நீண்ட நாட்கள் கழித்து இன்று ஒரு திரைப்படம் பார்த்தேன். "மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங்க்". எதேச்சையாக யூடியூபில் உலவும் போது கண்ணில் பட்டது. காட்சி துணுக்குகளாகவே முழுப்படமும் இருந்தது. இப்படத்தைத் காண என்னைத் தூண்டியது என்னவெனில், நான் பார்த்தது படத்தின் க்ளைமேக்ஸிற்கு முந்தைய காட்சி. படத்தின் நாயகன் புதுமுகம் போலிருந்தார். ஆனால் ஏனோ முதல் பார்வையிலேயே அவரை ஹீரோ என்று மனம் ஒப்புக்கொண்டுவிட்டது. அவரின் நடிப்பு ஒன்றும் ஆஹா ஓஹோ என்றிருந்தது என்று சொல்லவரவில்லை. சில இடங்களில் உணர்ச்சிகளை வெளிக்கொணர திணறினாலும் சில இடங்களில் மிகைநடிப்பாக இருந்தாலும் ஓரளவிற்கு சமாளித்து மொத்த படத்தையும் ஒரு ஹீரோவாக தாங்குகிறார் என்றே எனக்கு தோன்றியது. அவருக்காகவே அத்திரைப்படத்தைப் பார்த்தேன். காமெடி நன்றாகவே வருகிறது அவருக்கு. வரும் காலங்களில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நடிப்பை மேம்படுத்திக் கொண்டால் ஹரிஷ் கல்யான், கவின், ரியோ ராஜ் வரிசையில் வருவார்.
படத்தின் கதை மிகவும் பழைய, எளிமையான கதைதான். கல்லூரி முடித்து வெட்டியாக திரியும் ஹீரோ, அவருக்கொரு காதல், அது நிறைவேறியதா என்பதுதான் கதை. இதற்கிடையில் இலக்கின்றி திரியும் ஹீரோ வாழ்வில் தனக்கான துறையை கண்டடைகிறார். ஆரம்பத்திலிருந்தே காதலை சினிமாப் பாணியிலேயே கையாண்டு, ஒரு தலைக் காதலாகவோ, டார்ச்சர் செய்தோ பெண்களை சரியாகப் புரிந்து கொள்ள தெரியாமல் தடுமாறும் கதாப்பாத்திரத்தின் மூலம் சமகால காதலையும் இளைஞர்களின் உறவுச் சிக்கல்களையும் பிரதிபலிக்க முயன்றுள்ளனர்.
நாயகனின் சிக்கல் இதுதான். மற்ற விஷயங்களில் இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தாலும் “காதலில்” மட்டும் இன்னும் அவன் “யூத்”, “ஷாஜகான்” விஜய் காலத்திலேயே வாழ்கிறான். நாயகி சாதாரணமாகச் சொல்லும் ‘லவ் யூ’ விற்கும் ‘ஐ லவ் யூ’ விற்கும் வித்தியாசம் தெரியாமல் அவள் தன்னைக் காதலிப்பதாக நாயகன் புரிந்து கொள்கிறான். அது ஒரு நாள் நாயகிக்கு தெரிந்து பிரச்சனையாகும் பொழுது, தான் எப்பொழுது அவனைக் காதலிப்பதாகச் சொன்னேன் என்று கேட்டு இரண்டிற்குமான வித்தியாசத்தை விளக்கினாலும் அவன் அதை ஏற்க மறுக்கிறான். நான் ஹார்ட்டு அனுப்புனா திரும்பவும் நீ ஹார்ட்டு அனுப்புனீயே என்றால், நீ அனுப்பியது எல்லோவ் கலர் ஹார்ட்டு- அது பிரண்ட்ஷிப் ஹார்ட்டு என்கிறாள். சரி நைட்டெல்லாம் போட்டோ அனுப்பினீயே என்றால், அதெல்லாம் மத்தவங்களுக்கும் தான் அனுப்புவேன் என்கிறாள். நாயகனை இந்தத் தலைமுறைக்கு ஏற்றவனாய் இருக்கச் சொல்கிறாள். ஆனால், ஆண்-பெண் உறவு குறித்த தற்போதைய “டிரெண்ட்” ஏதும் தெரியாமல் மீண்டும் அவளை டார்ச்சர் செய்து, கெஞ்சி அவமானப்பட்டு, இறுதியில் தன் குடும்பத்தாராலே நிராகரிக்கப்பட்டு, காதலைக் குறித்த தன் தங்கையுடான உரையாடலின் போதே நாயகனுக்கு உண்மை புரிகிறது.
இதில் இன்னொரு முரண் என்னவென்றால், படம் நாயகனுக்கு தற்போதைய காதல் குறித்து புரியவைக்க முயலும். ஆனால், இந்தத் தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பும் நாயகிக்கும் ஒரு கட்டத்தில் தான் காதலிக்கும் வேறொரு நபருடன் இதே பிரச்சனை எழுகிறது. அவன் நாயகியுடன் டேட்டிங்க் செய்து கொண்டே வேறொரு பெண்ணுடன் லிவ்வின் உறவில் இருந்ததை மறைக்கிறான். இது நாயகிக்கு பிரச்சனையாய்படுகிறது. லிவ்வின் வேற, கல்யாணம் வேற என நாயகிக்கு விளக்க முயன்று, அவனும் நாயகியிடம் இந்த தலைமுறைக்கு ஏற்றலளாய் இருக்கச் சொல்கிறான். இதில் மூவரும் ஒத்த வயதுடையவர்கள்தாம் எனும் பொழுது யார்தான் இந்தத் தலைமுறையாக வாழ்கின்றனர்.
