சென்னைப் புத்தகக் காட்சிக்குச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாளைய விருப்பப்பட்டியலில் ஒன்றாக இருந்தது. இம்முறை சென்னையில் இருந்ததால் அது நிறைவேறிவிட்டது. வருடாவருடம் புத்தக விற்பனையை டெல்லி அப்பளக் கடையோடு ஒப்பிட்டு பலர் எழுதும் பதிவுகளை வாசித்து வாசித்து YMCA மைதானத்துக்குள் நுழைந்ததும் கண்கள் முதலில் டெல்லி அப்பளக் கடையையே தேடியது. ஈ மொய்க்கிற கூட்டம் தான். முன்னரே என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம் என்றொரு பட்டியல் வைத்திருந்து அதன் அடிப்படையில் பதிப்பகங்களின் அரங்கிற்குச் சென்றேன்.
முதலில் சென்றது ஸீரோ டிகிரிக்கு தான். சாரு இருக்கிறாரா என்று பார்த்தேன். இல்லை. வந்துவிடுவார் என்றார்கள். அவரின் மொத்த நூல்களையும் நேரில் பார்த்த பொழுது, என்று நாம் இதையனைத்தும் வாசித்து முடிக்க என்று மலைப்பாய் இருந்தது. அவரின் புதிய வரவான ‘இஞ்சி சுக்கு கடுக்காய்’ வாங்கினேன். பா. ராகவனின் மொத்த நூல்களும் இருந்தன. அவற்றின் வடிவ அளவுகள் ஆச்சரிப்படுத்தின. ஆர். அபிலாஷின் 'படித்துதான் ஆகணுமா?' வாங்கினேன். ஒரு சுற்று சுற்றிவிட்டு திரும்பி வரலாம் என்று கிளம்பினேன்.
தேசாந்திரி பதிப்பகத்தில் எஸ். இராமகிருஷ்ணனைச் சுற்றி பல பேர் கையில் புத்தகங்களுடன் அவரிடம் கையெழுத்து வாங்க காத்திருந்தனர். நான் ஏதோ தயக்கத்தினால் தூரத்திலிருந்து அவரை புகைப்படம் எடுத்துவிட்டு வந்துவிட்டேன். உயிர்மை அரங்கிற்குச் சென்ற பொழுது அங்கு மனுஷ்யபுத்திரன் இருந்தார். அவரின் ‘மர்ம முத்தம்’ கவிதை தொகுப்பை வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கச் சென்றேன். இதுதான் நான் அவரை முதன்முதலில் நேரில் சந்திப்பது. அவரின் அருகில் அமர்ந்து இரண்டு நிமிடங்கள் பேசி, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மறக்க முடியாத தருணம்.
காலச்சுவடு அரங்கிற்குச் சென்ற பொழுது பா. வெங்கடேசனின் நூல்களைக் காணுகையில் அப்படியொரு ஆனந்தமாய் இருந்தது. பாகீரதியின் மதியம், தாண்டவராயன் கதை எல்லாம் கையில் தொட்டுப் பார்க்கும் பொழுது, எப்பொழுது என்னை வந்து தழுவிக்கொள்வாய் என்று கேட்பது போல் இருந்தது. உள்ளம் அதற்கு தயாராக வேண்டும். பில் போடும் இடத்தில் ஒரு பெரிய வரிசை. ‘மெய்யுரு’ வாங்கிவிட்டு வந்தேன்.
அந்திமழை சென்று அராத்துவை சந்திக்கலாம் என்று பார்த்தேன் அவரையும் காணவில்லை, அவரது நூல்களும் அப்பொழுது அங்கில்லை. சால்ட் பதிப்பகத்தின் அரங்கு வடிவமைப்பு என்னைக் கவர்ந்தது. ஸீரோ டிகிரிக்கும் அந்திமழைக்கும் நான்கு நடை நடந்தேன். மழை வேறு தூறத் தொடங்கியதால் இருவரையும் காண இயலாமல் கடைசியில் கிளம்பிவிட்டேன். நிச்சயம் சென்னை புத்தகக் காட்சி மிகப்பெரும் நிகழ்வுதான். இங்கிருக்கும் கூட்டம், பரபரப்பை வேறு எந்த ஊரிலும் காண இயலாது. இங்கு வந்தது நிச்சயம் மனதில் தங்கும் இனிய நிகழ்வாக என்றும் இருக்கும்.
