Skip to main content

கனவு சீரிஸ்- 1 பசுபதியின் வளர்ப்புக் காளை


மதியதூக்கத்தில் ஒரு நீண்ட கனவு இன்று. கனவுகள் என்றுமே விசித்திரமானவை. ஏன் வருகிறது, எப்படி வருகிறதென்று தெரியாது. ஆனால் தூக்கத்தில் கனவை நல்ல 'அனுபவிப்போம்'. எது அனுபவிக்கிறதோ! எனக்குப் பெரும்பான்மை நேரங்களில் விழிப்பு வந்தவுடன் கனவு மறந்துவிடும். ஒரு சில கனவுகள் துணுக்குப் போல் ஏதாவது நியாபகம் இருக்கும். நம் நினைவுகளிலிருந்து தான் கனவுகள் தோன்றுகின்றன என்று பொதுவாக சொல்வதுண்டு. அந்த ஆராய்ச்சிக்குள் நான் இறங்கியதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் நான் மனதில் நினைப்பவை தான் கனவாக எனக்கு வரும். ஏதோவொரு சமயத்தில் ஒரு சின்ன சிந்தனை கீற்று மனதில் வந்திருக்கும். உறக்கத்தின்போது கனவில் அன்று பெரிதாக விரியும் அது.  

எனக்கு வரும் கனவுகளில் அதிகமானவை, எங்காவதொரு இடத்தில் மாட்டிக்கொள்வேன். ஏதாவது பாழடைந்த வீடு, கோயில், எந்த இடமென்றே தெரியாது.  மாட்டிக்கொண்டு வெளியில் வருவேன் என்றெல்லாம் இல்லை. ஆனால் வெளியில் வருவதற்கு போராடிக் கொண்டிருப்பேன். கனவா நிஜமா என்றே தெரியாமல் பயத்தில் கத்துவது, அழுவதெல்லாம் உண்டு. எங்கேயோ மாட்டிக்கொண்டிருப்பதையே  மறந்து கனவில் வேறொரு கதைக்கு தாவிச் சென்றிருப்பேன். அதற்குள் விழிப்பு வந்துவிடும். எழுந்தால் ஒன்றும் நினைவிலிருக்காது. இன்றும் அப்படி கனவில் ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டேன். அதில் வந்த கதை அப்படியே எண்பதுகளின்  தமிழ்சினிமா கதைதான். 

கதைக்களம்        : என் வீடு. வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள்.

கதைமாந்தர்கள்: நான். என் அம்மா, உறவினர்கள் சிலர், எதிர்வீட்டு குடும்பம் மற்றும் பல தமிழ்சினிமா நடிகர்கள். 

ஒரு மங்கலான் நினைவில் தான் கடினப்பட்டு நினைவிலிருந்து உருவி எழுதிக்கொண்டிருக்கிறேன். நிறைய மறந்துவிட்டது. 

உறவினர் ஒருவர் வீட்டில் விசேஷம். அதற்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். கிடாவிருந்தென்று நினைக்கிறேன். என் அம்மா வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு பரவாயில்லை நானும் வருகிறேன் என்று வந்து சாப்பிடுகிறார். 

இப்பொழுது ஏதோ திருமணம் என்று நினைக்கிறேன். நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு. குடுமி, பெரிய மீசை, பட்டுவேட்டி, நெஞ்சில் சந்தனத்துடன் நாட்டாமை படத்திலிருப்பது போலவே இருக்கிறார். ( நேற்று அந்தப் படத்தை வைத்து ஒரு மீம்ஸ் பார்த்தேன்) அவரின் மகள்கள் மீனா, சிம்ரன், ரம்பா, இன்னும் யாரோ ஒருவர். நடிகர் பசுபதி அவர்களின் தாய்மாமா. விருமாண்டியில் வரும் கெட்டப்பிலிருக்கிறார். அவர் எதற்கோ ஒத்துக்கொண்டிருக்கிறார் என எல்லோரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  என் வீட்டினருகிலிருக்கும் சந்து முழுவதும் கூட்டம். ஏதோ தேர் வருகிறதென்றால் எப்படி வழியை அடைத்துக்கொண்டு இருப்பர். அதுமாதிரி.  சந்தின் ஒரு பக்கம் வீட்டின் சுவர். மறுபக்கம் மேடேறிய காலி இடம். சுவரையடுத்து உயரமான திண்ணை. திண்ணைக்கு பின்னால் அந்த கூட்டத்தின் ஓரத்தில் நானும் இருக்கிறேன். பசுபதி தன் வளர்ப்புக் காளையை சந்தில் ஜல்லிக்கட்டில் விடுவதுபோல் அவிழ்த்து விடுகிறார். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ( சமீபத்தில் தான் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு ஒளிபரப்பை தொலைக்காட்சியில் பார்த்தேன்) எங்கே அந்தக் காளை என் மீது மோதிவிடுமோ என்றே அஞ்சிக் கொண்டே வேடிக்கை பார்க்கிறேன். காளை சீறிப்பாய்ந்து கொண்டு வருகிறது. எனக்கு குலைநடுக்கம். சரியாக என்னைத் தாண்டியவுடன், தடத்திலிருந்து விலகி திண்ணையில் ஏறி ஒருவரைக் குத்திக் கிழிக்கிறது. எல்லோரும் சிதறி ஓடுகின்றனர். நானும் எங்கெங்கோ ஓடுகின்றேன். 

