'கொட்டுக்காளி' டிரெய்லர் பார்த்த போது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்து, அந்தப் படம் எனக்கு ஒத்துவர வாய்ப்பிருக்கிறது என்று தோன்றினாலே படத்தை பார்ப்பேன். அதனால் கொட்டுக்காளிக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தாலும் நான் படத்தை பார்க்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களாக என்னுடைய யூடியூப் ஃபீட் சும்மா சும்மா வந்து கொட்டுக்காளி சம்மந்தமான காணொளிகளையே காட்டிக்கொண்டிருந்ததால், சரி என்னதான் எடுத்திருக்கிறார்களென்று பார்த்துவிடலாம் என முடிவெடுத்து இன்று மதியம் படத்தைப் பார்த்தேன்.
வித்தியசாமாக ஏதோ முயன்றிருக்கிறார்கள். அவ்வளவே தோன்றியது எனக்கு. உடனே உனக்கு படம் பார்க்க தெரியவில்லை என்று ஓடி வரக்கூடாது. எப்படிப்பட்ட படமாக இருப்பினும் உணர்வுபூர்மாகக் காட்சிகளுடன் நம்மைப் பிணைக்க வேண்டும். அப்பொழுது தான் நம்மால் கதைக்குள் ஒன்ற முடியும். இல்லையெனில், ஏதோ ஓடுது, பார்த்தேன் என்பது போல் தான் இருக்கும். இந்தப் படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்துடனும் என்னால் ஒன்ற முடியவில்லை. படத்தை நாயகியின் (அன்னா பென்) வழியாகப் பார்ப்பதா, சூரியின் வழியாகப் பார்ப்பதா, இல்லை எதன் வழியாகப் பார்ப்பது என்று தெரியவில்லை.
நாயகன், நாயகி, ஒரு பிரச்சனை, வில்லன், திருப்பம், க்ளைமாக்ஸ் என படம் நகர வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. முறைப்பையனான சூரியை திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு இளைஞனை காதலிப்பதாகச் சொல்லும் நாயகிக்கு பேயோட்டினால் சரியாகிவிடும் என நினைத்து இருவரின் குடும்பமும் சேர்ந்து நாயகியை ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்லும் பயணம் தான் கதை. இப்படத்தின் கதையிலும் கதை சொல்லலிலும் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் படம் என்ன சொல்ல வருகிறது என்பது முக்கியமில்லையா. சேவல், காட்டுக்குள் குலசாமி, மூர்க்கமான நாயகன், கரடு, காளை மாடு, பேயோட்டி இதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன சொல்கிறீர்கள்.
பாருங்கள், இந்த நிலத்தில் எப்படி ஆண்கள் பெண்களை கீழ்த்தரமாக நடத்துகிறார்கள், ஒரு பெண் காதலித்தால் அவளுக்கு பேய் பிடித்துவிட்டதென நினைக்குமளவிற்கு பிற்போக்காக இருக்கிறார்கள், பேயோட்டுகிறேன் என ஒருவன் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறான், இந்த வறண்ட நிலத்தைப் பாருங்கள் என்கிறீர்களா. நாயகின் நிலையைப் பற்றியோ, சூரியின் குணாம்சத்தைக் குறித்தோ, அந்த நிலத்தைக் குறித்தோ, மக்களைக் குறித்தோ எந்த சிந்தனையையும் அது தூண்டவில்லை. வெறுமனே காட்சிகள் நகர்கின்றன. இயக்குநரின் முந்தைய படமான கூழாங்கல்லிலும் இதுவே நடந்தது.
ஒன்றரை மணிநேரப் படத்தில் முதல் முக்கால் மணிநேரத்தைவிட அடுத்த முக்கால் மணிநேரம் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்தது. ஆற்றுப்பாலம் ஒன்றின் நடுவில் ஆட்டோவை நிறுத்திவிட்டு சூரி நாயகியை அடிக்க, விலக்கிவிட வரும் எல்லோரையும் அவர் அடிக்கும் காட்சி படத்தில் குறிப்பிடும்படியான காட்சி. கூழாங்கல்லிலும் நாயகன் நாயகியின் வீட்டிற்குச் சென்று சண்டை போடும் காட்சி மிக இயல்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும். படத்தில் நாயகன், நாயகியை விடவும் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்தவர்களில் சிலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். பின்னணி இசையில்லாமல், நேரடியான ஒலிகள் பயன்படுத்தியது படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. டார்க் ஹியூமர் சில இடங்களில் வேலை செய்துள்ளது. வாழை படத்தையெல்லாம் ஒப்பிடும் போது இப்படம் தேவலாம். படத்தைக் குறித்த என் கருத்துக்களில் மாறுபடுபவர்கள் கண்டிப்பாக காமெண்ட் பாக்ஸில் எழுதுங்கள். விவாதிப்போம்.

Comments
Post a Comment