Skip to main content

அப்செஷன்- விமர்சனம்

 


உலகம் முழுக்க வசூலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிக்கும் “அப்செஷன்” திரைப்படத்தைக் காண பலரைப் போலவே நானும் ஆவலாய்க் காத்திருந்தேன். பலர் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று கூறியதால் மட்டுமில்லை, திரைப்படத்தின் முன்னோட்டமும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. ஓர் இனிய பொழுதில் அப்படத்தைப் பார்த்தும் விட்டேன். படத்தைக் குறித்த என் கருத்துக்களை இனி காணலாம். 

அப்செஷனின் நாயகன் என்ன பெரிதாக ஆசைப்பட்டுவிட்டான். தன் காதலி இந்த உலகில் வேறெவர் மீதும் இல்லாத அளவிற்கு தன் மீது அன்பைப் பொழிய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவ்வளவுதான். ஆசைகளை நிறைவேற்றித் தரும் பொம்மை ஒன்று அவனுக்குக் கிடைக்க, அவனும் வேண்டிக் கொள்கிறான். அதற்கு பிறகு என்றாகிறது என்பது தான் மீதிக்கதை. இந்த ஒரு வரிக்கதை போதாதா, படம்‌ சுவாரசியமாகச் செல்வதற்கு. ஆனால் அப்படி நிகழ்ந்ததா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன். படத்தின் ஒருவரிக் கதை சுவாரசியமானது தான். ஆனால் திரைக்கதையிலும் அதனை படமாக்கிய விதத்திலும் சொதப்பி விட்டார்கள். இந்த ஒருவரிக் கதையை இரண்டு விதமாக விரித்து எழுதியிருக்கலாம். 

ஒன்று. அடிப்படையில் இது ஒரு ஃபேன்டஸி படம் தான். ஒரு பொம்மை நினைத்ததை எல்லாம் நடத்திக் காட்டும் என்பது கற்பனை. காதல், என்றுமில்லாத அளவிற்கு இன்று மிகவும் சிக்கலான உறவாக மாறியிருக்கிறது. காதலிக்கும் ஒவ்வொருவருமே தன் இணையர் தன் மீது வேறெவர் மீதும் இல்லாத அளவிற்கு பேரன்பு கொண்டு பித்தாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்புதான். காதலிக்க ஆரம்பித்த புதிதில், ஒருவரோ அல்லது இருவருமே அப்படி அதீதமாக அன்பை கக்குவது இனிக்கத்தான் செய்கிறது. ஆனால் கொஞ்ச காலத்தில், அதுவே டாக்ஸிக்காக மாற ஆரம்பித்து ஒருவரின் அந்தரங்க வெளியை இன்னொருவர் அபகரித்து, அந்த உறவே மூச்சு முட்ட வைத்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் சைக்கோத்தனம் தாங்காமல் பிய்த்துக் கொண்டு உறவை முறித்துவிட்டு ஓடுபவர் பலர். இது கண்முன் இருக்கும் யதார்த்தம். இதன் தீவிரத்தன்மையை யதார்த்தமாகக் காட்டியிருந்தாலே படம் மிக அருமையாக வந்திருக்கும். காதலே அடிப்படையில் சைக்கோ திரில்லர் தன்மை கொண்டதுதானே.  

இரண்டு. படத்தில், நாயகி நாயகனிடம், தான் உளவியல் பிரச்சனை ஒன்றிற்கு சிகிச்சையில் இருப்பதாய் பொய்யாகக் கூறுகிறாள். ஆனால் அவள் நடந்துக் கொள்ளும் விதம் உளவியல் பாதிப்புக்கு ஆளானவள் போல் தான் இருக்கின்றன. இன்றைய காலகட்டதில் சும்மாவே எடுத்ததற்கெல்லாம் டிராமா, டிப்ரஷன், தெரப்பி என்று தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். உளவியல் சிக்கல் கொண்ட நாயகியிடம் மாட்டிக்கொண்ட நாயகன் என்று கதையை விரித்திருந்தாலே படம் சுவாரசியமாக வந்திருக்கும். இரண்டுமே இல்லாமல் குழப்பி, சம்பந்தமே இல்லாமல் என்னென்னவோ நடக்கிறது படத்தில். 

சாதாரணமாக ஒரு பெண் தன் காதலன் மீது அப்செஷனாக இருந்தால் என்னவெல்லாம் எதிர்பார்ப்புகள் அவளுக்கு இருக்குமோ அதேதான் நம் அப்செஷன் ப்ரோ மேக்ஸ் நாயகிக்கும் இருக்கும். ஆனால் அவளின் செயல்கள் எந்த உலகத்தில் ஏன் நடக்கிறது என்று தான் தெரியவில்லை. இது ஒரு ஹாரர் படம் என்பதற்கான முகாந்திரமும் படத்தைப் பார்க்கையில் இல்லை‌. 

நாயகியின் எதிர்பார்ப்புகளையும் அதற்கு அவளின் எதிர்வினைகளையும் சில காட்சிகளிலிருந்து எடுத்துக்கொள்வோம். என்னதான் ஃபேன்டஸியாக இருந்தாலும் அதன் மூலம் என்னதான் உணர்த்த வருகிறார்கள் என்று நீங்களே சொல்லுங்கள்.

