Skip to main content

மறுபடியும்





இன்று காலை, ஒரு திரைப்படம் பார்த்தேன். "மறுபடியும்". ஏனோ இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. 2024ல் இப்படம் வெளியாகியிருந்தால், வரவேற்பை பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. இன்றைய தேதிக்கு அடித்து தேய்த்த பழைய கதைதான். திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்கும் கணவன். மனைவி என்ன செய்கிறாள்? தொலைக்காட்சி தொடர்களில் இந்தக் கதைதான் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றைய தேதியிலும் பல கமர்ஷியல் படங்களிலும் கூட இதே கதை பலவாறு கையாளப்பட்டிருக்கும். திருமணத்தைத் தாண்டிய ஆண்-பெண் உறவை "சதிலீலாவதி"யில் நகைச்சுவையாகக் கையாண்ட பாலுமகேந்திரா, "மறுபடியும்"ல் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாண்டுள்ளார். 

1982 ம் ஆண்டு இந்தியில் வெளியான "அர்த்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான "மறுபடியும்" 1993 ல் வெளியாகியது. படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை யார்? அந்த இயக்குநர் பாலுமகேந்திரா தானே என்றெல்லாம் கற்பனையை ஓட்டாமல், ஒரு திரைப்படமாக மட்டுமே பார்த்தால் நலம். 

"கவிதா உனக்கொன்னு தெரியுமா? நம்ம சாஸ்தரத்துல சொல்லிருக்கு. பொண்டாட்டிங்கறவ தம் புருஷனுக்கு சமயத்துல தாயா இருக்கணும், சமயத்துல தங்கச்சியா இருக்கணும், சமயத்துல சிநேகிதியாவும் இருக்கணும். ஆனா, படுக்கைல மட்டும் தேவடியாளா இருக்கணும். புரியுதா? நான் இந்த ஆளுக்கு தாயா இருந்துருக்கேன், தங்கச்சியா இருந்துருக்கேன், சிநேகிதியாவும் இருந்துருக்கேன். ஆனா, படுக்கைல மட்டும் ஒரு தப்பு பண்ணிட்டேன். வெறும் பொண்டாட்டியா மட்டும் இருந்துருக்கேன். பச்ச விபச்சாரியா இருந்துருக்கணும். உன்ன மாதிரி. அங்க தான் நீ ஜெயிச்சிட்ட". 

இந்த வசனம் இடம்பெறும் காட்சிதான் இத்திரைப்படத்தின் உயிர்நாடி. பாலுமகேந்திராவின் திரைப்படங்களில், பல இடங்களில் காட்சிமொழி அழகாக வெளிப்பட்டிருக்கும்.  இந்தப்  படத்தில் ஒரு அழகான காட்சி. துளசியின் கணவன் முரளி கிருஷ்ணா, கவிதாவின் வீட்டில் இருக்கிறான். துளசியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வருகிறது. இவன் படப்பிடிப்பு முடிந்து இரவு அறையில் தனியாக இருக்கிறான் என நினைத்து, துளசி கொஞ்சி பேசிக்கொண்டிருக்கிறாள். அவளிடம் பேசி முடித்துவிட்டு, கவிதாவிடம் துளசியைப் பற்றிய பேச்சை முரளி எடுக்கிறான். கவிதா, உடனே முரளியின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டே ஐ லவ் யூ, ஐ லவ் யூ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இக்காட்சியைப் பார்க்கும் போதே, அவள் கொடுக்கும் ஒவ்வொரு முத்தமும், சொல்கிற ஒவ்வொரு ஐ லவ் யூவும் "என்ன விட்றாதீங்க" என ஒரு பரிதவிப்புடன் முரளியை கெஞ்சுவது போல் இருக்கும்.  அதன்பிறகு "என்ன விட்ற மாட்டீல...", "நான் செத்து போயிடுவேன் நீ இல்லனா" என்று வசனம் வரும்.  படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி இது. 

படத்தில் நடித்திருந்த அனைவருமே நன்கு நடித்திருக்கின்றனர். மௌன ராகத்திற்கு பிறகு ரேவதியின் நடிப்பில் என்னை ஈர்த்த படம் இது. முரளி கிருஷ்ணாவின் கதாபாத்திரத்தை இன்னும் செறிவாகக் கொண்டு வந்திருக்கலாம். 
காதலித்துதான் துளசியை திருமணம் செய்கிறான். மகிழ்ச்சியாகதான் வாழ்க்கை செல்கிறது. இருந்தாலும் எப்படியோ கவிதாவுடன் ஒரு உறவில் இறங்கிவிடுறான். முழுமையாக கவிதாவுடனும் இல்லாமல், துளசியையையும் கழட்டிவிட மனமில்லாமல், கையில் கொஞ்சம் பணமிருக்கும் திமிரில், துளசியைவிட்டு வந்துவிட்டு, கவிதா திருமணம் வேண்டாமென்று சொன்னதும் மறுபடியும் வெட்கமே இல்லாமல், துளசியிடமே மீண்டும் வருவதெல்லாம் எதார்த்த உலகில் நிறைய ஆண்கள் செய்கிற காரியம் தானே. எதற்காக கவிதாவின் பாத்திரத்தை மனநலம் சரியில்லாதவளாய், அவளை விட்டு முரளி வரமுடியாததகற்கு அதுவும் ஒரு காரணம் என்பது போல் முட்டு கொடுக்க வேண்டும்?

