Skip to main content

கந்தகோட்டம்

சென்னை‌ பாரிமுனையில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். நீண்ட நாளைய திட்டமெல்லாம் இல்லை. சென்னையில் இருக்கிறேன். அரைமணிநேரப் பயண தூரத்தில் இருக்கிறது. எப்பொழுதும் போல் இன்றும் ‘திடீரென்று’ தோன்றியதால் உடனே சென்றுவிட்டேன். இவ்வாலயம் குறித்து நான் அறிந்திருந்ததெல்லாம், இராமலிங்க அடிகளார், தன் ஒன்பதாம் அகவையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு தெய்வமணிமாலையை இயற்றியது இத்தளத்தில் தான். அச்செய்தி,  இக்கோவிலுக்குச் செல்வதில் ஒரு ஆவலை உண்டுபண்ணியிருந்தது. 

இரவே இத்தளத்தைக் குறித்து கொஞ்சம் படித்து மனதில் கற்பனைகளை வளர்த்திருந்தேன். காலையில், சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து 'கூகுள் மேப்ஸ்' போட்டு சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கலானேன். வழியிலெங்கும் சிறு சிறு இரும்புக் கடைகள், பாத்திரக் கடைகளாய் இருந்தன. கோவிலை நெருங்க நெருங்க சில செம்பிலான கலை வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள், பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் தென்பட்டன. கோவில் உள்ள தெருவென்று, மக்கள் சாலையை அங்கப்பிரதட்சண பாதை போலவா வைத்திருப்பார்கள். சென்னையின் இதர வழக்கமான முகம்சுழிக்கவைக்கும் அசுத்தமான தெருக்களின் சாலையைப் போலவே கோவில் அமைந்துள்ள தெருவும் ஒரு நரகம். மாடுகள் ஆங்காங்கே வழியிலேயே கட்டப்பட்டு, அதன் சாணமும் கோமியமும் கலந்து வீசும் துர்நாற்றத்தைத் தாண்டியே செல்ல வேண்டும். தினமும் கோமாதா பூஜை நடைபெறுகிறதாம்!

'கூகுள் மேப்ஸ்' வேறு லொக்கேஷன் அரைவ்ட் என்று கத்திக்கொண்டிருந்தது. எங்கடா‌ கோயிலக் காணோம் என்று உற்றுப் பார்த்தால் கிழிந்து போன பெரிய படுதா போன்ற எதையோ போர்த்தி வடக்கு வாசல் கோபுரத்தை மறைத்து வைத்திருந்தார்கள். கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறதாம். 'சரித்தான்' என் நினைத்துக் கொண்டு வாசலில் இருக்கும் பூக்கடைகளைத்தாண்டி உள்ளே சென்றால், உற்சவர் முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார். மனம் நொடியில் அமைதியுற்றது. பக்தர்களும் பெரிய கூச்சலில்லாமல் இருந்தனர். அர்ச்சகர் ஏதோ சமஸ்கிருதத்தில் சில மந்திரங்களை உச்சரித்துவிட்டு, தீப தட்டை ஒவ்வொரு சாமிக்கு முன்னும் வைத்து காட்டியாச்சு…பாத்துகிட்டீங்களா…என்பது போன்ற தொனியில் காட்டிக்கொண்டிருந்தார். 

