Skip to main content

Minxie- Araathu

 


‘Minxie’ கிண்டில் பதிப்பாக வந்தபொழுது, ஆங்கிலத்தில் வாசிக்க சற்று தயக்கம் இருந்ததால் தமிழில் வெளியானதும் வாசிக்கலாம் என்றிருந்தேன். ‘குட்டிமா’ வெளியானதும் கிண்டிலில் சில அத்தியாயங்கள் வாசித்தேன். அராத்துவின் எழுத்தில் எனக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், அவரின் தமிழ் தான். கதையின் உள்ளடக்கத்திலும் கதைசொல்லலிலும் குறை வைப்பதில்லை. ‘ஓப்பன் பண்ணா’ நாவல், கதையாக சுவாரசியமாகவே ஆரம்பித்தது. ஆனால் அதன் மொழிநடை தொடர்ந்து வாசிக்க பெரிய தடையாக இருந்தது. குட்டிமாவிலும் அதே சிக்கல். (பிற நூல்களில் இப்பிரச்சினை எனக்கில்லை). அதனால் ஆங்கிலத்தில் முயற்சிக்கலாம் என்று ‘Minxie’ வாசித்தேன். ஆரம்பகட்ட வாசகர்களும் புரிந்து கொள்ளும்படியாக எளிதாகவே இருந்தது. இதுதான் நான் ஆங்கிலத்தில் வாசிக்கும் முதல் நாவலும். 

சிந்து எனும் சிறுமி வீணாவாக, வஞ்சியாக பரிணமிக்கும் கதைதான் ‘Minxie’. நாவலைக் கையில் எடுத்தால் முழுமையாக வாசித்து முடித்துவிட்டு தான் கீழே வைக்க முடியும். ராக்கெட் வேகத்தில் எங்கும் தொய்வில்லாமல் கதை பறக்கிறது. நாயகி, தனக்குள் அவ்வபோது நடத்தும் உரையாடல்களுக்கு பின்னாலுள்ள உளவியல் காரணியைச் சரியாகக் கோர்த்து ஒரு அட்டகாசமான கதைசொல்லல் யுக்தியைக் கையாண்டுள்ளார். கதைசொல்லியின் இடையீடு பெரிதாக இல்லாதது வாசிப்பில் தடை ஏற்படுத்தாமல் இருந்தது. சிந்துவின் கதையில், அவளின் டிராமாவை அப்படியே நமக்கும் கடத்தாமல் இருந்தது சிறப்பு. வாகமணில், முரளி வீணாவிடம், உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் மது உள்ளே சென்று ரத்தத்தில் கலந்து போதை மூளைக்கு பாய்வதை வர்ணனையாகக் கூறுவது நாவலின் ரசனையான இடங்களில் ஒன்று. தமிழ் இலக்கிய நூல் வெளியீட்டு விழாக்களில் தமிழ் திரைப்பட இயக்குநர்களின் செயல்களை பகடி செய்யும் பகுதியில் பல பேர் கண்முன் வந்து செல்கிறார்கள். 

கதைசொல்லி கூறுவதுபோல், ஒரு பெண்ணின் பாலியல் வேட்கையை உள்ளடக்காத, குறிப்பிட்ட வரையறைக்குள் எழுதிய ஜாலியான பெண் கதாப்பாத்திரங்களைப் பார்த்திருப்போம். அந்த எல்லைகளையெல்லாம் தகர்த்து தூர எறிபவள் தான் வஞ்சி. தாய்லாந்தின் தனிமைத் தீவுகளில், நான்கு ஆண்களுடன் திகட்ட திகட்ட வஞ்சி செலவிடும் நாட்கள் இதற்கு முன்னர் எந்த நாவலிலும் நாம் வாசித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியான காட்சிகளில் எத்தனை பெண்கள் தம்மைக் கற்பனை செய்திருப்பார்கள் என்றுகூட தெரியவில்லை. ஸ்ட்ரிக்டான பேஸ்புக் போராளி பெண்ணியவாதிகள் கூட வெளியே திட்டிக்கொண்டே உள்ளூர நிச்சயம் அப்பகுதியை ரசிப்பார்கள். இக்கதையில், தாய்லாந்து ஆண் ஸ்ட்ரிப் க்ளப்பில் பணிபுரியும் நபர்கள், வஞ்சிக்கு சேவகம் புரியும் நால்வர் போன்றவர்களின் இடத்தில் பெண்களை வைத்தால், நிச்சயம் அவர்களின் நிலை குறித்து வருந்தியிருப்போம். பெண்ணை எப்படி போகப்பொருளாகப் பயன்படுத்துகிறான் என்று குமுறியிருப்போம். ஆனால் முதல் முறை ஒரு பெண் கதாப்பாத்திரம் தன் உடலை கட்டற்ற காமத்தில் திளைக்கும் பொழுது நாம் வாயடைத்து போகின்றோம். சில நிமிடங்கள் கழித்தே அந்த ஆண்களின் நிலை குறித்து சிந்திக்க முடிகிறது. 

