தோழியொருத்தி அளித்த பேய்க்கதையின் உபயத்தால், இரவு முழுவதும் மணிக்கொருமுறை விழிப்பு வந்து அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தேன். விடியற்காலையில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழிப்பு வந்து, கதவைத் திறந்தேன். ஒரு கையில் பேகுடன், இன்னொரு கையில் டிராலியை இழுத்துக் கொண்டு ஒருவள் அறையினுள் நுழைந்தாள்.
"அந்தக் காட் எனக்குக் குடுத்திருக்காங்க" என்றாள்.
அந்தக் கட்டில் மற்றும் இன்னொரு கபோடினில் பரப்பி வைத்திருந்த என்னுடைய பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கையில் என்னமோ கேட்டாள் அவள். தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் என்னமோ உளற, தேமே என்று விழித்தாள்.
"நான் ஃப்ரெஷ் ஆய்ட்டு வரேன்" என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தேன். "நல்ல வேல, நைட்டு ஃபுல்லா இன்னும் எத்தனை நாளைக்கு ரூம்மேட் இல்லாம தனியா நேத்து மாரி பயந்துகிட்டு இருப்பமோனு நெனச்சிட்டிருந்தோம். எப்பிடியோ காலைலே ஒருத்தி வந்து சேந்துட்டா. பாக்க ஓரளவுக்கு நல்ல புள்ளயாதான் தெரியுறா. செட் ஆய்டும்" என பல யோசனைகளுடன் முகத்தைக் கழுவிவிட்டு, குளியலறையைக் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.
"நான் இங்க ஒரு நாள் தான் தங்க போறேன். கெஸ்ட். உங்க பேர் என்ன?" என்றாள்.
(ஹூம்ம்ம்...ச்சை...)மனதிற்குள்.
செந்தமிழ். உங்க பேரு? ஊரு? போன்ற சம்பிரதாயமான சில கேள்விகளை மாறி மாறி சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தோம். என்னுடன் பேசிக்கொண்டே, அதே நேரத்தில் தன் பையிலிருந்த பொருட்களை வெளியில் எடுத்து வைத்துவிட்டு, மெத்தை விரிப்பு, தலையணை உறையையெல்லாம் போட்டு நேர்த்தியாக படுக்கையைத் தயார் செய்துவிட்டிருந்தாள் அவள். அவளுடன் பேசிய அந்த குறுகிய நேரத்திலேயே அவள் மேல் எனக்கொரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தாலும், ஒரு நாள் தானே இருக்க போகிறாள் என்று நான் பெரிதாக அவளிடம் ஈடுபாடு காட்டவில்லை.
"நீங்க என்ன பண்றீங்க?" என்றாள்.
"டி.என்.பி.எஸ்.ஸி."
கொஞ்சம் கண்களை விரித்து முகத்தில் மலர்ச்சியுடன், "நானும் டி.என்.பி.எஸ்.ஸி தான். குரூப் 2 க்ளியர் பண்ணி, ASO எடுத்திருக்கேன். நாளைக்கு டிரெயினிங்க்ல ஜாயின் பண்ண வந்துருக்கேன். சென்னைல தான் ஆறு மாசம் இருக்க போறேன்" என்றாள்.
போன வருடம் அதே குரூப் 2 எழுதி தேர்வாகாமல், இந்த வருடமும் அதே குரூப் 2 எழுதி ஒருவாரம் தான் ஆகியிருந்த களைப்பில், சுரத்தையே இல்லாமல் அவள் கூறியதற்கு 'ஓ' என்றேன். இருவருக்கும் ஒரே வயது வேறு. நிச்சயம் அவள் என் முகத்தில் ஒரு சிறிய புருவ தூக்கலையோ ஒரு வாழ்த்தையோ எதிர்பார்த்திருந்தால் என்பது, அவளின் ஏமாற்றம் கலந்த சின்ன புன்னகையில் தெரிந்தது.
"சரி, டயர்டா இருப்பீங்க." என்று அவளை ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன்.
"ஆமா, நைட்டு வர வழில சரியான மழ. ஏசி பஸ் வேறயா, சரியான குளிரு. கொஞ்ச நேரம் கூட தூங்கவேயில்ல. கிருஷ்ணகிரிலே சரியான மழ. அப்பிடி பேயுது. இந்த மாரி மழைய பார்த்ததே இல்ல நான். நான் கூட 'க்ளௌட் பர்ஸ்ட்' ன்லாம் படிச்சிருக்கோமே அதான் நம்ம ஊருக்கு வந்திடுச்சோனு நெனச்சேன்''.
