கடந்த வாரத்தில், ஓர் இரவில் மென்மையான இசை கேட்கும் ஆவலில் எஸ்தாஸ் தோனேவின் "13 Songs of Truth" ஆல்பம் கேட்க ஆரம்பித்து, அது "பிரேமம்" படத்தின் பின்னணி இசைக்கோர்வையான "Unfinished Hope" ற்கு கொண்டு போய் விட்டது. அது எப்பொழுதும் போல் என்னுடைய பத்தாம் வகுப்பு நினைவுகளைக் கிளர்த்திவிட்டது. உடனே எனக்கு பிரேமம் படத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வந்து அன்றிரவே பார்த்தும் விட்டேன். அநேகமாக அப்படத்தை அன்று நான் பார்த்தது இருபதாவது முறையாக இருக்கலாம். அல்லது அதற்கு மேலாகக்கூட இருக்கலாம். இரவு நான் தூங்கச் சென்ற போது மணி பதினொன்று. இன்னும் எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு முந்தைய நாளிரவு, ஏதோவொரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிரேமம் படத்தை, தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்கிக் கொள்வதற்காக பத்தரை மணிவரை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிரேமம் படத்திற்கும் எனக்கும் இரவிற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் போல. முதன்முதலில் அப்படத்தைப் நான் பார்த்ததுகூட லேசாகத் தூறிக்கொண்டிருந்த ஒரு இரவு வேளையில் தான்.
என்னுடைய பள்ளிப் பருவ நினைவுகளைக் கொண்டு வருவது இம்மாதிரி, இசை கேட்கும் பொழுதோ திரைப்படங்களைப் பார்க்கும் பொழுதோதான். இயல்பாக தோழிகளிடம் பேசும் பொழுது அப்படி நிகழ்வதில்லை. ( அப்படி நினைவுகூற நான் விரும்புவதுமில்லை) பிரேமம் திரைப்படம் வெளியான 2015 ஆண்டு தான் நான் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தேன். அந்த வருடம் முடியும் வரை, Asianet சேனலில் மாதமொருமுறை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அப்படத்தை ஒருமுறை கூட பார்க்கத் தவறியதில்லை.
படத்தில், நிவின் பாலி நடித்திருந்த ஜார்ஜ் கதாப்பாத்திரத்தைப் போல் நான் தண்ணி, தம் அடித்ததில்லை, மேடையில் குண்டு வைத்ததில்லை, மூன்று பெண்களை காதலித்ததில்லை (ஏனென்றால் நான் ஆணில்லை, அது வேறு விசயம்) ஆனாலும் நான் என்னை ஜார்ஜாகவே உணர்ந்தேன். படத்தில் காட்டப்படும் ஜார்ஜின் செயல்பாடுகள் பலவற்றில் ( ஆசிரியை காதலிப்பது, அடிதடியில் ஈடுபடுவது, இறுதியில் முதலில் காதலித்த பெண்ணின் தங்கையையே திருமணம் செய்வது) அப்போதே எனக்கு உடன்பாடு இல்லையெனினும் ஒரு பக்கம் எனக்குள்ளே வெறுத்துக் கொண்டே சில வருடங்கள் அப்படத்தை உள்ளூர ரசித்தேன்.
ஏன் எனக்கு அப்படம் பிடித்தது என்பதற்கான காரணத்தை என்னால் ஆர். அபிலாஷின் "பிரேமம்: சினிமாவை பிரதிபலிக்கும் வாழ்க்கையின் பிரதிபலிப்பு" கட்டுரையை வாசிக்கும் வரை புரிந்துக் கொள்ள முடியாமலேயே இருந்தது. அந்தக் கட்டுரையை வைத்து, நான் ஏன் என்னை ஜார்ஜாக உணர்ந்தேன் என்பதற்கு சில காரணங்களை என்னால் அடுக்கிக் கொள்ள முடிந்தது. அபிலாஷின் கட்டுரையின் சாராம்சம் இதுதான்: "அவனுடைய கதை சினிமா எதார்த்தத்தை பிரதியெடுக்கும் ஒரு மனிதனின் எதார்த்தத்தை சொல்லும் படம். அதைக் கண்டு பார்வையாளர்கள் தூண்டப்பட்டால் அவர்கள் பழைய சினிமாவில் இருந்து பிரதிபலிக்கப்பட்ட எதார்த்ததை பிரதிபலிக்கிறார்கள், அதாவது ஒரு கண்ணாடி முன்பு மற்றொரு கண்ணாடியை வைத்தால் கிடைக்கும் பிரதிபலிப்பைப் போல் ஆகிறார்கள்".
