“அந்த சோயாவ வெச்சி ஒன்னு செய்யும் பாருங்க…ஓட்டல் கூட தோத்துடணும். ஒம்பதாங் க்ளாஸ் தான் படிக்கிது. வீட்ல எல்லா வேலையும் செய்யும். ஒடம்பு பெருசா இருக்கறதுக்கு காலைல ஓடிட்டு ஸ்கூல் போகும். கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம் போய்ட்டு ஏதோ அவார்டுலாம் வாங்கிருக்கு.” கண்ணில் அப்படி ஒரு பெருமை அந்த மூதாட்டிக்கு. வயது அறுபதை நெருங்கியிருக்கலாம். அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த இரண்டு பெண்மணிகளுக்கும் அவருக்கும் அதற்கு முன்னர் பழக்கம் இருந்தது போல் அவர்களின் உடல்மொழி இல்லை. பேருந்தில் அமர்ந்திருந்த ஐந்து நிமிட பழக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர்களும், தன் பேத்தியைக் குறித்த பெருமிதத்தில் திளைக்கும் அந்த நெடிந்த, மெல்லிய தோற்றமுடைய அம்மூதாட்டியை உண்மையிலே ரசிப்பது போன்றதொரு பொய்யான பாவனையை காட்டிக் கொண்டிருந்தனர். அவரின் அருகில் இருந்த இன்னொரு நடுத்தர வயதுள்ள பெண்மணி இக்காட்சியைக் கண்டு, அப்பெருமிதங்களுக்கெல்லாம் சொந்தக்காரர் போல் நெளிந்துக் கொண்டிருந்தார். அம்மூதாட்டியின் மருமகளாக அவர் இருப்பார் என்பது என் கணிப்பு. மூதாட்டி விட்டதும் அப்பெண்மணி தொடங்கலானார். “பை...