சித்திபுத்தி விநாயகரை தரிசித்துவிட்டு இடப்புறம் திரும்பினால் தஷிணாமூர்த்தி-  விசாலாட்சி சந்நிதி. இத்தளத்தில் என் மனதைக் கவர்ந்த பகுதி இது. விசாலாட்சியை நேரடியாக நம்மால் காண இயலாது. தஷிணிமூர்த்தியையடுத்து விசாலாட்சி‌ உள்ளே மறைந்திருப்பாள். எதிரிலிருக்கும் கண்ணாடியில் பிரதிபலிப்பாய் மட்டுமே நம்மால் அவளைக் காண இயலும்.‌ அழகான சிகப்பு பட்டுடுத்தி அழகாகக் காட்சி தந்தாள்‌. மெய்மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் அவ்வுருவகத்தின் விளக்கத்தைக் கேட்க மறந்துவிட்டேன். அடுத்து நான்‌‌ ஆவலாகக் காணச்‌ சென்றது சரவணப் பொய்கை. ஓரளவு தெளிந்த நீருடன் தூய்மையாக‌க் குளத்தை பராமரித்திருந்தனர்.‌ நிறைய பெரிய அளவிலான மீன்கள் கண்ணில் தென்பட்டன. ஏனோ நீண்ட நாள் பழகிய இடம் போன்றதொரு உணர்வை தந்தது அவ்விடம். "அவ்வளவுதான், தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலிலிருந்து கிளம்பிவிட்டேன்" என்று முடிப்பதற்குள் இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும்.‌ 




மேலே குறிப்பிட்டதெல்லாம் கோவிலில் எனக்கு ஏற்பட்ட நல்ல அனுபவங்கள். அவை எத்துணை இடைஞ்சல்களுக்கிடையில் கிடைத்தன என்பதையும் எழுதவேண்டுமல்லவா. கோவிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன என்று சொன்னேன் அல்லவா, அதனைக் கொஞ்சம் பார்ப்போம். தமிழகத்தின் பிற கோயில்களில் புனரமைப்பு பணி என்னும் பெயரில் என்னென்ன அக்கிரமங்கள் நடைபெறுகின்றனவோ அவையெல்லாம் இங்கும் நடக்கிறது. அதே தகரக்கொட்டாய்கள், கோவிலுக்குள்ளேயே அடுக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகள், இரும்புக் கம்பிகள், ஆலயச்சிற்பக் கோட்பாடுகள், ஆகம‌விதிகள் பற்றிய அறிவு ஏதுமற்ற மேஸ்திரிகளையும் கொத்தனார்களையும் வைத்து துளையிடப்படும் சுவர்கள், சிலைகள். கண்ணில் அடிக்கும் நிறங்களாலான‌ வண்ணப்பூச்சு. அவைகளையெல்லாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து சுரண்டியெடுப்பது? அப்படியே எடுத்தாலும் அச்சிலைகளின் நிலையென்ன? சிலைகளைக் சுத்தம் செய்வதற்கு‌, நீதிமன்றத்தில் போராடி தடையுத்தரவு வாங்கிய மணற் வீச்சு முறைக்கு பதில் நீர் வீச்சு முறையைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஏதோ வாகனத்தை வாட்டர் வாஷ் செய்வது போல் கோபுரத்தின் மீது நீரை பீச்சியடிக்கிறார்கள். அதிலுள்ள சிலைகள் மழுங்கி விடாதா? சேதாரமானால் யார் கேள்வி கேட்பார்கள்.‌ இரத்தக்கண்ணீர் வழிந்தது அதனைக் காண.






கோவிலிலிருந்து திரும்பும் முன், அருணகிரிநாதர், இராமலிங்கரையெல்லாம் பார்க்கலாம் என்றால், ஏதோ கந்தல் துணியைப் போட்டு மூடி வைத்திருந்தனர். தமிழகத்தின் ஆலயங்களையெல்லாம் அதன் தன்மை மாறாமல் கண்டு ரசித்த தலைமுறை முடிந்துவிட்டது. இனி நாம் காணப்போவதெல்லாம் வெறும் பிராத்தனைகளைக் கொட்டும் குப்பைக்கூடங்கள். அதற்கு மஞ்சள் நிறமடித்தாலென்ன, பச்சை நிறமடித்தாலென்ன? சாமிக்கே வியர்க்கும் என்று கருவறை முன் ஓட்டை போட்டு மின்விசிறி வைத்தவர்களல்லவா நாம். 

18.06.2025


Comments

  1. AnonymousJune 22, 2025

    super ra explain panni irukkiga real fact

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...