சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். நீண்ட நாளைய திட்டமெல்லாம் இல்லை. சென்னையில் இருக்கிறேன். அரைமணிநேரப் பயண தூரத்தில் இருக்கிறது. எப்பொழுதும் போல் இன்றும் ‘திடீரென்று’ தோன்றியதால் உடனே சென்றுவிட்டேன். இவ்வாலயம் குறித்து நான் அறிந்திருந்ததெல்லாம், இராமலிங்க அடிகளார், தன் ஒன்பதாம் அகவையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு தெய்வமணிமாலையை இயற்றியது இத்தளத்தில் தான். அச்செய்தி, இக்கோவிலுக்குச் செல்வதில் ஒரு ஆவலை உண்டுபண்ணியிருந்தது. இரவே இத்தளத்தைக் குறித்து கொஞ்சம் படித்து மனதில் கற்பனைகளை வளர்த்திருந்தேன். காலையில், சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து 'கூகுள் மேப்ஸ்' போட்டு சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கலானேன். வழியிலெங்கும் சிறு சிறு இரும்புக் கடைகள், பாத்திரக் கடைகளாய் இருந்தன. கோவிலை நெருங்க நெருங்க சில செம்பிலான கலை வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள், பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் தென்பட்டன. கோவில் உள்ள தெருவென்று, மக்கள் சாலையை அங்கப்பிரதட்சண பாதை போலவா வைத்திருப்பார்கள். சென்னையின் இதர வழக்கமான முகம்ச...