கையில் நூலெடுத்து வாசிப்பதற்கு ஒரு நாளில் ஒரு மணி கூட இல்லாத சமயத்தில், தஸ்தயேவ்ஸ்கியியை வாசிக்கலாம் என்ற திட்டமும் இல்லாமல், எப்படி வெண்ணிற இரவுகளை கையிலெடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. பனி படர்ந்த ஆளரவமற்ற சாலையில், பத்தடி தூரத்தில் மங்கலான ஒளியில் ஒரு மனித உருவம் உங்களை நோக்கி வருகிறது. நெருங்க நெருங்க மெல்ல அதன் நடை, உருவத்தோற்றத்தில் ஏதோ ஓர் உள்ளார்ந்த பரிச்சயம் தெரிகிறது. எதிரில் நேருக்கு நேர் அதன் முகத்தைக் காண்கிறீர்கள். அச்சு அசப்பில் அது நீங்கள் தான். அந்தக் கணத்தில் எப்படியொரு தாங்கொணா அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாவீர்கள். வெண்ணிற இரவுகளை வாசிக்கையில், அதன் நாயகன் தன் கதையைச் சொல்ல சொல்ல அப்படியொரு அதிர்ச்சியிலும் சொல்லவியலா ஏதோ ஓர் உணர்வாலும் பீடிக்கப்பட்டேன்.
சிறு வயதிலிருந்தே "வித்தியாசமானவள்" எனும் அடைமொழியைச் சுமந்து திரியும் எனக்கு(அப்படி திரிவதில் கொஞ்சம் பெருமையே ஆயினும்) நாம நெஜமாவே "அப்நார்மலோ" என்று பல முறை என்னை நானே சந்தேகித்து வருந்திய நாட்கள் உண்டு. அதை தகர்த்தெறிந்தது சாரு நிவேதிதாவின் "எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்" வாசித்த போதுதான். ஆனால் என்னையே ஒரு கதாப்பாத்திரமாகக் கண்டது இக்கதையில் தான். அவன் நானே தான். அவனைப் போல் ஓர் உன்னதமான காதலியையும் காதலுக்கும் நான் ஏங்கவில்லை. அவ்வளவுதான். ஒருவர் போல் இன்னொருவர் ஏன் இல்லை என்று கேட்பது எவ்வளவு பெரிய வன்முறை. இவ்வுலகில் யாருமே யாரைப் போலவும் இருக்க முடியாது. ஆனால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி இருந்தால் தான் நார்மல் என்று பயமுறுத்தி உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மந்தையில், தன்னை இணைத்துக் கொள்ள இயலாமல் தத்தளிக்கும் ஆத்மாக்கள் ஏராளம். எங்கு செல்லினும் புறக்கணிப்பே அவர்களுக்கு மிச்சம். தன்னைப் போன்ற, தனக்கான ஆள் யாரென்று தேடித்தேடியே, அதில் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்து தனியே ஒடுங்கிப் போய் திரிபவர்களுக்கு அநேகமாய் இடமளிப்பது இலக்கியமாகத் தான் இருக்க முடியும்.
மனிதனுக்கு நகரத்தின் சிடுக்குகளிலிருந்து மீண்டு கிராமங்களை, இயற்கையை நோக்கி ஓடி திமுதிமுவென வீழ்ந்துவிடும் ஆவேசம் நகரமயமாகாக்கலின் தொடக்கத்திலிருந்தே இருந்திருக்கிறது. இக்கதையில், பல இடங்களில் அதனைக் காணலாம். கிட்டத்தட்ட நாயகனின் அகச்சிக்கல் அதையொத்தது எனலாம். என்றுமே அவன் மனம் தனக்கு இணக்கமான, உன்னதமான நிஜ மனிதர்களுக்காக, காதலிக்காகவே காத்திருக்கிறது. ஆனால் அவனின் அதீத கூச்சசுபாவமும் தயக்கமும் பெண்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் அவனை விலக்கி வைக்கிறது. அவனொரு தனிமை விரும்பி என எளிமையாக அவன் குணாதிசயம் குறித்து நாமொரு முன்முடிவிற்கு வந்துவிட முடியாது.
