Skip to main content

டிராகுலா: எ லவ் டேல்


உலகிலேயே தலைசிறந்த உறவு எது என்று உங்களைக் கேட்டால் எதைக் கூறுவீர்கள்? தாய், தந்தை மூலம் தான் நமக்கு உயிர் கிடைக்கிறது. தம்பி, தங்கை, அக்கா, அண்ணா எல்லாம் நம் இரத்தங்கள். தோழன், தோழிகளெல்லாம் நாம் உருவாக்கிக் கொள்ளும் உறவுகள். எந்த இரத்த சம்பந்தமும் இல்லாமல் அவர்களுடன் பலகாலம் உறவாடுகிறோம். நம்மில் இருந்து உருவாகும் நம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதையெல்லாந்தாண்டி குரு என்றொருவர் இருக்கிறார். அவர் பெற்ற ஞானத்தையெல்லாம் நமக்கு அளிக்கிறார். இவர்கள் எல்லோருமே நம் வாழ்வில் முக்கியமானவர்கள் தாம். ஆனால், எந்த உறவுக்காக உங்கள் உயிரை தருவீர்கள்? அட, சும்மா பேச்சுக்கெல்லாம் எதையேனும் சொல்லக் கூடாது. 

ஜென்ம ஜென்மமா தாய் மகன் உறவு, தந்தைக்காக மகள் கட்டிய பாசக்கோட்டை, அண்ணணுக்காக தன் மூக்கை அறுத்து கொடுத்த தம்பி, தன் நட்பை ஏற்றுக்கொள்ளாத தோழியின் மீது ஆசிட் வீசி கொன்ற தோழன். இப்படியெல்லாம் எங்கேயாவது செய்திகள் வெளியாகி கேட்டுள்ளோமா? எல்லா உறவையும் இயல்பாக ஏற்று, ஒத்துவரும்வரை ஒன்றாக இருந்து, பிடிக்கவில்லையெனில் விலகியோ தூக்கியெறிந்தோ செல்லும் நாம், இந்த எழவெடுத்த காதலில் மட்டும் ஏன் இவ்வளவு வெட்கங்கெட்டவர்களாக, வன்முறையாளர்களாக இருக்கிறோம். நீ இல்லன்னா நான் செத்துடுவேன், ஏழு ஜென்மத்துக்கும் நீ தான் என் புருஷன், பொண்டாட்டி, என்ன விட்டு வேற எவனயாச்ச கல்யாணம் பண்ணினா வீடு புகுந்து வெட்டுவேன், இந்த ஜென்மத்துல சேருலனாலும் அடுத்த ஜென்மத்துலயாச்ச சேருவோம். அப்பப்பா….இப்படி காதலுக்கு மட்டும் எத்தனை வசனங்கள், எத்தனை பைத்தியக்காரத்தனங்கள். எல்லா உறவுகளையும் போல் காதலும் ஒரு இயல்பான உறவுதான். ஆனால் அதில் மட்டும் ஏகத்துக்கு உடைமை உணர்வு வந்துவிடுகிறது. சரி, விஷயத்துக்கு வராமல் ஏன் இத்தனை இழுவை என்று கேட்காதீர்கள். 'டிராகுலா: எ லவ் டேல்' திரைப்படத்தைப் பார்த்த போது, இந்த எண்ணங்கள் தான் முதலில் எழுந்தன. 

பதினைந்தாம் நூற்றாண்டில், ஐரோப்பிய கண்டத்தின் ஒரு பகுதியான வல்லாச்சியாவின் இளவரசன் விளாதிமிரும் அவன் மனைவி எலிசபத்தாவும் ஈருடல் ஓருயிராக காதலில் கசிந்துருகி வாழ்கின்றனர். பார்பேரியர்களின் படைகளை எதிர்கொள்ள, கிறிஸ்துவ பாதிரியாரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்கிறான் விளாதிமிர். இழப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்குமே, கடவுள் இதனை ஏற்றுக்கொள்வாரா என்று கேட்கிறான் அவன்.  உனக்கு கடவுளின் மேல் நம்பிக்கை இருக்கிறதா, நமது ராஜ்ஜியம் தான் முஸ்லிம்களின் படையை எதிர்க்க இருக்கும் இறுதி கோட்டை. கடைசி பார்பேரியன் இறக்கும் வரை வேட்டையாடு என்கிறார் பாதிரியார். அதற்கு, எனக்கு கடவுளின் மேல் நம்பிக்கையிருக்கிறது, அவருக்காக நான் இறக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், கடவுள் எனக்கொரு சகாயம் செய்ய வேண்டும். என் மனைவி இல்லையெனில், என் வாழ்வு அர்த்தமற்றது. அவள் இறந்து விட்டால் என்னால் போருக்குச் செல்ல முடியாது. அவள் உயிரைப் பணயம் வைத்து நான் போருக்குச் செல்கிறேன் என்கிறான் விளாதிமிர். போரில் எதிரி நாட்டு வீரர்களின் தலையைக் கொய்து (காட்சியில் அவ்வாறே காட்டியிருப்பார்கள்) அவனே வெற்றியும் பெறுகிறான். ஆனால் அவள் மனைவி கோட்டையிலிருந்து கிளம்பும் வழியில் எதிரிகளால் சூழப்பட்டு விடுகிறாள். சரியான நேரத்தில் விளாதிமிர் அவள் இருக்கும் இடத்திற்குச் சென்றாலும், தன் கையாலே தன் காதல் மனைவி இறக்க நேர்கிறாள். 