1.காதலன் தன்னுடனே எப்பொழுதும் நேரம் செலுத்த வேண்டும் என்று நாயகி விரும்புகிறாள். ஆனால் நாயகன் அன்று பணிக்குச் சென்றுவிடுகிறான். அதற்காக அவன் பணியிலிருந்து வீடு திரும்பும் வரையில் வரவேற்பறையில் காலையில் நின்ற அதே இடத்தில் நின்று கொண்டு, அருவருக்கத்தக்க விதத்தில் என்னென்னமோ செய்கிறாள். (அதே இடத்தில் சிறுநீர், மலம் கழிப்பது)

2.நாயகன் தன்னைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்று நினைக்கிறாள். ஆடவர் விருந்திற்கு கூட தனியாக அவனைச் செல்ல விடாமல் அவனுடன் செல்கிறாள். அங்கு சென்ற பின், அத்தனை பேர் முன்னிலையில் வினோதமாக நடந்துக் கொள்கிறாள், தன் முகத்தை தானே இரத்தம் வர அடித்துக் கொள்கிறாள். 

3.தன்னைத் தவிர வேறு எந்த பெண்ணுடனும் தன் காதலன் நெருங்கக் கூடாது என்று நினைக்கிறாள். சரி. அதற்காக அவன் கண் முன்னே அப்பெண்ணை கொலை செய்து நடுவீட்டில் அவள் பிணத்தை கிடத்துகிறாள். 

இதுபோல் எக்கச்சக்கமாக சொல்லலாம்.‌ அதுவும் நாயகனின் இறந்து போன பூனையை வைத்து அவள் செய்யும் காரியங்கள் எல்லாம் சகிக்கவில்லை. ஒருவர் மீது அப்செஷனாக இருப்பதற்கும் அந்தப் பூனை காட்சிகளுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. முதலில் நாயகி எப்படி இவ்வாறு மாறுகிறாள்? அந்த பொம்மையை விற்பவர்களுக்கு அவளின் பெயர் முதற்கொண்டு தெரிகிறது. அவர்கள் ஏதாவது பேயை இவள் மீது ஏவி விட்டார்களா? பில்லியன் டாலர் பணம் வேண்டும் என்று ஒருவன் வேண்டிக் கொண்டால் கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டுகிறது. யார் திடீரென்று அங்கு வந்து கொட்டுகிறார்கள்? அந்த பொம்மையை தயாரிப்பவர்‌கள் யார்? இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள், நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள். 

இதற்கிடையில், நாயகன் ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதிவரை ‌எதற்கு பேயறைந்தாற்போல ஒரே முகபாவனையை வைத்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. நாயகனை விட நாயகி நன்றாக நடித்திருக்கிறாள். படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. அவ்வளவுதான் இப்படத்தைக் குறித்த நல்ல விஷயங்கள் என்று சொல்ல தோன்றுகிறது. எனக்குப் படம் புரியாமல், பார்க்கத் தெரியாமலும் இருக்கலாம். எனக்குத் தோன்றிய கருத்துக்களை இங்கே எழுதியிருக்கிறேன். படம் பார்த்தவர்கள் தங்களின் கருத்துக்களை கருத்துப் பேழையில் எழுதுங்கள்‌. தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, ஹாலிவுட்டிலும் ஓவர் ஹைப் செய்யப்பட்ட படங்கள் இவ்வாறு தான் புஸ்வானமாக இருக்கும் போல. பாத்து உஷாரா இருந்துக்கனும். 

Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

படித்துதான் ஆகணுமா?- ஆர். அபிலாஷ்

  ஆர்.‌ அபிலாஷின் கல்வி சார்ந்த கட்டுரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு கல்வியாளராக சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து விலகி நடைமுறை சார்ந்தும் தத்துவார்த்தமாகவும் கல்வி குறித்து அவர் வைக்கும் வாதங்கள் முக்கியமானவை. தமிழகத்தில், கல்வி குறித்தான விவாதங்களில், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாதங்களாக எதிர்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு எதிர்தரப்பினர் செய்யும் ரொமாண்டிஸைஸத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய்வதும் கேள்விக்குள்ளாக்குவதன் அவசியங்களைக் கூறுவதுமே இந்நூலின் சாராம்சம்.  ஆங்கில ஹிந்துவில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை முன்வைத்து கல்வி எவ்வாறு பணத்தைக் கடந்த அதிகார மதிப்பை கொண்டுள்ளது, தேர்வுமுறைக்கும் சாதி அதிகாரத்திற்கும் இருக்கும் தொடர்பு, அதன் பொருட்டு ஏன் மக்களால் கல்வி பட்டங்களைப் பெறுவதில் இருந்து தப்பிக்க இயலாது என்று விளக்கியிருக்கும் ‘கல்விப் பண்ணைகளால் உருவான புதிய இந்தியா’ கட்டுரை முக்கியமானது.   கல்வி என்பது நிச்சயமாக இன்று வியாபாரம் தான். கல்வி இலவசமாக இருந்த பொழுது இல்லாத பிரச்சனை இப்பொழுது என்னவெனில், இத்தனை லட்சங்களைச் செலவழித்...