மதியதூக்கத்தில் ஒரு நீண்ட கனவு இன்று. கனவுகள் என்றுமே விசித்திரமானவை. ஏன் வருகிறது, எப்படி வருகிறதென்று தெரியாது. ஆனால் தூக்கத்தில் கனவை நல்ல 'அனுபவிப்போம்'. எது அனுபவிக்கிறதோ! எனக்குப் பெரும்பான்மை நேரங்களில் விழிப்பு வந்தவுடன் கனவு மறந்துவிடும். ஒரு சில கனவுகள் துணுக்குப் போல் ஏதாவது நியாபகம் இருக்கும். நம் நினைவுகளிலிருந்து தான் கனவுகள் தோன்றுகின்றன என்று பொதுவாக சொல்வதுண்டு. அந்த ஆராய்ச்சிக்குள் நான் இறங்கியதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் நான் மனதில் நினைப்பவை தான் கனவாக எனக்கு வரும். ஏதோவொரு சமயத்தில் ஒரு சின்ன சிந்தனை கீற்று மனதில் வந்திருக்கும். உறக்கத்தின்போது கனவில் அன்று பெரிதாக விரியும் அது. எனக்கு வரும் கனவுகளில் அதிகமானவை, எங்காவதொரு இடத்தில் மாட்டிக்கொள்வேன். ஏதாவது பாழடைந்த வீடு, கோயில், எந்த இடமென்றே தெரியாது. மாட்டிக்கொண்டு வெளியில் வருவேன் என்றெல்லாம் இல்லை. ஆனால் வெளியில் வருவதற்கு போராடிக் கொண்டிருப்பேன். கனவா நிஜமா என்றே தெரியாமல் பயத்தில் கத்துவது, அழுவதெல்லாம் உண்டு. எங்கேயோ மாட்டிக்கொண்டிருப்பதையே மறந்து கனவில் வேறொரு கதைக்கு தாவிச் ச...