பேஸ்புக்கில் ஒருவர் எழுதிய பதிவை வாசித்து, ‘காஸ்ட் அவே’ திரைப்படம் பார்த்தேன். திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. கடிகாரத்தில் முள்ளாக நேரத்தை துரத்திக் கொண்டிருக்கும் நாயகன் (டாம் ஹேன்க்ஸ்) டெலிவரி நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். புத்தாண்டின் மாலைக்குள் திரும்பி வருவதாக காதலியிடம் உறுதியளித்துவிட்டு டெலிவரி சம்பந்தமான பிரச்சனை ஒன்றை தீர்க்க மலேசியாவிற்கு விமானத்தில் செல்கிறார். பசிபிக் பெருங்கடலின் மேலே பறந்து கொண்டிருக்கையில் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி, அவருடன் பயணித்தவர்கள் இறந்து விட, நாயகன் மட்டும் தப்பி ஒரு தீவில் கரை ஒதுங்குகிறான். அதன் பிறகு அத்தீவில் அவனுக்கு என்ன நடக்கிறது, மீண்டும் தன் வீடு திரும்பினானா என்பது தான் கதை. கதையைக் கேட்கவே விறுவிறுப்பாக இருக்கிறதல்லவா, படமும் அப்படித்தான். இரண்டரை மணிநேரம் சென்றதே தெரியவில்லை.
படத்தில் எனக்குப் பிடித்த அம்சம் எதையும் மிகையாகக் காட்டாதது தான். படத்தின் முதல் முப்பது நிமிடங்களில் நாயகனின் குணாம்சத்தை விளக்க மிகக் கச்சிதமாகக் காட்சிகளை அமைத்திருந்தனர். படத்தில் நாயகனான டாம் ஹேன்க்ஸின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. இப்படத்தின் கதையைக் கேட்கும் பொழுது உடனடியாக தமிழில் ஒரு திரைப்படம் நினைவிற்கு வந்தது, "நவீன சரஸ்வதி சபதம்". அப்படியே காஸ்ட் அவேயின் கதை, காட்சிகளை உருவியெடுத்து கொஞ்சம் உள்டாவாக்கி நகைச்சுவையாக எடுத்திருப்பார்கள். அப்படத்தைக் காணுகையில் நமக்கு பல கேள்விகள் எழும். அதெப்படி இத்தனை மாத காலமாக கிடைக்கும் உணவு, தண்ணீரை வைத்து வாழ்ந்து, எல்லோரும் அதே உடலமைப்பில் இருக்கிறார்கள்? யாருக்கும் தனிமை உணர்வு வராதா? என்பது போல் பல.
காஸ்ட் அவேயில், ஆளரவமற்ற தீவில் மாட்டிக்கொண்டு, தனிமையில், உயிர் பிழைக்கவும் அங்கிருந்து தப்பிக்கவும் அவன் எடுக்கும் பிரயத்தனங்கள் உடல் மொழியிலும் உருவ மாற்றத்திலும் நாயகன் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். இவ்விடத்தில் தமிழ் சினிமாவில், நடிகர் விக்ரமைக் குறித்து சொல்லுவதற்கு ஒன்றுள்ளது. கதாப்பாத்திரத்திற்காக உருவத்தை மாற்றுவதற்காக அவரின் உழைப்பு வெகுவாக பாராட்டப்படவும், அதற்கான உரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இங்குள்ளது. ஒரு படத்தின் கதையோட்டத்தில் கதாப்பாத்திரத்திற்கு ஏற்படும் மாற்றங்கள், அதன் தன்மை தான் இயல்பாக அதன் உருவ, உடல் மாற்றத்தை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். இல்லையெனில், வெறுமனே மாறுவேடப் போட்டியில் பங்கேற்பதுபோல் தான் பயனின்றி நடிகரின் உழைப்பு வீணாகும். விக்ரம் நடித்த தங்கலானை எடுத்துக் கொண்டால், அப்படத்தின் திரைக்கதையும் எக்ஸிகியூஷனும் பலவீனமாக இருக்கும். அதனால் விக்ரமின் கெட்டப்பால் மட்டும் அப்படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அதுபோல் தான் பல படங்களில் அவர் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் தராமல் வெறுமனே தன்னுடைய அர்பணிப்பைக் கொட்டுகிறேன் என்று அவர் எடுக்கும் பல முயற்சிகள் வீணாகின்றன. காஸ்ட் அவேயின் கதைக்கு ஏற்ப நாயகனின் உடலமைப்பின் மாற்றங்கள் சரியாக பொருந்தியிருக்கும்.
தீவில், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நெருப்பை வரவைத்த பொழுது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் இப்படத்தின் உச்சம் எனலாம். நான்கு வருடங்கள் அவனுக்கு இடமளித்த தீவை விட்டு கிடைக்கும் பொருட்களை வைத்து செய்த தெப்பத்தின் மூலம் கடலுக்குள் செல்கையில், சிறிது பிரிவுத் துயர் நமக்கும் நிச்சயம். கரை ஒதுங்கிய பார்சலில் கிடைக்கும் வாலிபால் பந்துடன் அவனுக்கிருக்கும் உறவு அவனைப் பெரிதும் தனிமையில் சிக்காமல் மீட்கிறது.
நிற்க நேரமில்லாமல், தன் காதலி கொடுக்கும் பரிசில் கூட கவர் நல்லாருக்கு, பாக்ஸ் நல்லாருக்கு என்று தன் தொழிலின் சிந்தனையிலேயே திரியும் ஒருவன், திடீரென தனியாக தப்பிக்க இயலாமல் தீவில் மாட்டிக்கொள்கிறான். காலம் அவனுக்கு அங்கே உறைந்துவிடுகிறது. அதன் பிறகு அவனுக்கு நேரத்தைக் குறித்து, உறவுகள், மனித வாழ்வின் அர்த்தம் குறித்தெல்லாம் எழும் கேள்விகளையோ புரிதல்களையோ காட்டியிருந்தால் மிகச்சிறந்த படமாக இது வந்திருக்கும்.
அவன் தப்பித்து ஊர் திரும்பிய பின்னரும் கூட, நாயகன் தான் இல்லாத பொழுது அங்கு நடந்த மாற்றங்களைக் கண்டு, வாழ்வின் அபத்தங்கள் குறித்த அவனுடைய பார்வைகளையோ மனவோட்டங்களையோ நம்மால் பெரிதாக அறியமுடிவதில்லை. தீவில் மாட்டிக்கொண்ட புதிதிலும் உடனே உடனே அவன் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வதை அடுத்தடுத்த காட்சிகளில் காட்டிவிடுகின்றனர். மைண்ட் வாய்ஸை உபயோகிக்காதது பெரிய ஆறுதல்தான். ஆனால் நாயகனின் அகக்கண்ணோட்டத்தையும் நம்மால் அறிய முடிவதில்லையே. அதனால் ஒரு விறுவிறுப்பான சர்வைவல் ட்ராமாவாக படம் முடிவடைந்து விடுகிறது. சில குறைகள் இருப்பினும் ஒரு நல்ல சினிமா அனுபவத்தை இப்படம் நமக்களிக்கும்.

Comments
Post a Comment