கடந்த வாரத்தில், ஓர் இரவில் மென்மையான இசை கேட்கும் ஆவலில் எஸ்தாஸ் தோனேவின் "13 Songs of Truth" ஆல்பம் கேட்க ஆரம்பித்து, அது "பிரேமம்" படத்தின் பின்னணி இசைக்கோர்வையான "Unfinished Hope" ற்கு கொண்டு போய் விட்டது. அது எப்பொழுதும் போல் என்னுடைய பத்தாம் வகுப்பு நினைவுகளைக் கிளர்த்திவிட்டது. உடனே எனக்கு பிரேமம் படத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வந்து அன்றிரவே பார்த்தும் விட்டேன். அநேகமாக அப்படத்தை அன்று நான் பார்த்தது இருபதாவது முறையாக இருக்கலாம். அல்லது அதற்கு மேலாகக்கூட இருக்கலாம். இரவு நான் தூங்கச் சென்ற போது மணி பதினொன்று. இன்னும் எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு முந்தைய நாளிரவு, ஏதோவொரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிரேமம் படத்தை, தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்கிக் கொள்வதற்காக பத்தரை மணிவரை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிரேமம் படத்திற்கும் எனக்கும் இரவிற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் போல. முதன்முதலில் அப்படத்தைப் நான் பார்த்ததுகூட லேசாகத் தூறிக்கொண்டிருந்த ஒரு இரவு வேளையில்...