சிறுவயதிலிருந்தே நிறைய சினிமா பார்த்து வளர்ந்த நான், பெண்ணாக இருந்தாலும் என்னை எப்பொழுதும் நாயகக் கதாபாத்திரனுடனே பொருத்திப் பார்ப்பேன். சாகசங்கள் செய்யும் பெண் கதாப்பாத்திரங்கள் அப்பொழுது தமிழ் சினிமாவில் இல்லை. கொஞ்சும் மைனாக்களே… ஷாலலா…ஷாலலா….வகையறா நாயகி அறிமுகப் பாடல்களும் வழக்கொழிந்து விட்ட காலத்தில் வெறுமனே நாயகனுடன் டூயட் பாடும் நாயகியுடன் எப்படி எல்லா பெண்களாலும் தன்னை பொருத்திப் பார்க்க இயலும்?
படத்தில், ஜார்ஜ் எப்பொழுதெல்லாம் அழுகிறானோ அப்பொழுதெல்லாம் நானும் அழுவேன். எப்பொழுதெல்லாம் கோபப்படுவானோ அப்பொழுதெல்லாம் கோபப்படுவேன். ஜார்ஜின் முதல் காதலில், அப்பெண்ணிடம் காதலைச் சொல்லலாமென முன்தயாரிப்புகளுடன், கையில் கிரீட்டிங் கார்டோடு காத்திருப்பான். ஆனால், அவனிடம் வந்து தன் காதலனை அறிமுகப்படுத்தி தன் காதலுக்கு உதவிபுரிய சொல்லுவாள் அவள். ஜார்ஜும் ஏதும் சொல்லாமல் உடனே சம்மதித்துவிடுவான். இக்காட்சியையடுத்து காலம் கெட்டுபோயி…பாடல் வரும். அப்பாடலில் பல காட்சிகளில் ஜார்ஜ் அழுவான். அச்சமயத்தில் "காதல்" என்ற வார்த்தையைக் கேட்டால் கூட பிடிக்காது. ஆனாலும் அவனைப் பார்த்து, என்னுடைய ஏமாற்றங்களை, இயலாமையை நினைத்து அழுகை வரும். சொந்தமாக அழக்கூடத் தெரியாத ஜென்மம்! தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களைப் போன்ற பாவப்பட்ட ஜென்மங்கள் அப்பொழுது இருந்திருக்க முடியாது.
பாடலின் முடிவில் மோகன்லாலின் ரசிகனான ஜார்ஜ், லவ்வும் வேணா ஒரு மண்ணும் வேணாம் என்பது போல் முடிவெடுத்து சாதுவாக இருந்த பையன் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு முரட்டுப்பயலாகி விடுவான். கல்லூரி பகுதியில் வரும் முதல் காட்சியே ஜார்ஜூம் அவன் நண்பர்களும் எதிரணியிலிருப்பவர்களைப் போட்டு பொழந்துக் கொண்டிருக்கும் காட்சி தான். அதில் ஒரு பின்னணி இசை வரும். உண்மையிலேயே என் நாடி நரம்புகளெல்லாம் வெடவெடத்தனதான். அச்சமயத்தில் நானும் வகுப்பில் சில கைகலப்புகளில் ஈடுபடுவதுண்டு. வாதம் செய்து சண்டையில் வெல்லத் தெரியாது எனக்கு. அதை மறைத்துக் கொள்வதற்காக அப்படி நடந்து கொள்வேன். அதற்கெல்லாம் தைரியத்தை வரவைத்துக் கொள்ள, ரெபரன்ஸ் அந்தக் காட்சி தான். சொந்தமாக சண்டையில் அடிக்கக்கூட தெரியாத ஜென்மம்!
