கனவு- 1
இன்றைய மதிய வேளை தூக்கத்தில் ஒரு வினோதமான கனவு. எவருடைய வீடென்று தெரியவில்லை. எப்படியோ அவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். வீட்டிற்கு வெளியே திண்ணைக்கு அருகில் ஒரு சைக்கிளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதன் ஹேண்டில் பாரில், உடலில் பெரும்பாலான பகுதிகளில் நீலமும் சில பகுதிகளில் கருமையும் கலந்த நிறத்தில் ஒரு சிறிய பறவை அமர்ந்திருக்கிறது. அழகாக இருக்கிறதே என்று அதனருகே சென்று அதனைத் தொட முயற்சிக்கிறேன்.
என்னவொரு ஆச்சரியம், அசையாமல் சிறு சினுங்களோடு அப்படியே அது இருக்கிறது. . சரி என்று அதன் முன் பக்கம் சென்று பார்த்தால். அதன் அலகு அகன்று திறந்திருக்கிறது. உள்ளே பார்த்தால், ஒரு பறவையின் கூடும் அதில் இரண்டு குஞ்சுகளும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அந்த நொடியே அதிர்ச்சியில் தூக்கம் களைந்து எழுந்துவிட்டேன்.
திடீரென்று இப்படி ஒரு கனவு வந்திருக்கிறதே என்று நிதானத்திற்கு வந்த பிறகு யோசித்தேன். அது ஒன்றுமில்லை, இரண்டு நாட்களாக ஒரு காக்கையினால் துறத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் தங்கியிருக்கும் விடுதிக்கு அடுத்திருக்கும் அரசமரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி குஞ்சு பொரித்திருக்கிறது. அதனை சுற்றிலும் மற்ற காக்கைகளிடமிருந்து பலத்த பாதுகாப்பு. இரண்டு நாட்களுக்கு முன்பு மாடிக்குச் சென்றிருந்தபோது ஒரு காக்கை கரைந்துக் கொண்டிருந்தது. சும்மா இல்லாமல் அதனை விரட்டிவிட்டேன். அதுவும் பறந்துவிட்டு சிறிது நேரம் கழித்து, நடந்துக் கொண்டிருந்த என்னை பின்மண்டையிலே ஒரு தட்டு தட்டிவிட்டுச் சென்றது.( நல்லா வேணும்டி உனக்கு) நேற்று காலையில் அது இருக்கும் திசை பக்கமே திரும்பாமல் வேறொரு பக்கம் நடையில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுதும் நான் எதிர்பாக்காத நேரத்தில் நடுமண்டையில் ஒரு குட்டு குட்டிவிட்டுச் சென்றது. அய்யோ என்னடா நமக்கு வந்த சோதன என்று கீழே ஓடி வந்துவிட்டேன். நேற்று நாள் முழுவதும் பல முறை அச்சம்பவத்தை நினைத்திருந்தேன். அதன் தாக்கம் தான் இன்று கனவாய் வந்திருக்கிறது போல.
11. 08. 2025
கனவு- 2
வானில் விமானங்களைக் காணுகையில் எப்பொழுதுமே எனக்கொரு பயமுண்டு. எங்கே அப்படியே கீழே விழுந்து நொறுங்கிவிடுமோ என்று. அதுவும் இரவு நேரங்களில், ஏதோ நீளமான பேருந்து ஒன்று விளக்குகள் ஒளிர மிதந்நுச் செல்வது போலவும் அடுத்த நிறுத்தம் வந்தால் பிரேக் போட்டு நிறுத்தினால் அப்படியே கீழே விழுந்துவிடுமே என்றும் அச்சமாக இருக்கும். அதனால் தான் சமீபத்திய அகமதாபாத் விமான விபத்து குறித்து கூட எந்தச் செய்தியையும் நான் வாசிக்கவில்லை. ஆனாலும் எப்படியோ விபத்து குறித்து பிறர் சொல்லும் கதைகள் செவிவழி கேட்டு மனதில் பதிந்துவிட்டது போல.
நான் ஊரில் என் வீட்டில் இருக்கிறேன். பகலில் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். வானில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானம் செங்குத்தாக எங்கள் தெருவின் சாலையில் கீழே விழுந்து இரண்டாக பிளக்கிறது. விமானத்திலிருப்பவர்களின் அலறல் கேட்கிறது, எங்கள் தெருவிலிருப்பவர்கள் ஓடிச்சென்று அவர்களைக் காப்பாற்றுகின்றனர், நானும் பயந்துக் கொண்டு ஓடுகிறேன் என்னவெல்லாமோ நடக்கிறது. விபத்தில் காயமுற்றவர்கள் சிலரை என் வீட்டில் தங்கவைக்கிறேன். புயல் ஓய்ந்த கதையாக விபத்தின் களேபரங்கள் ஓய்ந்து அமைதியாக வீட்டில் அமர்கிறேன். ஏதோ ஒரு பலத்த சத்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்து பார்க்கிறேன், மீண்டும் ஒரு விமானம் தெருவில் கவிழ்ந்து கிடக்கிறது, பகலில் நடந்த அதே காட்சிகள் மீண்டும் தொடர்கிறது. அப்பொழுதுதான் எனக்கு நினைவு வருகிறது, முந்தைய இரவு ஒரு விமானம் வானிலிருந்து கீழே விழுவதாய் ஒரு கனவு கண்டிருக்கிறேன். நமக்கு நடக்கப் போறதெல்லாம் கனவா வருதோ….இல்ல நமக்கு கனவு வந்ததாலதான் இப்பிடிலாம் நடக்குதோ….என பலவாறு யோசித்து குழம்பிக் கொண்டே இருக்கிறேன்... நல்லவேளையாக காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்து தூக்கத்தை களைத்து என் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
30. 07. 2025
கனவு- 3
விடியற்காலை
இந்த மாத மின் கட்டணம் 615 ரூபாய் என வாட்ஸாப்பில் குறுஞ்செய்தி வருகிறது. எப்புடி இந்த மாசம் இவ்வளோ வந்திருக்கு... என யோசித்துக் கொண்டேயிருக்கிறேன் தூக்கம் களைந்து எழுந்துவிடுகிறேன்.
மாலை 5 மணி
ரூம் மேட் அக்கா: என்ன இந்த மாசம் 625 ரூபா ஈ.பி பில் வந்திருக்கு….
05. 08. 2025
Comments
Post a Comment