"ம்."
"5. 45 க்கெல்லாம் கோயம்பேடு வந்து எறக்கிட்டான். 5. 55 க்கெல்லாம் ஹாஸ்டலுக்கு வந்துட்டேன். பாவி...பள்ளத்துல கொண்டுபோய் பஸ்ஸ நிறுத்திவெச்சிட்டான் ஊர்ல. மழ வருதுடா அங்க நிறுத்துனா எப்பிடி டா எல்லாரும் ஏறுவாங்கனு கேட்டா கூட, பஸ்ஸூ எப்பயும் அங்க தான் நிக்கும். யார் வந்தாலும் வர்லனாலும் வண்டி இங்க இருந்துதான் கெளம்பும்னிட்டான்...பல்ல கடிச்சிகிட்டு வண்டி ஏறனேன். நேத்துதான் புரட்டாசி சனிக்கெழமைக்கு பெருமாள் கோயிலுக்கு மல ஏறிட்டு வந்தோம். கால் வலி பின்னி எடுக்குது. நேத்து மூணாவது சனிக்கெழம வேறையா சரியான கூட்டம்".
"ம்ம்..."
"எங்க டிபார்ட்மெண்ட் சரியான கூறுகெட்ட டிபார்ட்மெண்டங்க. (என்னது! அதுக்குள்ள எங்க டிபார்ட்மெண்டா...)ஒன்னு தீபாவளி கழிச்சு வெச்சிருக்கலாம். இல்லாட்டி ஆயுத பூஜ லீவுக்கு முன்னாடி வெச்சிருக்கலாம். ரெண்டும் இல்லாம கரெக்டா ஒரு வாரம் லீவு முடிஞ்சு ஒடனே இந்த டேட்ல டிரெயினிங்க் ஆர்ம்பிச்சிட்டான். பஸ்ஸு, டிரெய்ன்லாம் ஒரே கூட்டமா இருந்துச்சு. மத்த டிபார்ட்மெண்ட்லாம் பரவாலங்க. எங்களதுதான் சரியான டார்ச்சர். மெடிக்கல் செக்கப்பே ரெண்டு நாள் கிருஷ்ணகிரி ஜி. ஹெச்ல அலயவுட்டானுங்க. டி. சி. டி. ஓ. எடுத்த அக்கா ஒருத்தங்கலாம் சொன்னாங்க, எங்களுக்கெல்லாம் ஒரேயொரு நாள், ஒரேயொரு ஃபார்ம்ல, ஒரேயொரு சைன். அவ்ளோதான்னு. எங்க டிபார்ட்மெண்ட் டைரக்டர் ரொம்ப ஸ்டிரிக்டாங்க. காலைல 9.30 டூ 5.45 க்ளாஸ்ல இருந்தே ஆகனுங்களாம். நாங்க படிக்கறதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லயாம். அவருபாட்டு நேத்து ஸ்டேஜ்ல சொல்றாரு, "ஃபீல்ட்ல உங்கள பாத்து ஒருத்தங்க கேள்வி கேட்றகூடாது, 'உனக்கு என்ன தெரியும்னு'."
"ம்ம்ம்...."
நாளை தான் அவள் முதல் நாள் வேலையில் சேரப் போகிறாள். அதுவும் டிரெயினிங்க் தான். அதற்குள் எங்க டிபார்ட்மெண்ட், எங்க டைரக்டர் என்று பல நாட்கள் ஆனது போல் அவள் உரிமையாகக் கூறியது எனக்கு கொஞ்சம் வியப்பளித்தது.
"அப்றோம்...."
"ஆங்...நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் போய் சாப்டுட்டு வந்துட்றேன்".
"ம்ம்ம்...இல்ல, காலைல நான் வரப்போ நீங்க நல்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் வேற டிஸ்டர்ப் பண்ணிட்டேன். சாரீ..."
"பரவாலீங்க. நான் எப்பவும் எழுந்திருக்குற டைம்தான்".
அவள் ரெஸ்ட் எடுத்துவிட்டு வருவதற்குள் ஒரு புலம்பல் பத்தியை எழுதிவிட்டு வருகிறேன்.