படத்தில் எனக்குப் பிடித்தது கல்லூரி பகுதி தான். மலர் டீச்சரின் அறிமுகக் காட்சியிலிருந்து, பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மேஜிக் போல இருக்கும். கல்லூரியில் ஜார்ஜ் செய்யும் சேட்டைகளெல்லாம் இப்பொழுது பார்த்தால் கோபம் தான் வருகிறது. ஆனால் அப்பொழுது அதையெல்லாம் மிகவும் ரசித்தேன். பள்ளியில் சில ஆசிரியர்களின் வகுப்புகளில் மட்டும் நான் சேட்டை செய்வதுண்டு. அதற்கு ஜார்ஜொரு முன்னத்தி ஏர். சொந்தமாக சேட்டை செய்யக்கூட தெரியாத ஜென்மம்!
மலர் டீச்சரை உருகி உருகி காதலிப்பான் நம்ம ஜார்ஜ். ஆனால், இறுதியில் விபத்தொன்றில் நினைவுகளிழந்துவிடுவார் அவர். அவள் திருமணத்தில் போய் எல்லா விஷயத்தையும் சொல்லப் போகிறேன் என கிளம்பி, வாழ்த்திவிட்டு வருவான் பையன். வரும் வழியில் பைக்கை போட்டுவிட்டு கதறிக் கொண்டிருப்பான். பின்னணியில் Unfinished Hope இசைத்துக் கொண்டிருக்கும். அவனைப் போலவே எதற்கும் ராசியில்லாத என்னை நினைத்து நானும் கதறியழுதிருக்கிறேன்.
அக்காட்சியை, சில நாட்களுக்கு முன்பு பார்த்த போதுகூட கொஞ்சம் சோகமாகவே உணர்ந்தேன். எனக்கு சம்மந்தமே இல்லாத, எனக்குப் பிடிக்காத செயல்களை செய்யும் கதாப்பாத்திரத்தோடு எப்படி என்னை பொருத்திப் பார்த்தேன் அன்று, எப்படி அது அழும்போது அழுது, கோபப்படும் போது நானும் கோபப்படுகிறேன்? வீடு, பள்ளி, தேர்வு இதற்கு வெளியில் சினிமா. சினிமாவைத் தாண்டி வேறேதும் அறியாமல் வளரும் ஒருவர் அப்படி இல்லாமலிருப்பது தான் ஆச்சிரியம். அபிலாஷ் கூறுவது போல், மோகன்லாலைப் பிரதியெடுக்கும் நாயகனைப் போல் நாயகனைப் பார்த்து பார்வையாளர்கள் பிரதியெடுக்கிறார்கள். அதுதான் எனக்கு நடந்ததும். சம்பவங்கள் மாறினாலும், அன்று அவனொரு வடிகாலாக இருந்திருக்கிறான் எனக்கு
பள்ளி முடித்து கல்லூரி வந்த சமயத்திலேயே அப்படம் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. ஆனாலும் எப்பொழுதாவது தனிமையாக உணரும் போது, ஏமாற்றங்கள் மிகுந்திருக்கும் போது அப்படத்தைப் பார்ப்பதுண்டு. சில நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்த போது, முதல் பகுதியெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கடைசி அரைமணிநேரமெல்லாம் எப்படா படத்த முடிப்பீங்க என்றாகிவிட்டது. கல்லூரி பகுதியில் மட்டும் இன்னும் கொஞ்சம் மேஜிக் ஒட்டிக்கொண்டிருக்கிறது. காரணம், பின்னணி இசையும் சாய் பல்லவியும் தான். ஆனாலும் பல காட்சிகள் அலுப்பாகி விட்டன. ஏனென்றால் நானும் பிற்பகுதியில் வரும் ஜார்ஜைப் போல் சினிமாவிலிருந்து எதார்தத்தைப் பிரித்துப் பார்க்கப் புரிந்துக் கொண்டு வெகுநாட்களாகி விட்டன. இப்படி தலைப்பு வைத்திருக்கலாமோ. பிரேமம்- இது பெருசுகளுக்குப் புரியாது.
நன்றி:
.jpeg)
😂😂
ReplyDelete