சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். நீண்ட நாளைய திட்டமெல்லாம் இல்லை. சென்னையில் இருக்கிறேன். அரைமணிநேரப் பயண தூரத்தில் இருக்கிறது. எப்பொழுதும் போல் இன்றும் ‘திடீரென்று’ தோன்றியதால் உடனே சென்றுவிட்டேன். இவ்வாலயம் குறித்து நான் அறிந்திருந்ததெல்லாம், இராமலிங்க அடிகளார், தன் ஒன்பதாம் அகவையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு தெய்வமணிமாலையை இயற்றியது இத்தளத்தில் தான். அச்செய்தி, இக்கோவிலுக்குச் செல்வதில் ஒரு ஆவலை உண்டுபண்ணியிருந்தது.
இரவே இத்தளத்தைக் குறித்து கொஞ்சம் படித்து மனதில் கற்பனைகளை வளர்த்திருந்தேன். காலையில், சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து 'கூகுள் மேப்ஸ்' போட்டு சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கலானேன். வழியிலெங்கும் சிறு சிறு இரும்புக் கடைகள், பாத்திரக் கடைகளாய் இருந்தன. கோவிலை நெருங்க நெருங்க சில செம்பிலான கலை வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள், பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் தென்பட்டன. கோவில் உள்ள தெருவென்று, மக்கள் சாலையை அங்கப்பிரதட்சண பாதை போலவா வைத்திருப்பார்கள். சென்னையின் இதர வழக்கமான முகம்சுழிக்கவைக்கும் அசுத்தமான தெருக்களின் சாலையைப் போலவே கோவில் அமைந்துள்ள தெருவும் ஒரு நரகம். மாடுகள் ஆங்காங்கே வழியிலேயே கட்டப்பட்டு, அதன் சாணமும் கோமியமும் கலந்து வீசும் துர்நாற்றத்தைத் தாண்டியே செல்ல வேண்டும். தினமும் கோமாதா பூஜை நடைபெறுகிறதாம்!
'கூகுள் மேப்ஸ்' வேறு லொக்கேஷன் அரைவ்ட் என்று கத்திக்கொண்டிருந்தது. எங்கடா கோயிலக் காணோம் என்று உற்றுப் பார்த்தால் கிழிந்து போன பெரிய படுதா போன்ற எதையோ போர்த்தி வடக்கு வாசல் கோபுரத்தை மறைத்து வைத்திருந்தார்கள். கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறதாம். 'சரித்தான்' என் நினைத்துக் கொண்டு வாசலில் இருக்கும் பூக்கடைகளைத்தாண்டி உள்ளே சென்றால், உற்சவர் முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார். மனம் நொடியில் அமைதியுற்றது. பக்தர்களும் பெரிய கூச்சலில்லாமல் இருந்தனர். அர்ச்சகர் ஏதோ சமஸ்கிருதத்தில் சில மந்திரங்களை உச்சரித்துவிட்டு, தீப தட்டை ஒவ்வொரு சாமிக்கு முன்னும் வைத்து காட்டியாச்சு…பாத்துகிட்டீங்களா…என்பது போன்ற தொனியில் காட்டிக்கொண்டிருந்தார்.
சித்திபுத்தி விநாயகரை தரிசித்துவிட்டு இடப்புறம் திரும்பினால் தஷிணாமூர்த்தி- விசாலாட்சி சந்நிதி. இத்தளத்தில் என் மனதைக் கவர்ந்த பகுதி இது. விசாலாட்சியை நேரடியாக நம்மால் காண இயலாது. தஷிணிமூர்த்தியையடுத்து விசாலாட்சி உள்ளே மறைந்திருப்பாள். எதிரிலிருக்கும் கண்ணாடியில் பிரதிபலிப்பாய் மட்டுமே நம்மால் அவளைக் காண இயலும். அழகான சிகப்பு பட்டுடுத்தி அழகாகக் காட்சி தந்தாள். மெய்மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் அவ்வுருவகத்தின் விளக்கத்தைக் கேட்க மறந்துவிட்டேன். அடுத்து நான் ஆவலாகக் காணச் சென்றது சரவணப் பொய்கை. ஓரளவு தெளிந்த நீருடன் தூய்மையாகக் குளத்தை பராமரித்திருந்தனர். நிறைய பெரிய அளவிலான மீன்கள் கண்ணில் தென்பட்டன. ஏனோ நீண்ட நாள் பழகிய இடம் போன்றதொரு உணர்வை தந்தது அவ்விடம். "அவ்வளவுதான், தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலிலிருந்து கிளம்பிவிட்டேன்" என்று முடிப்பதற்குள் இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும்.
கோவிலிலிருந்து திரும்பும் முன், அருணகிரிநாதர், இராமலிங்கரையெல்லாம் பார்க்கலாம் என்றால், ஏதோ கந்தல் துணியைப் போட்டு மூடி வைத்திருந்தனர். தமிழகத்தின் ஆலயங்களையெல்லாம் அதன் தன்மை மாறாமல் கண்டு ரசித்த தலைமுறை முடிந்துவிட்டது. இனி நாம் காணப்போவதெல்லாம் வெறும் பிராத்தனைகளைக் கொட்டும் குப்பைக்கூடங்கள். அதற்கு மஞ்சள் நிறமடித்தாலென்ன, பச்சை நிறமடித்தாலென்ன? சாமிக்கே வியர்க்கும் என்று கருவறை முன் ஓட்டை போட்டு மின்விசிறி வைத்தவர்களல்லவா நாம்.
18.06.2025




super ra explain panni irukkiga real fact
ReplyDelete