சென்னையில் எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்று கேட்டால், ஒன்றே ஒன்றை சொல்வேன். இத்தனை வருடங்களில் நான் தங்கியிருந்த ஊர்களில் எல்லாம் நான் அனுபவிக்காத, இந்நகரம் புதிதாக எனக்கு அளிக்கும் சுதந்திர உணர்வை. ஆனால், எனக்குச் சென்னையில் பிடிக்காத பலவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கூறுக என்றால், ஓடிவந்து நான் முதலில் கூறுவது இங்குள்ள மக்களின் பேச்சு. நான் சென்னையில் சந்தித்த பெரும்பான்மையான நபர்கள் அந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான். முதல் சந்திப்பிலேயே, யாரிடமாவது உங்க பேரு என்ன என்று தெரியாமல் கேட்டுவிட்டால் போதும். ஆரம்பிப்பார்கள், என் பேரு, ஊரு , நான்அது பண்ற, இது பண்ற, நேத்து கார்பரேஷன் காரனுக்கும் எனக்கும் சண்ட, நான் தான் ஜெயிச்சேன்...என வெறிகொண்ட கோரைப்பற்களுடன் நம்மை கடித்து குதற வருவார்கள். ஏன்டா உன் பேரு என்னனு கேட்டது ஒரு குத்தமா என்றிருக்கும். இதற்கு ஒருவரின் தொழில், வர்க்க பேதமெல்லாம் இல்லை. வாட்ச்மேன், வீட்டு வேலை செய்பவர், ஐ. டி யில் பணிபுரிபவர், மருத்துவர் என்று யாரைச் சந்தித்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். சாப்டீங்களா? என்று கேட்டால் கூட திரும்பி நம்மிடம் சாப்டீங்களா என்று ஒரு சம்பிரதாயத்துக்காகக் கூட கேட்காதுகள் அந்தக் கூமுட்டைகள். கெடச்சுதுடா கேப்பு என்று தன் சுயபுராணத்தை நம் காதில் கொட்ட ஆரம்பித்துவிடுங்கள்.
நான் மேலே எழுதியுள்ள புலம்பல் பத்தியைப் படித்துவிட்டு அதனை சிந்துஜாவிற்கு பொறுத்திவிடாதீர்கள். அவள் பேச்சில் மட்டும் தான் மற்ற கூமுட்டைகள் போல. ஆங்... அவள் பெயர் சிந்துஜாவாம். சொல்ல மறந்துவிட்டேன். அவள் கடைசியாக பேசிய( அவள் பேசியதாக நான் எழுதிய வாக்கியத்தை கவனித்தீர்களா?)
நான் வேற டிஸ்டர்ப் பண்ணிட்டேன். சாரீ...
சாரீ...சாரீ...அடக் கடவுளே. எதிரில் இருப்பவர்களுக்கு தொந்தரவாக இருந்திருக்குமோ என்று எண்ணி சாரீ என்றுகூடக் கேட்கத் தெரிந்திருக்கிறதே இவளுக்கு.
ஒரு மணி நேரம் நன்கு ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு அவள் எழுந்ததும், அறைக்குள் அடை மழை பெய்யத் தொடங்கியது. விடாது இரண்டு மணி நேரம் பெய்திருக்கும். காலையில் சாப்பிட்ட மூன்று பூரி வயிற்றில் இருந்த இடம் தெரியாமல் ஆவியாகி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூவல் விட்டபிறகுதான் பேச்சை நிறுத்தினாள். சற்று களைத்தே காணப்பட்டாள். அவள் பேச்சை என் மூளை செரித்து உள்வாங்கி, என் தொண்டை ம்ம்ம்...கொட்டி என் மொத்த உறுப்புக்களும் செயலிழக்கும் நிலையில் தான் இருந்தன.
அவள் சாரீ கேட்டதே எனக்குப் பெரிய ஆச்சரியமளிக்க, அவள் இன்னும் பல ஆச்சரியங்களுக்கு என்னை உள்ளாக்கினாள்.
"நான் தூங்க போறேன் கர்டைன்ஸ் க்ளோஸ் பண்ணிக்கவா?"
"ரொம்ப குளுரா இருக்கு. ஃபேன் ஸ்பீட் கம்மி பண்ணிக்கவா?"
"வெளிச்சம் கம்மியா இருக்கு லைட் போட்டுக்கவா?"
கவா?........கவா?..... ஹைய்யோ... இப்படி எத்தனை கவாக்கள். எந்த மலைமாடுமே இதற்கு முன்னர் இந்த அறையில் என்னை எதற்கும் கேட்டதில்லை.
