“அந்த சோயாவ வெச்சி ஒன்னு செய்யும் பாருங்க…ஓட்டல் கூட தோத்துடணும். ஒம்பதாங் க்ளாஸ் தான் படிக்கிது. வீட்ல எல்லா வேலையும் செய்யும். ஒடம்பு பெருசா இருக்கறதுக்கு காலைல ஓடிட்டு ஸ்கூல் போகும். கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம் போய்ட்டு ஏதோ அவார்டுலாம் வாங்கிருக்கு.” கண்ணில் அப்படி ஒரு பெருமை அந்த மூதாட்டிக்கு. வயது அறுபதை நெருங்கியிருக்கலாம்.
அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த இரண்டு பெண்மணிகளுக்கும் அவருக்கும் அதற்கு முன்னர் பழக்கம் இருந்தது போல் அவர்களின் உடல்மொழி இல்லை. பேருந்தில் அமர்ந்திருந்த ஐந்து நிமிட பழக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர்களும், தன் பேத்தியைக் குறித்த பெருமிதத்தில் திளைக்கும் அந்த நெடிந்த, மெல்லிய தோற்றமுடைய அம்மூதாட்டியை உண்மையிலே ரசிப்பது போன்றதொரு பொய்யான பாவனையை காட்டிக் கொண்டிருந்தனர்.
அவரின் அருகில் இருந்த இன்னொரு நடுத்தர வயதுள்ள பெண்மணி இக்காட்சியைக் கண்டு, அப்பெருமிதங்களுக்கெல்லாம் சொந்தக்காரர் போல் நெளிந்துக் கொண்டிருந்தார். அம்மூதாட்டியின் மருமகளாக அவர் இருப்பார் என்பது என் கணிப்பு. மூதாட்டி விட்டதும் அப்பெண்மணி தொடங்கலானார். “பையன் செவன்த் படிக்கிறான், பொண்ணு நைன்த் படிக்கிறா. வேணா, படீனு சொன்னாலும் எல்லா வேலையையும் இழுத்து போட்டுட்டு செய்யுவா. ஒடம்பு ஏறிடும்னு ஹெல்த் கான்ஷியஸ் இப்பவே. படிக்கிறதும் நல்லா படிப்பா”. அவர் சொல்லி முடித்ததும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்மணி, சட்டெனத் தாக்கப்பட்டவர் போல், “என் பையனும் நல்லாதான் படிச்சிட்டு இருந்தான். எடுத்தா பர்ஸ்ட் ரேங்க் தான். எல்லாம் அவங்கப்பா உயிரோட இருந்த வரைக்கும். இப்ப ஸ்கூலுக்கே போறதில்ல…” “அச்சச்சோ…அப்பிடினா ஹாஸ்டல்ல போட்ருங்க. அங்கதான் நல்லா சொல்லிக் குடுக்குறாங்களாமே…” என தொடர்ந்தது அவ்வுரையாடல்.
என்னுடைய நிறுத்தம் வரவே அந்தக் கண்றாவியான உரையாடலைக் கேட்பதிலிருந்து தப்பித்து விடுதிக்கு வந்தால், “மூளலாம் நல்லா வேல செய்து, சாப்பாடு வாசன வந்த உடனே போய் தட்டுல போட்டு எடுத்துனுவானுது….ரெண்ட்ற வயசுதான் ஆவது. என் பேத்தி…” என சமையல் செய்யும் அக்கா என்னை நோக்கி கூறிக்கொண்டே வந்தார். இன்னைக்கி எழுந்திருச்ச நேரம் சரியில்ல என எனக்கு நானே கூறிக்கொண்டு வந்து அமர்ந்தேன்.
ஒரு இரண்டரை வயது குழந்தை உணவின் மணமறிந்து தனக்கு வேண்டும் என கேட்பது, ஒன்பதாம் வகுப்பில் தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைப்பது ஒரு பெருமையா இந்த தாய்மார்களுக்கு. அட பெருமையாகவே இருக்கட்டுமே. அதை ஏன் இப்படி அடுத்தவர்கள் காதில் வம்படியாக திணிக்கிறீர்கள். அந்த மூதாட்டியையும் பெண்மணிகளையும் சடுதியில் அநுக்கமாகியது எது. ஒரு புதியவரிடம், என் பையன் எவ்ளோ பெரிய புடுங்கி தெரியுமா. உன் பையன் என்ன புடுங்கிட்டு இருக்கான் என்று வினவுவதைத் தவிர இந்த மட்டி மூளைகளுக்கு வேறேதுமே தெரியாதா. ஒரு சமூகமே ஏன் இப்படி அநியாயத்துக்கு தன் பிள்ளைகளைக் குறித்த அதீத பெருமிதத்தில் திளைத்து அடுத்தவரின் முகத்தில் மூத்திரம் அடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் இந்த ஊரில் யாருமே பிள்ளைகளைப் பெற்றதில்லையா, அவர்கள் வளருவதை எந்த பெற்றோரும் பார்த்ததில்லையா. ஒரு குழந்தையைக் குழந்தையாகவே இருக்கவிடுங்கள். அவர்கள் வயதிற்கேற்ற வேலையை செய்வதையே ஏதோ சாதனையைப் போல் கொண்டாடத் தேவையில்லை. அது அவர்களுக்கும் அவர்களைப் பற்றிய மிகை பிம்பத்தை ஏற்படுத்தி, அடுத்தவர்களையும் ஏளனப்படுத்தும். அதையுந்தாண்டி, ஒரு வளர்ந்த, அறிவார்ந்த சமூகம் தன் பிள்ளைகளைப் போலவே அடுத்தவர்களின் பிள்ளைகளையும் பாவிக்க முயல வேண்டும். இப்படி அடுத்த பிள்ளைகளின் தோல்விகளில், ஆற்றாமைகளில் தன் பெருமிதத்தைத் தேடாது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், என் பையன் பொறந்த உடனே அவனா மூச்சு விட்டான், நான் எந்த ஹெல்ப்புமே பண்ணாம அவன் மண்டைல அவனுக்கா முடி மொளச்சுச்சு போன்ற பெருமைகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்ட் செய்தாவது முடியை நட்டுக்கொள்கிறோம். முடியல…
நல்ல பதிவு செந்து..
ReplyDeleteமனுஷங்க பேச எதாவது வேணுமே. இப்டி பேசலனா வன்மத்த கக்க ஆரம்பிச்சிடுவாங்களே.
ReplyDeleteஅப்படி பேசுவதுதான் வன்மம். என் கேள்வியும் அதுதான். இரண்டு மனிதர்கள் சந்திக்கும் பொழுது பேசுவதற்கு இந்தச் சமூகத்திடம் ஏதும் இல்லையா?
Delete