சரி, உறவுகளின் புரிதல்கள் வர்க்கரீதியாக மாறுபடலாம் என்றாலும் நாயகியும் அவர் காதலிக்கும் நபரும் கிட்டதட்ட ஒரே நிலையில் இருப்பவர்கள் போல்தான் தெரிகிறது. இருந்தும் ஏன் இத்தனை பிரச்சனைகள். முன்பு எப்போதும் இல்லாத வகையில் தொழில்நுட்பமும் வேலைச்சூழலும், ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகும் சாத்தியங்களை அதிகரித்துள்ளது. அது காதலில், பல சிக்கல்களையும் உண்டுபண்ணுகிறது. நட்பு- காதல்- திருமணம் என்று இருந்த உறவுகளின் வரிசையெல்லாம் தாண்டி பல காலங்கள் ஆகிவிட்டன. லிவ் வின், ஷிச்சுவேஷன்ஷிப், ஒன் நைட் ஸ்டேண்ட் என்பதையும் தாண்டி ஆண்-பெண் உறவுகளில் பல்வேறு வகைகள், நிலைகள் வெவ்வேறு பெயர்களில் உலவுகின்றன. எல்லோராலும் எல்லாவற்றையும் புரிந்து ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது "யூத்" விஜய் வகையறாக்கள் தாம். காதலோ, லிவ் இன்னோ, திருமணமோ எதுவாயினும், ஒரு உறவுக்குள் நுழையும் முன்பே அந்த உறவில் என் நிலை இதுதான், உன் நிலை என்ன என்று தெளிவாகக் கேட்டுத் தெரிந்து அது இருவருக்கும் ஒத்துவருமாயின் அப்பொழுதே அந்த உறவுக்குள் இறங்க வேண்டும்.
படத்தின் இறுதியில் நாயகி எடுக்கும் முடிவு ஏற்புடையதாக இல்லை. நாயகிக்கு இயல்பாய் நாயகனின் மீது காதல் வருவதில்லை. அவனைப் போன்று தானும் ஒரு சூழலைச் சந்தித்ததற்காகவே அவன் தான் உண்மைக் காதலன் என அவனை ஏற்பதென்பதெல்லாம் “யூத்” காலத்து முடிவுதான். படக்குழுவினரை இந்தத் தலைமுறைக்கு ஏற்றவர்களாய் வரச்சொல்வோம்.
இப்படத்தில் எனக்கு பிடித்தமான காட்சி ஒன்றைச் சொல்ல வேண்டும். நாயகனும் நாயகியும் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பொழுது நாயகி, எழுந்துச் சென்று ஆர்டர் சொல்லிவிட்டு வருகிறேன் என கிளம்புவார். அங்கே கடைக்காரரிடம் ஆர்டர் சொல்லிவிட்டு, வார இறுதியில் தன் நண்பர்களுடன் வருவதாகவும் அதற்கு டேபிள் புக் செய்யச் சொல்லியும் சொல்வார். திரும்பி வந்து அமர்ந்ததும் நாயகன் “என்ன” என்று கேட்பான். அதற்கு ‘சும்மா’ என பதில் அளிப்பாள். அவ்வாறு கூறுவதை ஒரு நவீன தீண்டாமை என்றே சொல்வேன். இத்தனைக்கும் நாயகி அப்பொழுது அவனை பெஸ்ட் பிரெண்ட் என்றே சொல்லி வருவாள். வேறு சில நண்பர்களுடன் அவள் அங்கு வருவதாகவே இருக்கட்டும். தெரிந்தால் மட்டும் என்ன பெரிதாக சொல்லிவிடப் போகிறான். சாதாரணமாக இதுதான் விஷயம் என்று சொல்வதில் என்ன இருக்கிறது. எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், நம்மை கூடவே வைத்து சுற்றிக்கொண்டு எதைக் கேட்டாலும் “சும்மா”, “ஒன்னுல்ல”, “ம்ம்ம்” என்பதில் ஒரு தந்திரம் இருக்கிறது. அது “யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைப்பது” என்பதுதான். நான் உன் கூடவே இருப்பேன், உன் தோளில் கை போடுவேன், எச்சில் தம் கூட அடிப்பேன் ஆனால் என் வீட்டிற்குள் உனக்கு வர அனுமதியில்லை என்பதற்கும் அதற்கும் வித்தியாசமில்லை.
எல்லா காலகட்டத்திலும் அக்காலகட்டத்தைப் பிரதிபளிக்கும் காதல் படங்கள் சீரியசாகவோ நகைச்சுவையாகவோ வந்துக்கொண்டுதான் இருக்கும். இது அப்படியொரு காவியக் காதல் படம் இல்லையெனினும் ஒரு இலகுவான பொழுதுபோக்கு படம் என சொல்லலாம். ஊரெங்கிலும் தோட்டாக்களும் பீரங்கிகளும் வெடிக்கும் சத்தமே கேட்கும் தமிழ் சினிமாவில் இப்படியொரு திரைப்படம் வந்ததே ஏதோ காணாததைக் கண்டது போலிருக்கிறது.

Comments
Post a Comment