நேராக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருங்கள். பகல் இரண்டு மணிக்கு உட்கார்ந்து நான் படித்துக் கொண்டிருந்தால் கூட, நான் தூங்க போறேன் லைட் போட்டுக்கங்க...என்று கர்டைன்ஸை மூடிவிடுங்கள். நூற்றியிரண்டு டிகிரி காய்ச்சலில் படுத்திருந்தாலும், குளிரில் நடுங்கி கொண்டிருந்தாலும் வருங்கள், அதுகள் இஷ்டத்திற்கு மின்விசிறியின் வேகத்தைக் கூட்டுங்கள், குறைக்குங்கள். இரவு ஒன்று இரண்டு மணியானாலும் மின் விளக்கைப் போடுங்கள், அமுத்துங்கள். மறந்துகூட எதிரில் இருக்கும் என்னிடம் ஒரு வார்த்தை கேட்காதுகள்.
இரண்டு மணிநேரம் பெய்த அடைமழையில் எனக்கு அவளை ரொம்பவே பிடித்துவிட்டது. என்னதான் நான் கேட்கும் ஒற்றை வரி வினாக்களுக்கெல்லாம் அடம்பிடித்து அவள் பதினைந்து பக்க விடைகளையே தூக்கிக் கொண்டு வந்தாலும் இடையிடையே எனக்கும் கொஞ்சம் பேச வாய்ப்பளித்தாள். முக்கியமாக, நான் பேசுவதை உன்னிப்பாக கேட்கவும் செய்தாள். டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுகள் குறித்து இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், என் முறை வரும்போது என்னுடைய மூன்று வருடத் தேர்வு முடிவுகள் குறித்தும், இம்முறை எழுதியுள்ள தேர்வின் நிலை குறித்தும் நன்றாகவே அவளிடம் புலம்பினேன். அந்த சமயத்தில், நான் இருந்த விரக்தி நிலையில், "ஒன்னும் கவல படாதீங்க, கண்டிப்பா இந்த தடவ க்ளியர் பண்ணிடுவீங்க" என்று அவள் கூறிய ஆறுதல் வார்த்தை என்னை பெரிதும் ஆற்றுப்படுத்தி நம்பிக்கை அளித்தது. மிகவும் மோசமாக மனம் தளர்ந்து திரியும் வேளையில், அருகில் அமர்ந்து யாரோ ஒருவரிடமிருந்து வரும் சிறிய ஆறுதல் வார்த்தைகள் நம்மைப் பெரிதும் உற்சாகத்திற்கு உள்ளாக்குகின்றன.
"காலைல நைன் தர்டிக்கு ஷார்ப்பா அங்க இருக்கனும். நாளைக்கு வேற மன்டே. டிராஃபிக்ல மாட்டிக்காம நேரமா கெளம்பிடனும். ஸோ தூங்கலாமா?" என்று அவளாக குட்நைட் சொல்வதற்குள் பகல் நேரம் மொத்தமும் கடந்துவிட்டிருந்தது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சென்னை வந்ததிலிருந்தே யாரிடமும் நான் பெரிதாக பேச்சுகொடுத்ததில்லை. என்னிடமும் யாரும் தானாக வந்து பேசியதில்லை(அந்தக் கூமுட்டைகள் கணக்கிலில்லை. இருவரும் பேசினால் தான் உரையாடல்). யாரிடமும் மனம் திறந்து எதையும் சொல்வதிற்கில்லை. இங்கு வந்த நாளிலிருந்து எனக்குள் நானே ஒடுங்கிப் போவதை கண்ணாரக் கண்டேன். அப்படியிருக்க, சிந்துஜா, தவிர்க்கவே இயலாமல் இரண்டு பக்கங்களை என்னுடைய நாட்குறிப்பில் எடுத்துக் கொண்டாள். ஒரு நாள் தானே இருக்கப் போகிறேன் என்றாள், எப்படி இரண்டு பக்கங்களாயின என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
அடுத்த நாள் காலையில், பெரிதாக அலங்காரங்கள் எதுவும் இல்லாத சிம்பிளான ஊதா நிற டாப், பேன்ட் அணிந்து, லேசான மேக்கப்புடன்( முகத்திற்கு ஏதோவொரு கிரீம், பவுடர், பொட்டு, முடியைப் பின்னால் தூக்கி வாரி சின்ன க்ளிப்) எந்த சொதப்பலும் இல்லாமல் சரியான நேரத்திற்கு கிளம்பிவிட்டாள் சிந்துஜா. போறோம், சர்டிஃபிகேட்ட குடுக்குறோம் என்ன சொல்றாங்களோ கேட்டுட்டு அவங்க குடுக்குற ரூம பாத்துட்டு திரும்பி வந்து திங்க்ஸ எடுத்துட்டு கெளம்புறோம். இதுதான் சிந்துஜாவின் திட்டம்.
