கடவுள்னா யாரு? எங்க இருக்காரு? எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்றாங்களே, உண்மையிலே மேல தான் இருக்கானா? இல்ல கீழ, சைட்லனு, எங்கதான் இருப்பான்? மொதல்ல, அந்த 'இருப்பான்'ன்றதே இருப்பானா, இருக்காளா, இல்ல இருக்குதா? காக்கா, குருவி, ஈ, எறும்பு, நாய், பூனைனு அதுங்களுக்கும் நமக்கு மாரியம்மா, காளியம்மானு ஒவ்வொன்னுத்துக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்குற மாதிரி தனித்தனியா கடவுள் இருந்து, சாமி கும்பிட்டு வேண்டிக்குங்களா என்ன? கடவுள் என்னும் கருத்துரு, ஒரு மனிதனுக்கு அறிமுகமாவதிலிருந்து இது போன்று நூற்றுக்கணக்கான கேள்விகள். எழாத ஆளில்லை, நாளில்லை. யார்தான் இதற்கெல்லாம் பதில் கூறுவர்?
இன்றைய நாளில் எதற்கும் வரலாறு எழுதப்படாமல் இல்லை. பா. ராகவனே உணவின் வரலாறு, ஆர். எஸ். எஸ் வரலாறு, காஷ்மீர் வரலாறு, இராமானுஜர் வரலாறென்று எக்கச்க்கமாக எழுதியிருக்கிறார். அப்படியிருக்க, கடவுளின் வரலாறை ஒருவர் எழுத முடியுமா? கடவுளை அடைவதற்கான வழி தான் என்ன? அதைத்தான் காலங்காலமாக மதங்கள், இன்னபிற அமைப்புகளின் மூலம் ஆன்மீகவாதிகள் போதித்து வருகின்றார்களே. அப்படியிருக்க, பாரா என்ன விசேஷமாக சொல்லிவிடப் போகிறார் என்று கேட்பீர்களானால், உலகில் தோன்றிய, தோன்றவிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குமே கடவுளைப் பற்றிய அவர்களின் அபிப்பிராயத்தை அனுபவத்தைக் கூறக் கதைகள் உள்ளன.
அதுபோல பாரா தன்னுடைய இளம்பிராயத்தில் ஆரம்பித்து, கடவுள் என்னும் கருத்துரு எவ்வாறு அவருக்கு அறிமுகமாகியது, அன்றிலிருந்து பரம்பொருள் குறித்தான தேடலில் அவர் கண்டடைந்தவை என்னென்ன, அவர் வந்தடைந்த பாதை எதுவென்று சொல்லி, வரலாற்று நோக்கில் மன்னன்-கடவுள்-மதம் என பல கோணங்களை தொட்டுக் காட்டியிருக்கிறார். ஒரு புனைவுக்கான களம் போல் ஆரம்பித்து, தத்துவம் குறித்தான நூலாகவோ ஆன்மீக நூலாகவோ, கடவுளைக் கண்டடைவது எப்படி என்று விடைத்தேடும் நூலாகவோ இல்லாமல், முற்றிலும் ஒரு தனிமனிதனின் பரம்பொருளை அடையும் முயற்சியில் தான் கண்டவற்றை, அறிந்தவற்றைத் தொகுத்தெழுதும் நூலாகவே இது வந்துள்ளது.
தத்துவ நிலையில், பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை ஏற்க, அவர் வந்த பாதையை வேதங்கள்- சித்தர்கள்- வள்ளலார்- தயானந்த சரஸ்வதி என்று தொகுக்கலாம். நூல் முழுமையும் படித்து ஒருவர் எளிதாக வந்தடையும் முடிவு என்னவென்றால் மதத்திலிருந்து ஆன்மீகத்தை விளக்கிப் பார்க்க வேண்டும் என்பதுதான். மதங்களால் உருவாக்கப்பட்ட பிரதிகளின் வழியே பரம்பொருளை அடைய எண்ணி அம்முயற்சியில் ஆசிரியர் தோல்வியும் அடைந்திருக்கிறார். கட்டற்ற பெருவெளியில் உறைந்திருக்கும் பரம்பொருளை கட்டுப்பாடான அமைப்புகளின் மூலம் அடைவது அவ்வளவு எளிதன்று. மதத்தின் வழியாகவும் பரம்பொருளை அடைந்தவர்கள் உண்டு. பாராவின் பாதை மதத்திற்கு எதிரான, சித்தத்தை சிவத்துடன் பொருத்தி நிலைநிறுத்திய சித்தர்கள் காட்டும் வழி.
ஆன்மீகம் சம்மந்தமான நூல்கள் என்றாலே பெரும்பாலும் சாமானியர்கள் கொஞ்சம் சிரத்தையெடுத்து படிக்கும் மொழியிலேயே இருக்கும். பாரா, இனிப்பு தடவிய கசப்பு மருந்தாகவே, கடவுள் என்னும் கருத்தாக்கத்தின் உருவாக்கத்தை, மதங்களின் தோற்றத்தை, சாமானியனின் மொழியில் ஒரு வரைபடம் போல் எழுதிக் காட்டியிருக்கிறார். தத்துவத்தில் கொஞ்சம் அறிமுகமிருந்தால் கூடுதலாக உள்வாங்கிக் கொள்ளலாம். சரி, இந்நூலைப் படித்தால் முதல் பத்தியில் உள்ள கேள்விகளுக்கெல்லாம் விடைகிடைக்குமா என்றால், நிச்சயமாக இவ்லை என்று சொல்லலாம். ஆனால், அக்கேள்விகள் குறித்து இன்னும் ஆழமாக சிந்திக்கத் தொடங்குவீர்கள். கடவுளை அறிவதொன்றும், "முப்பது நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி?" புத்தகத்தை வாங்கி ஆங்கிலம் கற்பது போலில்லை அல்லவா. அவரவர் தேடல். அவரவர் பாதை.
இத்தனை வருடத் தேடலில் பாரா 'அவனை' கண்டுவிட்டாரா என்றால், அவரே அதற்கான பதிலையும் தந்திருக்கிறார்.
"இன்றுவரை அந்த அணுவை நான் கண்டதில்லை. அதனிடம் தோற்றேன். அதன் வடிவங்களிலும் அதனைக் காணவில்லை. அவற்றிடமும் தோற்றேன். அவர் சொன்ன சொல் மாறாமல், சடங்குகளிலும் இறங்கி, சறுக்கித்தான் விழுந்தேன். ஆனால் சாரமற்றுப் போகாமல் மீண்டெழுவதற்கு ஒரு பற்றுக்கோலை எப்படியோ தேடிப் பிடித்துக் கொண்டேன்".
நூல் : சாத்தானின் கடவுள்
ஆசிரியர் : பா. ராகவன்
பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
விலை : 300
புத்தகத்தை வாங்க:

Ungaloda book review nalla irukku🙂
ReplyDeleteநன்றி
DeleteNice
ReplyDelete