Skip to main content

புருஷன்-அராத்து

 



அராத்துவின் எழுத்தில், "பொண்டாட்டி", "பிரேக்கப் குறுங்கதைகள்" இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை. "பொண்டாட்டி" பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. பொண்டாட்டினா என்ன, ஒரு ஆம்பளைக்கு பொண்டாட்டின்றவ யாரு, பொண்டாட்டின்ற கதாப்பாத்திரத்துக்கு இந்த சமூகத்துல என்ன பிம்பம் இருக்கு என்பது போன்ற முக்கியமான கேள்விகளை அது முன்வைத்திருக்கும். பெண் கதாப்பாத்திரங்களைச் சிறப்பாக எழுதும் ஆண் எழுத்தாளர்களை, ஒரு பெண்ணா உருமாறி எழுதிருக்காரு, பெண்ணுடல்ல ஊடுருவி எழுதிருக்காரு என்றெல்லாம் பலர் சொல்லுவர். அதிலெல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கையில்லாமல் இருந்தது. புருஷனை வாசித்துவிட்டு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. இப்பொழுது யோசித்தால், பொண்டாட்டி, அரைகுறையாக பெண் வேடமணிந்த ஆண் எழுதியது. புருஷன், முழுக்க முழுக்க எந்த ஒப்பனையும் இல்லாத ஒரு ஆண் எழுதியது. அதனால் தான் பொண்டாட்டியை விட பல மடங்கு சிறப்பாக புருஷன் வந்துள்ளது.

நாவல் குறித்த சாரு நிவேதிதாவின் உரையைக் கேட்டுவிட்டு புருஷனை வாசித்த பொழுது பல விஷயங்களை கூடுதலாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. பின்நவீனத்துவம், அது இது என்று எதும் எனக்கு தெரியாது. ஆனால் இந்த நாவலை வாசித்த போது சாரு நிவேதிதாவின் "நான் தான் ஔரங்ஸேப்" வாசிக்கையில் ஏற்பட்ட அனுபவம் ஒன்று நடந்தது. பெருமாளும் கொக்கரக்கோவும் அகோரியின் உடம்பிலிருக்கும் ஔரங்ஸேப்பிடம் தொடர்ச்சியாகக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கையில், ஒரு கட்டத்தில் நானும் ஔரங்ஸேப்பிடம் என்ன கேள்வி கேட்கலாம் என பட்டியலிட ஆரம்பித்துவிட்டேன். அதுபோலவே, இந்நாவலிலும் ஸ்பெஷல், தன்னுடைய நினைவுகளை பாதுகாப்பாகச் சேகரித்து வைக்க என்ன வழி என்று யோசிக்க வேண்டும் என்று சொன்னதும், (அந்த இடம் கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும்) அவனுக்கு என்ன யோசனை கூறலாமென்று நான் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.  அரம்யா குறித்த உண்மைகள் தெரிந்த பிறகு, என்ன முடிவெடுப்பதென்று தெரியாமல் ரகுராம் திணறிக்கொண்டிருக்கையில், மனதிற்குள் நான் அவனுக்கு ஆலோசனைகள் கூறிக்கொண்டிருந்தேன். 

அராத்துவை செக்ஸ் ரைட்டர், அவர் எழுதுவது செக்ஸ் புக் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆத்மாக்கள், இந்நாவலின் அத்தியாயம் 22 ஐ மட்டுமாவது படித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதைப் படித்துவிட்டு, அடுத்த பக்கம் திருப்ப முடியாமல் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். செக்ஸ் புக்கிலெல்லாம், ஒருவன் காம உணர்ச்சியின் மிகுதியில், எதிர்வீட்டுப் பெண்ணை, சமையலறைக் கதவினருகில் மறித்து நின்ற தன் செயலை எண்ணி அவன் அடையும் அருவருப்புணர்ச்சியையும், மனவேதனையையும் இப்படித்தான் பதிவு செய்திருப்பார்களா? 

குடும்பமாக நடத்தும் நாடகக் காதல் குறித்து எழுதியது நன்றாக இருந்தது. அந்த மாலதியைப் போல் பல பெண்களை நேரில் பார்த்துள்ளேன். காவல் நிலையத்தில் நடக்கும் பஞ்சாயத்துகளில் அதுகளின் கால்களில் விழும் அம்மாக்களை விட அப்பாக்கள் இப்பொழுது அதிமாகிவருகின்றனர். ரகுராமின் அப்பா சக்கரபாணி, இப்படி ஒரு அப்பா இல்லையே என ஏங்க வைக்கிறார். அவர் இறுதியில் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லி முடித்தது எனக்கு பிடிக்கவில்லை. ஊசி கதிரிடம் பெண்களைப் பற்றி சொல்லி முடித்ததும், "சிற்றுரையைக் கேட்டு நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி நன்றி சொன்ன கதிர்" என்ற வாக்கியம் வரும். அதை படித்துவிட்டு அவன் எப்படி நன்றி சொல்லியிருப்பான் என சிலமுறை நடித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதுபோல நாவலில் பல இடங்கள் உள்ளன.