திரும்ப வரதுக்கு எவ்ளோ நேரமாகும் என்றொரு கேள்வியைக் கேட்டோமானால், ஏற்கனவே மெடிக்கல் செக்கப்கே ரெண்டு நாள் அலயவுட்டானுங்க, அங்க போய் என்னென்ன நடக்குதோ, எங்க டிபார்ட்மெண்ட் டைரக்டர் வேற ரொம்ப ஸ்டிரிக்ட்... என்றெல்லாம் சிந்துஜா பதினைந்து பக்கங்களுக்கு விடையளிக்கத் தொடங்கிவிடுவாள் என்பதால், அவளிடம் அக்கேள்வியைக் கேட்காமல் தவிர்த்துவிட்டு அவள் திரும்பி வரும்வரை காத்திருப்போம்.
காலை, அலுவலகத்திற்குச் செல்லும் முன்பு அறையின் வாசலில் நின்று ஏழெட்டுமுறையாவது என் கணக்கில் 'பை' சொல்லியிருப்பாள். 'பை' மட்டுமில்லை, தூங்கும்முன்பு ஒன்றிரண்டு குட் நைட், காலையில் எழுந்ததும் ஒரு குட் மார்னிங்க், வெளியே சென்றால், வெளீல போறேன். குளிக்கச் சென்றால், குளிக்கப் போறேன். சாப்பிடச் சென்றால், சாப்ட போலாமா? சாப்பிடும் போது, நான் போடட்டுமா? யாரு சாமீ நீயி? இந்த ஆறு மாதத்தில் இந்த அறையில் எத்தனை கோறைப்பல் கூமுட்டைகள். மொத்தமாக ஒருத்தியாக ஒரே நாளில் எல்லாத்தையும் கொட்டினால் என்ன செய்வேன்.
அவள் மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கிறாள். அப்படியொன்னும் தனித்துவமான விஷயங்கள் அவளிடம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு அவளைச் சந்தித்திருந்தால்கூட எனக்கு அவள் பெரிதாகக் தெரிந்திருக்க மாட்டாள். ஆனால் சென்னையில் ஒருத்தி சாதாரணமாக மனுஷி போல் இருப்பதே என்னமோ அபூர்வமாகத் தான் தெரிகிறது. ரொம்பவே மனம் லேசாகி பல பத்து நிமிடங்கள் மாடியில் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தேன்.
மதிய உணவு முடித்துவிட்டு மெஸ்ஸிலிருந்து அறையில் வந்து அமர்ந்திருந்தேன். அதுவரை முந்தைய நாள் அவள் அளித்த ஆச்சரியங்களில் திளைத்திருந்த என் மண்டையில், வரிசையாகக் கவலை கலந்த சில வினோதமான எண்ணங்கள் முளைக்கத் தொடங்கின.
காலையில் நேரமாகவே சென்றவள் டிபன் பாக்ஸ் ஏதும் எடுத்துச் சென்ற மாதிரி நினைவில்லை. "சாப்பிட்டிருப்பாளா? பேசாமல் காலையில் நம்முடைய டிபன் பாக்ஸை கொடுத்து உணவெடுத்துச் செல்லச் சொல்லியிக்கலாம்". ச்சை....மதியம் லன்ஞ்ச பாத்துக்க அவளுக்கு தெரியாதா?
இரண்டரை மணி வாக்கில் மேகங்கள் இருட்டிக்கொண்டு வந்தன. இடியின் ஓசை வேறு அவ்வபோது லேசாக கேட்டுக்கொண்டிருந்தது. "குடை எடுத்துச் சென்றிருப்பாளா? மழையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வாள். திரும்பி வர நேரமாகுமோ. காலை அவள் வெளியே கிளம்பும் போதே குடை எடுத்துக்க சொல்லியிருக்கனும்" ச்சை...வழில மாட்னா எங்கயாவது நின்னுட்டு வரப்போறா.