10. 01. 2026
பயணங்களின் போது திறன் பேசியில் வாசிப்பதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ எனக்கு பிடிக்காது. பெரும்பாலும் ஹெட்போனில் பாடல்கள் கேட்பேன். அதுவும் கொஞ்ச நேரத்திற்கு தான். பஸ்ஸிலோ இரயிலிலோ ஏறி உட்கார்ந்ததும் வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிடுவேன். நூறு முறை சென்றுவந்த வழியாக இருந்தாலும் வேடிக்கை தான். சலிப்பதேயில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவதொன்று புதிதாகக் கண்ணில் படும். வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு எத்தனை கிலோமீட்டர்களை வேண்டுமானாலும் கடந்துவிடலாம். ஆனால் தி. ஜானகிராமனின் மோக முள்ளை வாசித்துக்கொண்டிருந்ததால் இம்முறை இரயில் பயணத்தின் போது திறன் பேசியில் வாசித்துக் கொண்டே செல்லலாம் என்று எண்ணினேன். இரயில் புறப்பட்டதும் (வழக்கம் போல் ஜன்னல் இருக்கை தான்) வாசிக்க எடுத்து வைத்தேன். கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியான பயணங்களில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை ஒரேயொரு முறை கூட இரயிலிலோ பேருந்திலோ ஒருவரின் கையிலும் நான் புத்தகங்களைப் பார்த்ததில்லை. பெரும்பாலான இரயில் பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்பவர்கள் ஹெட்போனில் பாடல்கள் கேட்டுக்கொண்டோ திரைப்படங்கள், வெப்சீரிஸ், ரீல்ஸ் பார்த்துக்கொண்டோதான் வருவதைக் கண்டுள்ளேன். இல்லையெனில் தூங்கிக் கொண்டு வருவார்கள். ஆனால் இம்முறை எனக்கு சில ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருந்தன. நான் என்னுடைய திறன் பேசியில் மோக முள்ளை திறந்ததும், உடனே எனக்கருகில் இருந்த பெண் அவள் பையிலிருந்து ஒரு நூலை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தாள். அவள் தோழியிடம், யாராவது புக்கு வெச்சிக்கிட்டு சீன் போடறான்னு சொல்லுவாங்களோ என்று கேட்க, அவள், சொன்னா சொல்லிட்டுப் போட்டும் என்று சொல்லிவிட்டு அவளும் ஒரு புத்தகத்தை எடுத்து கையில் வைத்தாள். நானும் அப்பாடா, நமக்கு ஒரு கம்பனி கெடச்சிருக்கு என்று நாவலில் மூழ்கினேன்.
சிறிது நேரம் கழித்து தலையை லேசாக இடது பக்கம் திருப்பிய போது எங்களது இருக்கைக்கு அடுத்த இருக்கையில் இருந்த இளைஞன் ஒருவனும் கையில் ஒரு நூலை வைத்து வாசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி ஒருவர் செய்தித்தாள் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். பெட்டியும் அமைதியாக இருக்க, அந்த இடமே ஏதோ நூலகத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. அவ்வபொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஹெட்போனில் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வாசித்துக் கொண்டு இனிதாய் அமைந்தது அப்பயணம்.
12.01.2026
பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்த இரயில் பயண அனுபவத்தை, ப்ளாகில் இன்று எழுதலாம் நாளை எழுதலாம் என்று காலம் தள்ளிக்கொண்டு, கடைசியில் பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் இரயில் பயணமே வந்துவிட்டது. இம்முறையும் ஏதாவது புத்தகங்கள் கண்ணில் படுகிறதா என்று இரயில் வரும்பொழுதே பார்த்துக்கொண்டிருந்தேன். பெட்டிக்குள் நுழைந்தவுடனே ஒருவர் கையில் நூலைப் பார்த்தேன். இருக்கைக்கு வந்து அமர்ந்தால், எதிரில் அமர்ந்திருந்த பெண்ணின் கையில் புத்தகம். எங்களுக்கு அடுத்த இருக்கையில் ஒரு பெண்ணின் கையில் புத்தகம். கையில் புத்தகத்துடன் நான் பார்த்த அத்தனை பேருமே இளைஞர்கள். இருபதிலிருந்து முப்பது வரை இருப்பவர்கள். அத்தனை பேரின் கையிலும் ஆங்கில புத்தகங்கள் தாம். பெரும்பாலும் சேத்தன் பகத், ஏதாவது ரொமாண்டிக் நாவல்கள். சமீபத்திய புத்தகக் காட்சிதான் இந்த ஆச்சரியங்களுக்குக் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அங்கு வாங்கிய புத்தகங்களை வாசிக்க நீண்ட தூர பயணம் தோதாயிருந்திருக்கிறது. நான் கண்ட வரையில், பெரும்பாலான இளைஞர்களுக்கு, தமிழில் நூல்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பங்கள் உள்ளன. சிறு வயதிலிருந்து நூல் அறிமுகங்கள் இல்லாதது, நம் கல்விச் சூழலில் வாசிப்பிற்கான இடமில்லாதது என பல காரணங்களைச் சொல்லலாம். நல்ல நூல்களை உரிய முறையில் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் தமிழில் வாசகப் பரப்பு நிச்சயம் இன்னும் அதிகரிக்கும். அதையும் பல வாசகக்குழுக்களும் தனிநபர்களும் செய்துதான் வருகிறார்கள். இந்த இரயில் பயணத்தில் நான் கண்ட காட்சியை எல்லா பயணங்களிலும் காண வேண்டும் என்பதே என் அவா.

Comments
Post a Comment