கதிரவன், கடைசியில் திருமணத்தை முடித்துவிட்டு ஊசியிடம் புலம்புமிடம் இந்த நாவலின் உச்சம் எனலாம். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முப்பது வயதை ஒத்த சமகால இளைஞர்களின் வார்த்தைகள் தாம். இன்றைய சமூகச் சூழல், பொருளாதாரம் இளைஞர்களை எப்படிப்பட்ட சிக்கல்களுக்கு, நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று தீவிரமான உரையாடல்களைத் தொடங்கி வைக்கும் இடமது. கதிரவன், ஹைதராபாத்தில், தனிமையில் கையடித்து கையடித்து அவன் உணர்ந்த வெறுமையை, அந்த அத்தியாயத்தை விட சென்னைக்கு வந்து தன் வட்டத்தை விரித்துக் கொண்டுச் செல்லும் பிந்தைய அத்தியாயங்களில் பெரிதும் உணரும்படியாக இருந்தது. இலக்கியம், தத்துவமெல்லாம் படித்துவிட்டு அவன் ஆளுமையில் ஏற்படும் மாற்றங்கள்(கொடும் திமிர் பிடித்தவனாக மாறுதல்) தற்காலிகமானதுதானா என குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில், நாவலில் பிந்தைய அத்தியாயங்களில் எங்கும் அது வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. ரகுராம் அந்த பொம்மையிடம் பேசும் இடங்களும் மிகவும் முக்கியமானவை. 

"பொண்டாட்டி" வாசித்ததை வைத்து புருஷன்னா என்னவென்று இந்நாவலில் கொண்டுவருவார்களோ என்று யோசித்தேன். ஆனால் இந்நாவலும் பொண்டாட்டி எழுப்பிய கேள்வியை நோக்கியே இறுதியில் வந்ததாகப்பட்டது. அராத்துவின்‌ பாணியில் கேட்பதென்றால், பொண்டாட்டின்றவ யாரு? ஓக்கரதுக்கு ஒரு புண்டதா வேணும்னா, தேவடியாகிட்டயே காலம் முழுக்க போக வேண்டியது தான. எதுக்கு ஒருத்திய கல்யாணம் பண்ணி கூடவே வெச்சிகிட்டு, கொழந்த பெத்துக்கணும்னு நெனைக்கிறாங்க ஆம்பளைங்க. நிமிட், கதிரவன் இரண்டு கதாப்பாத்திரங்களுமே அந்தக் கேள்வியைத்தான் எழுப்புகிறார்கள்.

ழழிழு மன்னிப்பு குறித்து கூறுகையில், ஏன் ஒருவர் நமக்கு செய்யும் தவறுக்கு, துரோகத்திற்கு பாதிப்படைய வேண்டும். அப்படி ஒன்று நடக்காததைப் போலவே இருந்தால் பாதிப்படைய மாட்டோம், நாமும் எதையும் செய்யாமல், எதையும் பாதிக்காமல் இருக்கலாம் என்கிறது. அது எப்படி எதன் பொருட்டும் ஒருவர் பாதிப்படையாமல் இருக்க முடியும். அப்படியே இருந்தாலும் தன்னிச்சையாக ஒரு மனிதன் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டானா என்ன? 

"புஸ்ஸி" நெடுங்கதையை வாசித்தால் புருஷனுக்கு முன்னோட்டம் போல் இருக்கும். ஸ்பெஷல்-மேகலா வரும் பல இடங்கள் கடுப்பேற்றின. ழழிழு தத்துவங்கள் குறித்து கூறும் அத்தியாயம் பிந்தைய அத்தியாயங்களில் சில இடங்களை கூர்ந்து உள்வாங்கிக் கொள்ள தேவைப்படுகிறது தான். ஆனால் அதைக் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். சில அத்தியாயங்கள் வளவளவென இழுத்துக் கொண்டே இருந்தது. கொஞ்சம் பக்கங்களைக் குறைத்திருந்தால் நாவல் இன்னும் செறிவாக வந்திருக்கும். தமிழ் சினிமாவின் தற்போதைய‌ டிரெண்ட் போல இரண்டாம் பாகத்தின் முன்னோட்டத்தைக் காட்டி முதல் பாகத்தை முடித்திருக்கிறார். பார்க்கலாம் புருஷன்-2 எப்படி இருக்கிறதென்று. 

எச்சரிக்கை: தமிழில் 'கெட்ட' வார்த்தைகள்‌‌ எனும் முத்திரையோடு புழங்கும் அத்தனை வார்த்தைகளும் இந்நாவலில் ஏறத்தாழ அனைத்து பக்கங்களிலும் வரும். மேலும் அரசியல் சரிநிலையைப் பேணாமல் நாவல் முழுமையும் ஆண்களின் பார்வையிலேயே எழுதப்பட்டிருப்பதால், எளிதில் மனம் புண்படும் முற்போக்காளர்கள்,  புதிய‌ வாசகர்கள் அராத்துவின்  பிற நூல்களை வாசித்துவிட்டு இதனை வாசிக்க வருதல் நலம். 

Comments

  1. super ra explain panni irukkiga sis

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...