கல்லூரி முடிக்கும் வரை தனியாகப் பேருந்து கூட ஏறியதில்லை. பக்கத்து தெருவிற்குச் செல்வதனால் கூட உடன் யாரேனும் துணைக்கு வருவர். முதல் முறை தனியாகப் பயணம் செய்ய ஆசை வந்தது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.சி தேர்விற்கான தேர்வு மையம் கோவையில் அமைந்தது. வீட்டில் அனுமதி வாங்கச் சரியானக் காரணமாக அமைந்தது. ரயிலில் பயணம் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கு முன்னர் ரயிலில் பயணித்ததில்லை. பயணச்சீட்டு முன்பதிவிலிருந்து எங்கு நிற்க வேண்டும், எங்கே இறங்க வேண்டும் என்பது வரை தோழிதான் பார்த்துக் கொண்டாள். தனியாகப் பயணித்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்துடன் ஆரம்பித்தது, என்னுடைய சேலம் - கோவை, 3 மணி நேர ரயில் பயணம் .
எதையாவது அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கி, திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்குச் செல்லும் குடும்பத்தினர், வந்து நிற்கும் ரயில்களில் , ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும் வட மாநிலத்தவர்கள், 'ச்சாய்', 'சம்சே' என்று கூவிக்கொண்டே கூட்டத்தில் லாவகமாக உள்ளே சென்று வெளியே வரும் விற்பனையாளர்கள், தினசரி பயணம் மேற்கொள்ளும் அலுவலர்கள் , ரீல்ஸ் பண்ணிக் கொண்டிருக்கும் புள்ளிங்கோக்கள், கிழிந்த உடையுடன் யாசகம் செய்பவர்கள், இதனூடே குறுக்கம் நெடுக்குமாகச் சென்றுக் கொண்டிருக்கும் ரயில்வே போலீஸார்கள் எனக் கலவையான மனிதர்களால் நிறைந்திருந்தது அந்த ரயில் நிலையம். ரயில்கள் ஒவ்வொன்றாய் வருவதையும் போவதையும், சுற்றியுள்ள சூழலையும் எப்படிப் போய் சேருவோமோ என்ற சிறு கலக்கத்துடன் எனக்கான ஹிம்சாகர் விரைவு ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். ஜம்முவின் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவில் தொடங்கி, பல மாநிலங்களினூடகச் சென்று கோவை வழியாகக் கேரளாவிற்குள் நுழைந்து கன்னியாகுமரியைச் சென்றடைகிறது. 3787 கி.மீ , 72 மணிநேரப் பயணம்.
ரயில் வந்ததும் என் இருக்கை இருக்கும் பெட்டியில் ஏறிக் கொண்டேன். முன்பதிவு செய்ததில் எனக்குக் கிடைத்தது, ஸ்லீப்பர் கிளாஸ் அப்பர் பெர்த். உள்ளே சென்றால், சுற்றிலும் கருப்புச் சட்டை, வேட்டி, துண்டு, இடிமுடி ,காய்ந்த சம்பங்கி மாலை வாசத்துடன் பாதிக்கு மேல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள். மீதி வடமாநிலத்தவர்கள். முழுக்க முழுக்க ஆண்கள். அந்தப் பெட்டியில் ஒரு பெண் கூட இல்லை. ஒவ்வொரு பெர்த்திலும் நான்கைந்து பேர் நெருக்கி அமர்ந்திருந்தனர். யாரையாவது ஏதாவது கேட்கலாம் என்றால், 'ஏன்டி', 'இதே' என்கிறார்கள். தமிழ் தெரிந்தவர் ஒருவர் கூட இல்லை. எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. சரியான ரயிலில், சரியானப் பெட்டியில் தான் ஏறினோமா, இது கோவைக்கு தான் செல்கிறதா என எண்ணங்கள் சுற்றிச்சுற்றி அடிக்க, பிபி 70-க்கு கீழ் சென்றது போல் ஒரு கணம் தலைச்சுற்றி வியர்வை ஊற்றிவிட்டது. பின்னர் சரியான ரயிலில் தான் ஏறியுள்ளோம் என உறுதிபடுத்திக் கொண்டு,என் இருக்கையைக் கண்டுபிடித்துச் சென்றால், அங்கு யாரோ ஒருவர் படுத்திருந்தார். பார்ப்பதற்கு வடமாநிலத் தொழிலாளி போல் இருந்தார். அங்கு நடந்த காட்சிகளெல்லாம்,"வட மாநிலத் தொழிலாளர்கள் ரயிலில் அராஜகம்" என்ற தலைப்புடன் வரும் செய்திகள் நினைவுப் படுத்தின. அவரிடம் நான் முன்பதிவு செய்திருக்கிறேன் என்று சொன்னால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அருகிலிருப்பவருக்கு நான் சொன்னது புரிந்து, படுத்திருந்தவரிடம் இந்தியில் ஏதோ சொல்லிப் புரிய வைத்தார். உடனே அவரும் எழுந்துக் கொண்டார். என்னிடம்' ஸாரி 'என்று சொல்லிவிட்டுச் சென்றார். இருவரும் வட மாநிலத்தவர்கள். இருக்கையில் ஏறி அமர்ந்த பின்னர் என் முகத்தில் வீசிய மின்விசிறிக் காற்று, என்னைச் சற்று ஆசுவாசப்படுத்தியது. மொபைலில் ஏதாவது வீடியோ, பாடல்கள் பார்க்கலாம் என்றால் , வைஃபையும் கிடைக்கவில்லை. பெட்டியில் நிறைய பேர் இருந்தாலும் ஒரு வித அமைதி இருந்தது.