கவிதா, இறுதியில் திருமணம் வேண்டாமென்று சொல்வதற்கான காரணங்கள், துளசியின் வாழ்க்கையை தான் அபகரித்துவிட்டாக நினைத்து அவள் கொள்ளும் குற்றவுணர்ச்சியும் முரளி மீதான நம்பிக்கையின்மையும் தான். "எனக்காக கட்டுன பொண்டாட்டியையே விட்டுட்டு வந்தவன், நாளைக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற ஒருத்திக்காக என்ன விட மாட்டேனு என்ன நிச்சயம்?" என்று அதை வசனமாகவே வைத்திருக்கிறார்கள். கவிதாவின் பாத்திரத்தை மனநலம் சரியில்லாதவளாய் காட்டியது தேவையில்லை என்றே நினைக்கிறேன்.  முரளியின் பாத்திரம் ஒரு பட்டை தீட்டப்படாத வைரமாகவே உள்ளது. வசனங்கள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். எனக்குப் பிடித்த வசனம்: 
"கல்யாணம் பண்ணிக்கிறதால ஒரு செக்கியூரிட்டி கெடைக்கும்னு கவிதா நெனக்கிறாங்க. வெறும் ஒரு கையெழுத்து போட்டு அத அழிச்சிகலாம்னு அவளுக்கு தெரில" 

இதற்கிடையில் அரவிந்த்சாமியின் பாத்திரம் ஒரு காமெடி பீஸ் தான். அதைக் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். துளசி இறுதியில் எடுக்கும் முடிவு கொஞ்சம் சினிமாத்தனமா இருந்தாலும் ஏற்கும்படியாகதான் இருந்தது. 

ஆண்-பெண் உறவில், ஒருவரின் கல்வித்தகுதி, வர்க்கப் பின்புலம்,  பொருளியல் காரணிகள் எவ்வாறான பங்கை வகிக்கிறதென்று கொஞ்சம் வெளிப்படையாகக் காட்டியிருக்கின்றனர். படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் படிக்காத, கீழ்தட்டு வேலைக்கார பெண்ணான சரசுவிடம், இன்னொருவளுடன் உறவில் இருக்கிறான் என்று தெரிந்தும் உன் கணவனை விட்டு ஏன் பிரிந்து வரவில்லை என்று துளசி கேட்கிறாள். அவன், சரசுவிடம் பணத்தைப் பிடுங்கிக் குடித்துக் கொண்டு, பொறுப்பில்லாதவனாகவும் இருக்கிறான். இருப்பினும், தன் மகளின் எதிர்காலத்திற்காகவும், அவன் மீதான சிறிய இரக்கத்தாலும் பொறுத்துக் கொள்வதாகச் சொல்கிறாள். இறுதியில் தன் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து அவன் குடித்துவிட்ட ஆத்திரத்தில், சரசு அவனை கொலை செய்து விடுகிறாள். 

முரளிக்கு திரைப்படமெடுப்பதற்கு, சொந்த வீடு வாங்குவதற்கென பணத்தேவைகள் இருக்கின்றன. கவிதாவிடம் வாங்கிய பணத்தின் மூலம் அத்தேவைகளை நிவர்த்தி செய்து கொள்கிறான். காதலையும் தாண்டி பணத்தேவையும் கவிதாவுடனான உறவில் முரளி நீடிப்பதற்கு ஒரு காரணமாகதான் படுகிறது. துளசி, பட்டப்படிப்பு முடித்து வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்தவள். திருமணத்திற்கு பின் வேலையை விட்டு, பொருளியல் தேவைகளுக்கு முரளியை சார்ந்திருப்பது, கவிதாவிடம் முரளியை விட்டுக்கொடுக்கும்படி அவளை கெஞ்ச வைப்பதற்கொரு காரணம். முரளியும் அதனை வைத்து துளசியை உதாசீனப்படுத்துகிறான். இறுதியில் தன் சுயமரியாதைக்கு இடமளித்து, முரளியை விட்டுப் பிரிந்து ஒரு வேலையைத் தேடிக்கொண்டு, சிறைக்குச் சென்றுவிட்ட சரசுவின் மகளோடு தனியாக வாழ்கிறாள். 

படம் பார்த்துவிட்டு இறுதியில் தோன்றியவை: 
வாழ்க்கையில் பல சமயங்களில் சபலமோ, போதாமையோ வரலாம். ஆனால் நமக்கொரு அழகான குடும்ப வாழ்க்கை இருக்கும் பொழுது, அதனை சமாளிக்க தெரியாம தடுமாறினால் இருப்பதையும் இழந்துவிட்டு முரளியைப் போல் சீரழிய வேண்டியது தான். 

Comments

  1. Ivvalavu aandugalukku piragu intha thiraippadathai pattri eluthiyatharku nandri. Ennathan arathappalasana kathaiyaaga irunthalum, nadippum vasanangalum kaatchiamaippum intha padathai verupaduthi kaatugindrana. Ithupola pala thiraipadangalai pattri ungal karuthukkalai padhividungal.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக பதிவிடுகிறேன் Anonymous. அது பாலுமேந்திரா மேஜிக்!

      Delete

Post a Comment

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...