நாயகனின் இளம் பிராயம் குறித்து கதையில் எந்தத் தகவலும் இருக்காது. ஆனால் தொடர்ச்சியான சில துயரமான சம்பவங்களாலும் அவமானங்களாலும் பாதிக்கப்பட்டு, தன்னுடைய தனித்துவமான குணாம்சத்தினால் எவருடனும் ஒன்ற இயலாமல், உலகமே தன்னை நிராகரித்துவிட்டதாக எண்ணித் தவிக்கும் நாயகனுக்கு தனக்கேயான, தான் உருவாக்கும் கற்பனை உலகம் ஒரு தற்காலிக விடுதலையை அளித்திருக்கலாம். இவ்வுலகம் அவனுக்கொரு மாய இன்பத்தை அளித்தாலும் அது நிரந்தரமாகி தன் மிச்ச வாழ்வும் அப்படியே கழிந்துவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. அவன் வாழும் வாழ்க்கையே ஒரு பெருங்குற்றமாக, பாவமாக எண்ணுகிறான். என்றாவதொரு நாள் யாரிடமாவது ஒப்பித்துவிட வேண்டும் என அவன் தயாரித்து வைத்திருந்த தன் கதையைச் சொல்லக் கிடைத்தவள் தான் நாஸ்தென்கா. அன்றாட பணிகளை முடித்துவிட்டு, தனியாக பீட்டர்ஸ்பெர்க் நகரைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஓர் இரவில், ஆற்றங்கரையோரத்தில் தனித்திருந்தவளிடம் சந்தர்ப்பவசத்தால் உரையாட நேர்கிறது. இருவரும் தங்களின் கதைகளைப் பறிமாறிக் கொள்ள, தான் இத்தனை நாட்கள் தேடி வந்த உன்னதமானக் காதலியைக் கண்டடைந்ததாக நினைக்கிறான் நாயகன்.
காதலைக் குறித்து எத்தனை ஆண்டுகள் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் தீராது போல. சந்தேகமே இல்லாமல் காதல் கிறுக்குத்தனமானதுதான். தன்னைக் காதலித்த நாயகனின் அண்மையில் எது காதல் என்று உணர்ந்ததாய்க் கூறுகிறாள் நாயகி. ஒரு வருடம் கழித்து சந்திப்பதாய் உறுதியளித்த காதலன் சற்று தாமதமாய் வருகிறான், அதுவரை அவனாள் தன் காதல் ஏளனப்படுத்தப்பட்டதாய் துடித்தவள், அந்த ஒரு கணத்தில், இவனுக்கு சில முத்தங்களை பரிசாய் அளித்துவிட்டு உடனேயே ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொள்கிறாள். அந்த இடைப்பட்ட நேரத்தில் நாஸ்தென்காவிற்கும் நாயகனுக்கும் இருப்பது என்ன? உண்மையில் அவள் யாரை தான் காதலிக்கிறாள்? யாருடனான காதல் மெய்யானது?
உண்மையில் அவள் இருவரையும் தான் காதலிக்கிறாள். காதல் எழுதி வைக்கப்பட்டது, நிரந்தரமானது வாழ்க்கையில் ஒரேயொரு முறை ஒருவருடன் தான் ஏற்படும் என்றெல்லாம் இல்லை. காதல் சந்தர்ப்பவசமானதும் கூட. நாயகனும் நாஸ்தென்காவும் தங்களின் துயரங்களிலிருந்து தங்களை மீட்கவிருக்கும் மீட்பர்களாகவே அவர்களுக்கு வரவிருக்கும் காதலர்களைக் காண்கிறார்கள். சிறு வயதிலிருந்து தனிமையில், கண்காணிக்க இயலாமல் தன்னை தன் சேலையுடன் ஊக்கிட்டுக் கொண்டிருக்கும் பாட்டியுடன் சிறையிலிருப்பது போல் வாழும் நாஸ்தென்காவிற்கு மேல்வீட்டில் குடிவந்த கண்ணியமான இளைஞனின் காதல் விடுதலை அளிக்கும் என நினைக்கிறாள். ஒருவேளை, அவனைத் தவிர வேறு யாராவது அவனையொத்திருந்தவனாய் இருந்திருந்தால் அவன் மீதும் காதல் வந்திருக்கலாம். நாயகனும் அவளைச் சந்திப்பதற்கு முன்பே ஒரு கணிவான பெண்ணைச் சந்தித்திருந்தால், அவள் மீது காதல் கொண்டிருக்கலாம்.