"நாலு மணியாச்சே. இன்னும் ஆளக்காணோம். சர்டிஃபிகேட்ஸ் எது சரியா குடுக்காம அலயவுட்டுட்ருக்கானுங்களா? என்னாச்சுனு ஒரு மெசேஜ் பண்ணலாமா?" ச்சை... அப்படி ஏதாச்ச இருந்துருந்தா அவளே வந்து எடுத்துட்டு போயிருப்பா. என்னிடம் எதற்கு இந்த தேவையில்லாத பதற்றம்? ஒரு நாள் தான் அவள் இங்கு தங்க போகிறாள் என்று தெரிந்து அவளிடமிருந்து தள்ளியிருக்க முயன்றாலும், எப்படியோ என் மனம் அவளிடம் ஒட்டிக்கொண்டுவிட்டது. அவளுக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போயின. அவளும் நானும் நெருங்கிய தோழிகளாக மாறாவிட்டாலும் நல்ல அறை தோழிகளாகவேனும் இருந்திருப்போம். மனம் அதிர்ஷ்டத்தை கெஞ்சத் தொடங்கியது, இப்படி சொல்லுவாளா என்று, "ரூம் போய் பாத்தேன். பங்க் கார்ட்தான் இருந்துச்சு. சுத்தமா புடிக்கல. அதனால இங்கேயே வந்துடலானு இருக்கேன்".
நேற்றே கூறியிருந்தாள், "அவங்க அக்கமடேஷன் குடுக்கரேனு சொன்னாங்க. ரூம் போய் பாக்குறேன். பங்க்கார்டா இருந்தா கண்டிப்பா அங்க கெடையாது. இங்கேயே வந்துடலானு இருக்கேன். நமக்கு அது செட் ஆகாது".
மணி ஐந்தை தாண்டி பல நிமிடங்கள் ஆகியிருக்கும். மழையும் வராமல் தப்பிவிட்டது. மனம் வேறெந்த சிந்தனைக்குள்ளும் செல்லாமல் அவள் எப்பொழுது வருவாள், வந்து என்ன சொல்லுவாள் என்றே எண்ணிக்கொண்டிருந்தது. ஐந்தே முக்கால் வரை வகுப்பிருக்கும் என்று அவள் சொன்னதை வைத்து, இன்னும் அவள் அங்கேயே இருக்கலாம் என்று யூகித்திருந்தேன். "ஒரு வேளை ஃப்ரண்ட்ஸோட கூட வெளீல போயிருக்கலாம். பேசாம ஃபோன் பண்ணி கேட்டுடலாமா?" (ஹச்சோ...கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டேனுதே இந்த மூள). அதற்கு மேல் பொறுக்க முடியாமல் திறன் பேசியை எடுத்து இந்தக் கதையை தட்டச்சு செய்யத் தொடங்கிவிட்டேன்.
ஏழரை மணிக்கு வழக்கம் போல் பசி எடுக்கத் தொடங்கிவிட்டது. "அவ வர வரைக்கும் வெயிட் பண்லாமா"(ஹைய்யோ....)
சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தேன். உள்ளே அவள் கட்டிலின் மேல் அமர்ந்திருந்தாள். ஒரு நாள் முழுவதும் அலைந்து திரிந்த களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது.
"மதியம் சாப்டீங்களா? என் ஃப்ரண்ட் இப்ப வரேன்னு சொன்னா. நீங்க சாப்ட போறதுன்னா போங்க". நான் ஏதும் கேட்பதற்குள் முந்திகொண்டு அவள் சொன்னாள். அவளின் முடிவு தெரிவதற்கு முன்பாகவே என் கெஞ்சல்கள் மனதில் அடங்கிவிட்டிருந்தன.
நானேதான் ஆரம்பித்தேன், "ரூம் பாத்தீங்களா, என்னாச்சு?"
"பாத்தன். ஓ. கே தான். சிங்கிள் காட் தான் இருக்கு. ஸோ சமாளிச்சிக்கலாம். ஆனா, இப்போ டைம் ஆச்சு, காலைல ஷிஃப்ட் பண்ணிக்கிறேன்" என்றாள். ஒரு இரவு போனஸாக கிடைத்திருக்கிறது எனக்கு. காலை அவள் செல்வதற்குள், அவள் திரும்பி வந்தவுடன் சொல்ல வேண்டும் என்று மனப்பாடம் செய்து வைத்திருந்த வசனத்தை எப்படியாவது ஒப்பித்துவிட வேண்டும். "நான் சென்னைல யார்கிட்டேயுமே மனசு விட்டு பேசுனதில்ல, நீதான் பர்ஸ்டு. உங்கிட்ட பேசுனப்போதான் ஒரு மனுஷி கிட்ட பேசுன மாதிரி இருந்துச்சு."
Comments
Post a Comment