அந்த ரயில், பல மாநிலங்களின் கலாச்சாரங்களைத் தாங்கிக் கொண்டிருந்தது. எனக்கு அங்கிருப்பவர்கள் பேசுவது அனைத்தும் இந்தி போலவே கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து எதிரில் இருந்தவரின் மொபைலில் பிரின்ஸ் திரைப்படம் தெலுங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் பேசுவதைச் சற்று உற்றுக் கேட்டால், அது தெலுங்கு. எனக்கிருந்த பதற்றத்தில் அவர்கள் பேசுவது இந்தியா, தெலுங்கா என்று கூடச் சரியாகக் காதில் விழுந்திருக்கவில்லை. இடையே, ஈரோடு, திருப்பூரில் சில பெண்கள் தனியாக ஏறுவதையும் இறங்குவதையும் கண்டேன். அதில் பலரும் என்னை விட வயதில் சிறியவராக இருந்திருப்பர்.அவர்கள் முகத்தில் சிறு கலக்கத்தைக் கூடக் காண இயலவில்லை. சின்னச் சின்ன பொருட்களை விற்கும் சிறுவர்கள், சிற்றுண்டி, உணவுப் பொட்டலங்கள் விற்கும் விற்பனையாளர்கள் எனச் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, ஒர் செயலியில் கோவை வந்துவிட்டதா என ஐந்து நிமிடத்திற்கொருமுறை பார்த்துக் கொண்டிருந்ததில் மூன்று மணி நேரப்பயணம் முடிவிற்கு வந்துவிட்டது.
தேர்வு எழுதிவிட்டு வீடு வந்து சேர்ந்ததும், எதையோ சாதித்தது போல் இருந்தது. அன்று, ரயிலில் நடந்ததெல்லாம் நான் சற்றும் எதிர்பாராதவை. அதுவரை நான் கண்டதெல்லாம் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஜெஸ்ஸி, கார்த்திக் சந்தித்துக் கொள்ளும் ரயில், ஓகே கண்மணியில் ஆதி, தாரா சந்தித்துக் கொள்ளும் ரயில்களே. யதார்த்த உலகிற்கும் திரைப்படங்களில், செய்திகளில் நாம் காணும் உலகிற்கும் எவ்வளவு வித்தியாசங்கள். அவையெல்லாம் ஒரு கனவுலகை நம்முள் படைத்து விடுகின்றன. சில சமயம், நம் வாழ்வில் காணாத மனிதர்களின் மீதுக் கூட வெறுப்பை உண்டாக்கி விடுகின்றன. யதார்த்தத்திற்கும் கனவுலகிற்குமான இடைவேளையைப் பயணங்கள் குறைக்கின்றன. தனியாக மேற்கொள்ளும் பயணங்கள், நமக்கொருப் புதிய உலகத்தைக் காண்பிக்கின்றன. அந்த ரயில் பயணத்திற்கு பின்னர் சிலமுறை ரயிலில் பயணித்திருந்தாலும், தனியாகப் பயணிக்கத் துணிச்சலையும் தன்னம்பிக்கையுயும் வரவழைத்த என் முதல் ரயில் பயணம் மறக்க முடியாதது.
24.05.2023
.jpg)
Comments
Post a Comment