Skip to main content

படித்துதான் ஆகணுமா?- ஆர். அபிலாஷ்

 

ஆர்.‌ அபிலாஷின் கல்வி சார்ந்த கட்டுரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு கல்வியாளராக சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து விலகி நடைமுறை சார்ந்தும் தத்துவார்த்தமாகவும் கல்வி குறித்து அவர் வைக்கும் வாதங்கள் முக்கியமானவை. தமிழகத்தில், கல்வி குறித்தான விவாதங்களில், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாதங்களாக எதிர்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு எதிர்தரப்பினர் செய்யும் ரொமாண்டிஸைஸத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய்வதும் கேள்விக்குள்ளாக்குவதன் அவசியங்களைக் கூறுவதுமே இந்நூலின் சாராம்சம். 

ஆங்கில ஹிந்துவில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை முன்வைத்து கல்வி எவ்வாறு பணத்தைக் கடந்த அதிகார மதிப்பை கொண்டுள்ளது, தேர்வுமுறைக்கும் சாதி அதிகாரத்திற்கும் இருக்கும் தொடர்பு, அதன் பொருட்டு ஏன் மக்களால் கல்வி பட்டங்களைப் பெறுவதில் இருந்து தப்பிக்க இயலாது என்று விளக்கியிருக்கும் ‘கல்விப் பண்ணைகளால் உருவான புதிய இந்தியா’ கட்டுரை முக்கியமானது.  

கல்வி என்பது நிச்சயமாக இன்று வியாபாரம் தான். கல்வி இலவசமாக இருந்த பொழுது இல்லாத பிரச்சனை இப்பொழுது என்னவெனில், இத்தனை லட்சங்களைச் செலவழித்துவிட்டு இறுதியில் நாம் பெறுவது என்ன என்பது தான். அதிக சம்பளத்துடன் உயர்பதவி-பணம்-சமூக அந்தஸ்து எனில் அது எத்தனை பேருக்கு சாத்தியப்படுகிறது என்பது கேள்வி. ஒரு விவாத நிகழ்ச்சியில் இக்கேள்வியை நோக்கிச் செல்லும் பொழுது எதிர்தரப்பினர் எவ்வாறு அதனை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிராக ஆதிக்க சாதியினர் செய்யும் ஏமாற்று வேலை என்று திரித்தனர் என்று ‘கல்வி மீதான விமர்சனத்தை ஒரு சதிக்கோட்பாடாகப் பார்க்கும் அபத்தம்’ கட்டுரையில் கூறுகிறார் அபிலாஷ். 

இன்றைய வறட்டுத்தனமான கல்விச் சூழலில் நாம் எம்மாதிரியான மாணவர்களை உருவாக்குகிறோம், எப்படிப்பட்ட சிந்தனைகள் அவர்களுக்குள் விதைக்கப்படுகின்றன, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பல கட்டுரைகளில் அலசியுள்ளார் அபிலாஷ். அவற்றுள் ‘நவீனக் கல்வி நம்மை தீயவர்களாக்குகிறதா?’ முக்கியமானது. சென்ற வருடம், எட்டாம் வகுப்பு படிக்கும் தன் மகனுக்கு படிப்பில் போட்டியாக இருக்கும் சக மாணவனை பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாயைப் பற்றிய செய்தி நம் சீழ்பிடித்த கல்வியமைப்பின் எச்சம் தான். 

பள்ளி இறுதிவகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஆறாம் வகுப்பு மாணவி ஒருவளிடம், நீ வருங்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பது உன்னுடைய விருப்பம் என்று கேட்டேன். ‘மருத்துவர்’ என்றாள். எதற்காக என்று கேட்க, சற்றும் தாமதிக்காமல் ‘காசு சம்பாதிக்க’ என்றாள். அவ்வளவு சிறிய வயதில் எப்படி இச்சமூகத்தையும் கல்வியமைப்பையும் எளிதாகப் புரிந்து வைத்திருக்கிறாள் அவள் என்று வியப்பாக இருக்கிறது இப்பொழுது நினைக்க. நீட் தேர்வு குறித்தான கட்டுரையில், தமிழர்களின் மருத்துவர் ஆகும் செண்டிமெண்டை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் அபிலாஷ். அதற்கு ஒரு காலத்தில் இருந்த அதிக ஊதியம், சமூக அந்தஸ்து, சொகுசு வாழ்க்கை தவிர வேறு காரணங்கள் இருப்பதாய் தெரியவில்லை. நீட் தேர்விற்கு மாற்றாக, மருத்துவ படிப்பில் சேர, அவர் முன்வைக்கும்‌ பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் மருத்துவத்துறையில் சரியான நபர்கள் உள்ளே செல்வார்கள். 

கல்வித்துறையில் இருக்கும் பிரச்சனைகளை பொதுவாகச் சொல்லாமல் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தகுதித்தேர்வு, சமூகம் என்று நான்கு பிரிவுகளாக தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். கல்வியில் மதத்தின் பங்கு, ஆசிரியர் மாணவர் உறவு, மாணவர்களுக்கான அரசியல், வாசிப்பு பழக்கம், ஆசிரியர்களின் பணிச்சுமை என்று ஆசிரியர், மாணவர், சமூகம் ஆகிய மூன்று தரப்பினரின் சிக்கல்களையும் தீர்வுகளையும் அலசியுள்ளார்.‌ உயர்கல்வி பகுதியில், கல்வித்துறை தனியார்மயமாதலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை பல இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தகுதித்தேர்வு பகுதியில், மற்ற துறை தேர்வுகளிலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வு எப்படி வேறுபட்டிருக்க வேண்டும், தற்போதைய முறையால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன‌ என்று‌ கூறுவதில் ஒரு பேராசிரியராய் அவரின் அக்கறை கூடுதலாய் வெளிப்பட்டுள்ளது. 

வாசிப்பாக இந்நூல் நம்மை தொய்வடைய விடுவதில்லை. கல்வியை அதீதமாக மகத்துவப்படுத்தியோ நிராகரித்தோ செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு இடையில், நிதானமாக நம்மை அதன் தற்போதைய நிலை குறித்தும் அதற்கான தீர்வுகளை நோக்கியும் சிந்திக்கச் செய்யும் இந்நூலை, படித்துதான் ஆகணுமா? என்று கேட்டால் நிச்சயம் 'ஆம்' என்பேன். ஆசிரியர்கள், கல்வித்துறையில் முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்களின் கண்களின் இந்நூல் சென்றடைய வேண்டும். அபிலாஷின் பரிந்துரைகளை ஒருவர் ஏற்கலாம், மறுக்கலாம். ஆனால் கல்வி குறித்து சமூகம் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் இது. நிச்சயம் பரவலான விவாதங்களுக்கு இந்நூல் இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை. 

Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...