Skip to main content

சாத்தானின் கடவுள்- பா.ராகவன்

 



கடவுள்னா யாரு? எங்க இருக்காரு? எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்றாங்களே, உண்மையிலே மேல தான் இருக்கானா? இல்ல கீழ, சைட்லனு, எங்கதான் இருப்பான்? மொதல்ல, அந்த 'இருப்பான்'ன்றதே இருப்பானா, இருக்காளா, இல்ல இருக்குதா?  காக்கா, குருவி, ஈ, எறும்பு, நாய், பூனைனு அதுங்களுக்கும் நமக்கு மாரியம்மா, காளியம்மானு ஒவ்வொன்னுத்துக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்குற மாதிரி தனித்தனியா கடவுள் இருந்து, சாமி கும்பிட்டு வேண்டிக்குங்களா என்ன? கடவுள் என்னும் கருத்துரு, ஒரு மனிதனுக்கு அறிமுகமாவதிலிருந்து இது போன்று நூற்றுக்கணக்கான கேள்விகள். எழாத ஆளில்லை, நாளில்லை. யார்தான் இதற்கெல்லாம் பதில் கூறுவர்? 

இன்றைய நாளில் எதற்கும் வரலாறு எழுதப்படாமல் இல்லை. பா. ராகவனே உணவின் வரலாறு, ஆர். எஸ். எஸ் வரலாறு, காஷ்மீர் வரலாறு, இராமானுஜர் வரலாறென்று எக்கச்க்கமாக எழுதியிருக்கிறார். அப்படியிருக்க, கடவுளின் வரலாறை ஒருவர் எழுத முடியுமா? கடவுளை அடைவதற்கான வழி தான் என்ன? அதைத்தான் காலங்காலமாக மதங்கள், இன்னபிற அமைப்புகளின் மூலம் ஆன்மீகவாதிகள் போதித்து வருகின்றார்களே. அப்படியிருக்க, பாரா என்ன விசேஷமாக சொல்லிவிடப் போகிறார் என்று கேட்பீர்களானால், உலகில் தோன்றிய, தோன்றவிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குமே கடவுளைப் பற்றிய அவர்களின் அபிப்பிராயத்தை அனுபவத்தைக் கூறக் கதைகள் உள்ளன.

அதுபோல பாரா தன்னுடைய இளம்பிராயத்தில் ஆரம்பித்து, கடவுள் என்னும் கருத்துரு எவ்வாறு அவருக்கு அறிமுகமாகியது, அன்றிலிருந்து பரம்பொருள் குறித்தான தேடலில் அவர் கண்டடைந்தவை என்னென்ன, அவர் வந்தடைந்த பாதை எதுவென்று சொல்லி, வரலாற்று நோக்கில் மன்னன்-கடவுள்-மதம் என பல கோணங்களை தொட்டுக் காட்டியிருக்கிறார். ஒரு புனைவுக்கான களம் போல் ஆரம்பித்து, தத்துவம் குறித்தான நூலாகவோ ஆன்மீக நூலாகவோ, கடவுளைக் கண்டடைவது எப்படி என்று விடைத்தேடும் நூலாகவோ இல்லாமல், முற்றிலும் ஒரு தனிமனிதனின் பரம்பொருளை அடையும் முயற்சியில் தான் கண்டவற்றை, அறிந்தவற்றைத் தொகுத்தெழுதும் நூலாகவே இது வந்துள்ளது. 

தத்துவ நிலையில், பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை ஏற்க, அவர் வந்த பாதையை வேதங்கள்- சித்தர்கள்- வள்ளலார்- தயானந்த சரஸ்வதி என்று தொகுக்கலாம். நூல் முழுமையும் படித்து ஒருவர் எளிதாக வந்தடையும் முடிவு என்னவென்றால் மதத்திலிருந்து ஆன்மீகத்தை விளக்கிப் பார்க்க வேண்டும் என்பதுதான். மதங்களால் உருவாக்கப்பட்ட பிரதிகளின் வழியே பரம்பொருளை அடைய எண்ணி அம்முயற்சியில் ஆசிரியர்  தோல்வியும் அடைந்திருக்கிறார். கட்டற்ற பெருவெளியில் உறைந்திருக்கும் பரம்பொருளை கட்டுப்பாடான அமைப்புகளின் மூலம் அடைவது அவ்வளவு எளிதன்று. மதத்தின் வழியாகவும் பரம்பொருளை அடைந்தவர்கள் உண்டு. பாராவின் பாதை மதத்திற்கு எதிரான, சித்தத்தை சிவத்துடன் பொருத்தி நிலைநிறுத்திய சித்தர்கள் காட்டும் வழி. 

ஆன்மீகம் சம்மந்தமான நூல்கள் என்றாலே பெரும்பாலும் சாமானியர்கள் கொஞ்சம் சிரத்தையெடுத்து படிக்கும் மொழியிலேயே இருக்கும். பாரா, இனிப்பு தடவிய கசப்பு மருந்தாகவே, கடவுள் என்னும் கருத்தாக்கத்தின் உருவாக்கத்தை, மதங்களின் தோற்றத்தை, சாமானியனின் மொழியில் ஒரு வரைபடம் போல் எழுதிக் காட்டியிருக்கிறார். தத்துவத்தில் கொஞ்சம் அறிமுகமிருந்தால் கூடுதலாக உள்வாங்கிக் கொள்ளலாம். சரி, இந்நூலைப் படித்தால் முதல் பத்தியில் உள்ள கேள்விகளுக்கெல்லாம் விடைகிடைக்குமா என்றால், நிச்சயமாக இவ்லை என்று சொல்லலாம். ஆனால், அக்கேள்விகள் குறித்து இன்னும் ஆழமாக சிந்திக்கத் தொடங்குவீர்கள். கடவுளை அறிவதொன்றும், "முப்பது நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி?" புத்தகத்தை வாங்கி ஆங்கிலம் கற்பது போலில்லை அல்லவா. அவரவர் தேடல். அவரவர் பாதை. 

இத்தனை வருடத் தேடலில் பாரா 'அவனை' கண்டுவிட்டாரா என்றால், அவரே அதற்கான பதிலையும் தந்திருக்கிறார்.
"இன்றுவரை அந்த அணுவை நான் கண்டதில்லை. அதனிடம் தோற்றேன். அதன் வடிவங்களிலும் அதனைக் காணவில்லை. அவற்றிடமும் தோற்றேன். அவர் சொன்ன சொல் மாறாமல், சடங்குகளிலும் இறங்கி, சறுக்கித்தான் விழுந்தேன். ஆனால் சாரமற்றுப் போகாமல் மீண்டெழுவதற்கு ஒரு பற்றுக்கோலை எப்படியோ தேடிப் பிடித்துக் கொண்டேன்".  

நூல்           : சாத்தானின் கடவுள்
ஆசிரியர் : பா. ராகவன்
பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
விலை      :  300

புத்தகத்தை வாங்க:

Comments

Post a Comment

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...