கையில் நூலெடுத்து வாசிப்பதற்கு ஒரு நாளில் ஒரு மணி கூட இல்லாத சமயத்தில், தஸ்தயேவ்ஸ்கியியை வாசிக்கலாம் என்ற திட்டமும் இல்லாமல், எப்படி வெண்ணிற இரவுகளை கையிலெடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. பனி படர்ந்த ஆளரவமற்ற சாலையில், பத்தடி தூரத்தில் மங்கலான ஒளியில் ஒரு மனித உருவம் உங்களை நோக்கி வருகிறது. நெருங்க நெருங்க மெல்ல அதன் நடை, உருவத்தோற்றத்தில் ஏதோ ஓர் உள்ளார்ந்த பரிச்சயம் தெரிகிறது. எதிரில் நேருக்கு நேர் அதன் முகத்தைக் காண்கிறீர்கள். அச்சு அசப்பில் அது நீங்கள் தான். அந்தக் கணத்தில் எப்படியொரு தாங்கொணா அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாவீர்கள். வெண்ணிற இரவுகளை வாசிக்கையில், அதன் நாயகன் தன் கதையைச் சொல்ல சொல்ல அப்படியொரு அதிர்ச்சியிலும் சொல்லவியலா ஏதோ ஓர் உணர்வாலும் பீடிக்கப்பட்டேன். சிறு வயதிலிருந்தே "வித்தியாசமானவள்" எனும் அடைமொழியைச் சுமந்து திரியும் எனக்கு(அப்படி திரிவதில் கொஞ்சம் பெருமையே ஆயினும்) நாம நெஜமாவே "அப்நார்மலோ" என்று பல முறை என்னை நானே சந்தேகித்து வருந்திய நாட்கள் உண்டு. அதை தகர்த்தெறிந்தது சாரு நிவேதிதாவின் "எக்ஸிஸ்டன்ஷியலிஸமு...