நாயகனைக் கைவிட்டு தான் காதலித்தவனுடன் சென்றாலும் அவளின் செயலாள் தான் குற்றவுணர்விற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக, நாயகன் தன்னை வெறுத்துவிடக் கூடாது, அவன் தன்னை எப்பொழுதுமே காதலிக்க வேண்டும் என கோரிக்கை வைக்குமளவிற்கு காதல் சுயநலமானதும்கூட. இக்கதையில் வரும் எல்லா பாத்திரங்களுக்கும் ஒரு துயரம் தோய்ந்த முகமிருக்கிறது. நாஸ்தென்காவின் பாட்டியும் இளமையில் வசதியாக வாழ்ந்து தற்பொழுது இருக்கும் சிரமமான சூழலில் பழைய நினைவுகளில் சுகம் காண்பவள்தான். காதலைக் குறித்து நாஸ்தென்காவுக்கு அவள் கூறும் எச்சரிக்கைகளைப் படிக்கையில் உலகம் முழுவதும் எல்லா காலத்திலும் இப்படித்தான் பெண்களை பயமுறுத்தியிருப்பார்கள் போல என்று தோன்றியது. நாஸ்தென்காவின் காதலனும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஒரு இளைஞன். இப்படி கதை முழுக்க வரும் எல்லா பாத்திரங்களும் துயரைச் சுமந்து சென்றாலும், இது முழுவதும் ஒரு அழுகாச்சி காவியமாக இல்லை. அநேகமாய் நாயகன் பாத்திரம் தஸ்தயேவ்ஸ்கியாகத்தான் இருக்க வேண்டும். உரையாடல்கள் பல இடங்களில் நான் பேசுவதைப் போலவே இருந்தன. "பெண்களுடன் எப்படிப் பழகுவதென்பதையே மறந்துவிட்டேன். இல்லை. என்றுமே அவர்களுடன் பழகி அறியாதவன் நான்". இந்தப் பாணியிலேயே எனக்குத் தெரியாத பல விஷயங்களை நான் கூறுவேன்.
தஸ்தயேவ்ஸ்கியின் நூல்கள் எதையுமே நான் வாசித்ததில்லை. நம் மனதை எந்த பயமும், தயக்கமும் இன்றி திறந்து காட்ட உலகிலேயே சிறந்த இடம் ஒரு இலக்கிய பிரதியாக தான் இருக்க முடியும். இக்கதையில் வரும் பாத்திரங்கள் அவர்களின் மனதை நமக்குத் திறந்து காட்டுகையில், நாமும் நம்மைத் திறந்து அவர்களின் வழியாக நம்மைக் காண்கிறோம். அதுவே இக்கதையின் சிறப்பு. என்னதான் கிராமத்திலிருந்து அனைத்தையும் பிடுங்கி பண்ணையாரால் துரத்தியடிக்கப்பட்டு தப்பிக்க நகரத்திற்கு வந்தாலும் அங்கும் தன் பசுமையான கிராம நினைவுகளிலேயே திளைத்திருப்பது போல், நாஸ்தென்காவுடனான நான்கு இரவுகள், ஒரு பகலை நினைத்தே தன் மீத வாழ்வையும் நாயகன் கற்பனையிலேயே வாழ முற்படுவதாக முடிகிறது கதை. 1848ல் எழுதப்பட்டு கிட்டதட்ட இருநூறு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்து பிறக்கப்போகும் தன்னைப் போன்ற சிசுவுடனும் இணைத்துக் கொள்வான் இதன் நாயகன்.

Comments
Post a Comment