உன் உடலை நீ முதலில் அனுபவி, உன் உடல் ஒருவனுக்கு மட்டும் சொந்தமல்ல, நீ விரும்பிய ஒருவனுடனோ பலருடுனோ உன் ஆசைகள் தீற காமத்தில் திளை, ஆனால் யாருக்கும் காலம் முழுவதும் அடிமையாக இருக்காதே என்பது தான் ஸ்லோகங்கள் மூலமும் கதையின் மூலமும் சொல்ல வருகிறார்கள். பணம், அதிகாரம் இரண்டும் ஓர் எல்லையைத் தாண்டும் பொழுது ஆண் பெண் பாகுபாடெல்லாம் இருப்பதில்லை. காமமும் கட்டுக்கடங்காமல் செல்கிறது. அதற்கு மேலும் என்ன இருக்கிறது என்றொரு இடம் வரும்பொழுது தனிமை ஆட்கொள்கிறது. அப்படியொரு நிலையில் நாயகி எடுக்கும் முடிவே நாவலின் க்ளைமாக்ஸ். அது கொஞ்சம் குரூரமாகவும் தெரியலாம், விமர்சனத்துக்கும் ஆளாகலாம். ஆனால் அதில் இருக்கும் ஒரு நுட்பம் என்னவெனில், நவீன பெண்ணின் மனம் வேலை, பணம், சுதந்திரத்திற்கு விரும்பும் அதே சமயம் கணவன்/காதலன், குழந்தை, அரவணைப்பு, பாதுகாப்புணர்வு போன்ற பழைய குடும்ப‌ அமைப்பின் அனுகூலங்களையும் விரும்புகிறது. இங்குதான் சிக்கல் எழுகிறது. ஆண்களும் இதனைப் புரிந்து அதற்கு தகுந்தார் போல் தம்மை தகவமைத்துக் கொள்ளவில்லை. இதுவே பல உறவுச்சிக்கல்களுக்கு, மணமுறிவுகளுக்கு காரணமாகிறது. வஞ்சி, இந்நிலையின் அதிதீவிரத்தின் எல்லையில் நிற்கும் பாத்திரம். ஒரு சமூகமாக இதனை சரியாகக் கையாண்டு நடைமுறை தீர்வுகளை நோக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். 

சிந்து வீணாவாக உருமாறியதைவிட வீணா எப்படி வஞ்சியாக உருமாறினால் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்தேன். ஆனால் நாவலில் அவை பெரிதாக விளக்கப்படாதது ஏமாற்றமளித்தது. மேலும், சினிமாவிலிருந்து அடுத்தடுத்த அதிகார மையங்களை நோக்கிச் செல்லும் பொழுது அவளின் நோக்கம், மனவோட்டங்களும் தெளிவாக இல்லாதது இந்நாவலின் பலவீனமாகப்பட்டது எனக்கு. அராத்துவின் லிட்வெர்ஸ் இது என்று தாராளமாகச் சொல்லலாம். புருஷனில் வரும் ஆபத்பாந்தவன் ‘ஊசி’ இங்கும் விஜயம் புரிகிறான். வஞ்சி வரும் ஆரம்பப் பகுதிகள் பொண்டாட்டியில் வரும் தீப்திகாவின் நீட்சி போலவே இருந்தாள். வீணா சினிமாவில் நுழைய முயற்சிக்கும் பகுதியில் இயக்குநர், உதவி இயக்குநர் எல்லாம் ‘ஓப்பன் பண்ணா’ உலகத்தை நினைவுபடுத்தினர்.

நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ஸ்லோகம் வருகிறது. அதில் எனக்குப் பிடித்தது: “When desire’s fire blazes, you’re no daughter to a father, No sister to a brother, no disciple to a guru, No mother to a son, no wife to a husband, To all, you are yoni, your power resonates with the cosmos.”

புருஷனுக்கு எழுதிய மதிப்புரையில், 'புஸ்ஸி' நெடுங்கதை புருஷனுக்கு முன்னோட்டம் போல் இருந்தது என்றேன்.  'மிலோஸ்' சிறுகதை வாசித்தால், ‘minixie’யின் ஒரு பகுதிக்கு முன்னோட்டம் போல் இருக்கும். எப்ஸ்டைன்  கோப்புகள் குறித்து பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இரண்டையும் வாசிப்பது பொறுத்தமாக இருக்கும். அராத்துவின் எழுத்தில் ஈர்க்கக் கூடிய விஷயங்களில் ஒன்று, முகத்தில் ஓங்கி ஒரு குத்து வைத்து கையில் கொடுக்கும் உண்மைகள் தான். இந்நாவலைப் பொறுத்தவரையில், உடம்பெங்கும் ஏராளமான குத்துகள் வாங்கி, ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது உறுதி. ஒரு சாம்பிள்: 

It was clear Vibe felt something for Veena too. In the dictionary of human emotions, it might read “affection laced with respect.” But in the raw manual of humans’ primal urges, it’d translate to: “I want to claim this beautiful, smart, sexy, English-speaking, modern-dressing woman, parade her around the world, and bang her, licking every inch.” 

வழக்கம் போல் இது ஒரு செக்ஸ் நாவல் என்று வசைப்பாடும் கோஷ்டிள் பாடட்டும். சிந்து லட்சக்கணக்கான பெண்களில் ஒருவள். வீணாவைக்கூட நீங்கள் காணலாம்.‌ வஞ்சி. வாய்ப்பே இல்லை. அவள் ஒருவளின் தரிசனத்திற்காகவே Minxie/குட்டிமா வாசியுங்கள். தமிழோ ஆங்கிலமோ உங்கள் விருப்பம். 

Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...