தேவாலயத்திற்கு திரும்பி வந்து, நான் கடவுளுக்கு வேண்டியதை அத்தனையும் செய்தேன், அவரின் பெயரால் பல கொலைகளைச் செய்தேன். அவரிடம் நான் என்ன கேட்டேன், என் மனைவியின் உயிரை பத்திரமாக வைத்திருக்க மட்டும் தானே. கடவுளிடன் சொல்லுங்கள், “என் மனைவியின் உயிரை அவர் திருப்பி தரும் வரை என்னுடைய உயிர் அவருக்கு இல்லை என்று.”  சொல்லிமுடித்துவிட்டு பாதிரியாரை கொலை செய்துவிடுகிறான் விளாதிமிர். 

மனைவியின் பிரிவுத் துயர் தாளாமல் திரியும் அவனுக்கு, கடவுளால் மரணம் மறுக்கப்படுகிறது. எவ்வளவோ முயன்றும் அவனால் சாக முடிவதில்லை. கடவுள் நம்பிக்கையைத் துறந்து நானூறு வருடங்களாக டிராகுலாவாக(இரத்தக் காட்டேரி) தன் மனைவியைத் தேடி அலைந்து சோர்வுருகிறான். மனைவியைத் தேட, பலரைக் கடித்து அவர்களையும் இரத்தக் காட்டேரிகளாக்கி களத்தில் இறக்குகிறான். 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் பிறக்கிறாள் அவன் மனைவி. இப்பொழுது மீனாவாக இருக்கும் அவள் பாரீசில் இருப்பதை, அவளை திருமணம் செய்யவிருக்கும் நபரின் (ஜோனதன்) மூலம் தெரிந்து கொள்கிறான்.‌ அவனை தன் கோட்டையில் சிறைவைத்துவிட்டு, தான் பணித்த ஒருவளின் உதவியின் மூலம் அவளிடம் நெருங்குகிறான். அவளுக்கும் விளாதிமிரின் நினைவுகள் மீள, இருவரும் ஒன்றிணைய தன்னையும் ஒரு டிராகுலாவாக மாற்றச் சொல்லி கேட்கிறாள். அப்போது பாதிரி அங்கு வந்து, அவளை நீ உண்மையிலேயே விரும்புவதாக இருந்தால், அவளை இவ்வுலகிலேயே வாழ விடு, நீ கடவுளிடம் செல் என்று சொல்ல, அவனும் மனம் மாறுகிறான். பாதிரியின் மூலம் அவன் சாபம் நீங்கி விடைபெற்று, அவன் பணித்தவர்களும் விடுதலை பெறுகிறார்கள். 

இத்திரைப்படம் எனக்கு பிடித்ததற்குக் காரணம், காதலைக் குறித்தும், கடவுள், மதம் தொடர்பாகவும் அது எழுப்பும் பல கேள்விகள் தாம். நானூறு வருடங்களாக தன் காதலியைத் தேடி எது அவனை அலைய வைக்கிறது? கடவுள் ஏன் முதலில் அவர்களைப் பிரிக்க வேண்டும்? கடவுள் தான் போரை நடத்துகிறாரா, இல்லை கடவுளின் பெயரால் மனிதன் போரை நிகழ்த்துகிறானா? அன்பே வடிவாய் உருவான மதத்தில், கடவுளின் தூதுவன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பாதிரி, வேற்று மதத்தைச் சார்ந்த எதிரி நாட்டு படையில், கடைசி உயிர் போகும் வரை கொல்லு என்கிறான். விளாதிமிரின் படையினர் ஒவ்வொருவரும் எதிரிகளின் தலையைக் கொய்து, முற்றுகையிட வந்த படையின் தலைவன் முன் நிற்பர். அந்த தலைகளுக்குச் சொந்தமான உடல்களுக்கு உரியவர்கள் எத்தனையோ பேருக்கு விளாதிமிரின் காதலி போல் காதலிகள் இருந்திருக்கலாம். அவனது படையிலேயே எத்தனையோ பேருக்கு காதலிகள் இருந்திருக்கலாம். அவன் கேட்பது என்னவோ தன் மனைவியின் உயிரை மட்டும் தானே. தன் காதலி, தன் நாடு, தன் மதம். எத்தனை உயிர்கள், எத்தனை இரத்தம். எல்லாம் தனக்கு சொந்தமானது தன்னைவிட்டு நீங்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தானே பிறந்தது . 

படத்தில் குறைகளே இல்லையென்றால், சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான்‌ செய்கின்றன. மீனாவின் காதலனான ஜோனதன், விளாதிமிரின் கோட்டைக்குள் செல்லும் பொழுது ஆரம்பத்தில் அங்கிருக்கும் எதையும் கண்டு அதிர்ச்சியடைவதில்லை. இறுதிக்காட்சியில், இராணுவம் வந்து டிராகுலாவை பிடிக்க வருவது போன்ற காட்சிகளைச் சொல்லலாம். படத்தின் பின்னணி இசை மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. வசனங்கள் பல இடங்களில் சிறப்பாக இருந்தன. இப்படியொரு மிகச்சிறந்த திரைப்படத்தை அறிமுகம் செய்த சாரு நிவேதிதாவிற்கு நன்றி. 

Comments

  1. Really your explanation was very superb creating curiosity to watch the film

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...