உன்னுடன் இல்லை என்றால்  கோபித்துக் கொள்ளக் கூடாது . அப்படி செய்தால் அது அன்பு அல்ல. என் மனதை நீ புரிந்துக் கொள்ள வேண்டும் . ஆனால் நான் அப்படி இல்லை என்றால் கோபித்துக் கொள்ள கூடாது .அப்படி செய்தால் அது அன்பு அல்ல. நான் உன்னிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். ஆனால் நீ உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது.  உரிமைக்  கோரினால் அது அன்பு அல்ல . "வாய்ஸ் ரீட் பண்ணாத..." "ஃபேஸ் ரீட் பண்ணாத..." இப்படி அறையில் தங்குபவரிலிருந்து வகுப்பில் உடன் படிப்பவர் வரை  சொல்லித் திரியும் ஐம்பது பேரையாவது கடந்து வந்திருப்பேன்.

அவர்களிடம் அன்பாக எவ்வாறு இருப்பதென்று என்னால் புரிந்துக் கொள்ளவே இயலவில்லை. கத்தி மேல் நடப்பது போல் எல்லா சமயங்களிலும் அவர்களின் நிலையைப் புரிந்து நடக்க வேண்டும். மறந்து ஏதோவொரு சமயத்தில் நம் சௌகர்யத்திற்கு நடந்தால் ,அதைப் புரிந்துக் கொள்ளாமல் அதையே ஒரு காரணமாக வைத்து உறவையே முறித்துக் கொள்வது.இந்த கோஷ்டியெல்லாம் நான் டாக் லவ்வர், கேட் லவ்வர், அவைகள் தான் தூய அன்பைச் செலுத்துகின்றன, மனிதர்களெல்லாம் சுயநலமிக்கவர்கள் என்று சொல்லித் திரிகிறது.

எப்படிதான் ஒருவரிடம் பழகுவது என்று சிந்தித்து களைத்து விட்டேன். நான் பல சமயங்களில் எதுதான் அன்பு என்று குழம்பியிருக்கிறேன். நாம் அன்பு என்று நினைத்து செய்யும் செயல் இன்னொருவருக்கு தொல்லையாக இருக்கிறது. பிறர் அன்பு என்று செய்யும் செயல் நமக்கு தொல்லையாக இருக்கிறது. எது அன்பு என்ற கேள்விக்கான பதிலை பிறரிடம் தேடி அதில் தோல்வியே அடைந்திருக்கிறேன். அன்பு குறித்து ஒவ்வொருவரும் ஒரு விளக்கம், வரைமுறை வைத்துள்ளனர். இறுதியில் அன்புக்கான விளக்கத்தை யாராலும் அருதியிட்டுக் கூற முடியாது. நாமே தான் அனுபவரீதியாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன். இந்த நூலிலும் அதற்கான விடையைக் காண முற்பட்டேன். இதிலும் எனக்கு தோல்வியே.

ஒவ்வொரு ஜீவனும் அன்பிற்காகத்தான் ஏங்குகிறது. அன்பு பெரும்பாலும் நிபந்தனையுடன் தான் வருகிறது. அது உரிமையையும் கோறுகிறது. நிபந்தனையற்ற அன்பு என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. அது சாத்தியப்படும் இடங்கள் பெரும்பாலும் எதிர்வினை ஆற்றாத,ஆற்றவியலாத இடங்களாகவே இருக்கிறது.தன் எழுத்தைப் படிக்காதவர்களிடம் தான் பழகுவதில்லை என்ற பெருமாளின் நிபந்தனையால் புவனேஸ்வரியிடமான அன்பில் விரிசல் விழுகிறது. ஒவ்வொருவரும் தம்மையே இன்னொருவரிடம் தேடுகின்றனர்.  தான் செய்ய நினைத்து, தன்னால் செய்ய முடியாத சாகசங்களைச் செய்பவர்களால் ஈர்க்கப்படுகின்றனர். 

அந்த தேடலின் முயற்சியில் அலைந்து திரிந்து  அப்படி ஒருவர் கிடையவே கிடையாது என்று உணர்கின்றனர். எங்கு உண்மையான அன்பு கிடைக்கும் என்று ஏங்கி, பல பேரிடத்தில் அன்பு வைத்து ,அவர்களிடன் ஏமாற்றம் அடைந்து ஒரு மாதிரியாக அடித்து துவைத்துப் போட்ட நிலையிலே பலர் உள்ளனர். அதிசயமாக அப்படி ஒர் இடத்தில் அந்த அன்பு கிடைத்தாலும் அவர் ஒரு பரிசோதனை எலியாகி விடுகிறார்.தன் கடந்த கால அனுபவங்களால், இந்த சூழ்நிலைக்கு எப்படி வினையாற்றுகிறார் என்று சோதிக்கத் தொடங்கி விடுகின்றனர். அவரிடம் காயப்படும்படியாக எந்த எதிர்வினையும் வரவில்லை என்றால், இதுதான் சாக்கு என்று மனம் துள்ளிக் குதித்து அவரிடம் அன்பு மழைப் பொழிந்து, ஒரு கட்டத்தில் அவரை வதைக்க ஆரம்பித்துவிடுகின்றனர். வைதேகி பெருமாளைச் சந்திப்பதற்கு முன் அப்படி ஒரு அன்பை அனுபவிக்காமல் இருந்திருக்கலாம். பெருமாளும் குடும்பம் என்ற அமைப்பில் சிக்கி அவளின் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்.

நாவலில் பல இடங்களில் பெருமாள் அன்பு குறித்து தன்னுடைய புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கையில் சிரிப்பினை அடக்க முடியவில்லை. ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்பு குறித்து இப்படி ஒரு நாவல் இருக்கும். ப்ளாகில் இருந்த சில பதிவுகள் இதிலும் இடம்பெற்றாலும் சுவாரசியம் குறையாமல் புதிதாகப் படிப்பது போலவே உள்ளன. அன்பு என்ற பெயரில் முதியவர்களிடம் உடல்நலம் விசாரிப்பது குறித்து சாரு ப்ளாகில் எழுதியிருந்த பதிவு,  அவர்களின் நிலையைப் புரிந்துக் கொள்ள உதவியது. அதனையும் நாவலில் சேர்த்திருக்கலாம். அன்பு என்று நாவலுக்குத் தலைப்பு வைத்து, இதுதான் அன்பு என்று பாடம் எடுக்காமல், அன்பு என்ற பெயரில் தான் பிறர் மீதும் பிறர் தம் மீதும் நடத்தும் வன்முறைகளை, அது அன்பு அல்ல, வன்முறை தான் என்று உணரச் செய்கிறது நாவல். 


நூல்               :  அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு 
ஆசிரியர்     : சாரு நிவேதிதா
வெளியீடு   : எழுத்து பிரசுரம், ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க்
விலை          : 340

நூலை வாங்க:

Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...