"பசுபதி ஒரு திட்டத்தோடதான் காளைய அவுத்துவுட்ருக்காண்டா" என யாரோ சொல்கிறார். என் காளையவிட்டு உன் பொண்ணுங்கள கொல்லாம விடமாட்டேன்டா என பசுபதி அறைகூவலிட்டு மீனா, ரம்பா, சிம்ரனையெல்லாம் தேடுகிறார். மூவரும் (அதற்குள் கனவில் நான்கு பெண்கள் மூன்று பெண்களாகிவிட்டனர்) யாரோ ஒருவர் வீட்டிற்குள் ஒவ்வொருவராக நுழைந்து இப்ப  உயிர்தான் முக்கியம் என சொல்லிவிட்டு கதவை தாழிட்டுக்கொள்கின்றனர். 

இதற்கிடையில் நான் என் வீட்டின் எதிர் வீட்டிற்குள் இருக்கிறேன். அங்கு, அந்த வீட்டின் அக்கா, ஒரு சின்ன பெண் ஆகியோர் இருக்கின்றனர். இடி இடிந்து மழை பெய்யத் தொடங்குகிறது. அந்த அக்கா என்னிடம் நீதான் இங்க இப்ப இருக்கனும் என்பது போல் ஏதோ சொல்லி தனியாக விட்டுச்செல்கிறார். கனமாக மழை பெய்து சந்து முழுவதும் வெள்ளம் வந்துவிட்டிருக்கிறது. வீட்டிற்குள் இருந்த எனக்கு வெள்ளம் வந்தது எப்படி தெரிந்தது என தெரியவில்லை. கனவில் தான் பிக்பாஸ் போல எல்லாமே தெரியுமே. 

கதைக்களம் இப்பொழுது ஏதோ மலைக்குச் சென்றுவிட்டது. மலையிலிருந்து பேருந்தில் கொண்டையூசி வளைவுகள் வழியாக வந்துக் கொண்டிருக்கிறேன். ( இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சேலத்திலிருந்து மஞ்சவாடி கணவாய் வழியாக வந்தேன்) என்னுடன் உறவினர்களெல்லாம் இருக்கின்றனர். வழியில் ஒரு விசேஷ வீடு வருகிறது. வாசலில் தோரணமாக இரு பக்கமும் அப்பளம் கட்டியுள்ளனர். ( மதியம் தூங்குவதற்கு முன் அப்பளம் சாப்பிட்டேன்)  அதை உடைக்கக் கூடாதென்று என்னிடம் சொல்லி வைக்கின்றனர். நான் மறந்து அந்த இடம் வந்தததும் ஓடும் பேருந்திலிருந்து அந்த வீட்டில் கட்டியிருக்கும் தோரணத்திலிருக்கும் அப்பளத்தை உடைக்கிறேன். சரியான திட்டு எனக்கு. 

இப்பொழுது பேருந்து எப்படியோ கார் ஆகிவிட்டிருக்கிறது. சாரல் மழை பொழியத் தொடங்குகிறது. சாலையின் ஒருபுறத்தில் ஓடை ஒன்று ஓடுகிறது. மலையிலிருந்து கீழிறங்க இறங்க ஓடையின் நீரோட்டம் அதிகரிக்கிறது, உயரமான மரங்களிலிருந்து மழைநீர் வழிந்து ஓடையில் கலக்கிறது.

கதைக்களம் அப்படியே தாவி மறுபடியும் விஜயகுமாரிடம் வந்துவிடுகிறது. எப்படி? சொக்கம்பட்டியில் இருக்கும் நாயகனிடம் நாயகி காதலை சொல்ல, உடனே இருவரும் ஸ்விட்சர்லாந்திற்குச் சென்று ஐந்து நிமிடத்தில் டூயட் பாடிவிட்டு  சொக்கம்பட்டிக்கே திரும்பிவிடுகின்றனர். எப்படி? கனவிலும் கமர்ஷியல் படங்களிலும் அந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது. என் பள்ளி பேருந்து நிலையத்திற்கு  அருகிலிருக்கும்  கட்டிமுடிக்கப்படாத வீட்டின் மேல், இரவில் விஜயகுமாரும் இன்னும் சிலரும் நின்றிருக்கினறனர். மழையும் விட்டிருக்கிறது. குழந்தைக்கு பெயர் குறித்து கொடுக்கும் யாரையோ தொலைபேசியில் அலைக்கின்றனர். ( நேற்று இரவு பார்த்த சீரியலில் குழந்தைக்கு பெயர் வைக்கும் காட்சி வந்நது) அவன் ஏமாத்தனும்னு தான போலி நம்பர் குடுத்துருக்கான் என்று விஜயகுமார் சொல்கிறார். அதற்குள் பசுபதியின் காளை பல அசம்பாவிதங்களை நிகழ்த்தியிருக்கிறதென்ற தடம் தெரிகிறது. நான் அவன கொல்லாம விடமாட்டேன் என்று துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பசுபதியை தேடுகிறார். ஏதோ கூரையில்லாத வீடொன்றில் மீனா, ரம்பா, சிம்ரன் ஆகியோர் இருக்கின்றனர். விஜயகுமாரும் பார்க்கிறார். 

பாப்பா….எவ்வளவு நேரமா தூங்குவ.... அம்மாவின் அலறல் கேட்டவுடன் விழித்துவிட்டேன். எழுந்தவுடன் சரியான தலைவழி. நெற்றியை தொட்டால் கொதிக்கிறது. கடிகாரத்தை பார்த்தால் மணி நான்கு முப்பது. தூங்க போகும் பொழுது மணி மூன்று. ஒன்றரை மணிநேரம் என்ஜின் ஓடியதில் சூடாகியிருக்கிறது. இரவு தூக்கத்திலாவது மதியம் போல் கிரிஞ்ச் கனவுகளில்லாமல் நிம்மதியாகத் தூங்க வேண்டும். தமிழ்சினிமா ரொம்பத்தான் மூளையை கெடுத்து வைத்திருக்கிறது. 

(கனவு சீரிஸ் தொடரும்...)

30. 01. 2025

7.00 pm



Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...