சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி, எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.
மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.
கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்ணியமாக ஒரு நிலம் எதற்கு இருக்க வேண்டும்? வேலிக்கு அந்தப் பக்கம் அமைதி, இந்தப் பக்கம் யுத்தம் என கடவுள் ஏன் ஒரு களத்தை வடிவமைக்க வேண்டும்? ஆனால் அப்படியிருக்கும் நிலத்திலிருந்து வந்த "This Blinding Absence of Light" என்ற நாவலை வாசித்த போது தான் தானொரு இறை நம்பிக்கையாளனாக மாறியதாகச் சொல்கிறார் சாரு. கலவர பூமியில் தான் கடவுளின் இருப்பு தூலமாகுமோ என்னமோ.
மனிதனின் இயல்பே இன்னொரு மனிதனை அடிமைப்படுத்துவதாகத்தான் என்றென்றும் இருந்திருக்கிறது. காலம், நிலம், செயல்முறைகள் தான் மாறுகிறதே தவிர, அவனியல்பு மாறுவதில்லை. அதையே இந்நூலில் வரும் ஒவ்வொரு தேசத்தின் வரலாறும் நமக்கு கூறுகிறது. ஒரு டஜன் அரபி எழுத்தாளர்களை இந்நூலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் சாரு. அதை வெறும் தகவல்களாக மட்டுமல்லாமல், ஒரு நிலத்தின் ஆன்மாவை நெருங்கிப் பார்ப்பதற்கான வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ளலாம்.
10. 02. 2025
குறிப்பு: இது எழுத்தாளர் பா. ராகவன் தனது வாட்ஸப் சேனலில் நடத்தும் வாசகர் போட்டிக்கு அனுப்பியது.

Yyyg
ReplyDelete