பேஸ்புக்கில் ஒருவர் எழுதிய பதிவை வாசித்து, ‘காஸ்ட் அவே’ திரைப்படம் பார்த்தேன். திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. கடிகாரத்தில் முள்ளாக நேரத்தை துரத்திக் கொண்டிருக்கும் நாயகன் (டாம் ஹேன்க்ஸ்) டெலிவரி நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். புத்தாண்டின் மாலைக்குள் திரும்பி வருவதாக காதலியிடம் உறுதியளித்துவிட்டு டெலிவரி சம்பந்தமான பிரச்சனை ஒன்றை தீர்க்க மலேசியாவிற்கு விமானத்தில் செல்கிறார். பசிபிக் பெருங்கடலின் மேலே பறந்து கொண்டிருக்கையில் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி, அவருடன் பயணித்தவர்கள் இறந்து விட, நாயகன் மட்டும் தப்பி ஒரு தீவில் கரை ஒதுங்குகிறான். அதன் பிறகு அத்தீவில் அவனுக்கு என்ன நடக்கிறது, மீண்டும் தன் வீடு திரும்பினானா என்பது தான் கதை. கதையைக் கேட்கவே விறுவிறுப்பாக இருக்கிறதல்லவா, படமும் அப்படித்தான். இரண்டரை மணிநேரம் சென்றதே தெரியவில்லை. படத்தில் எனக்குப் பிடித்த அம்சம் எதையும் மிகையாகக் காட்டாதது தான். படத்தின் முதல் முப்பது நிமிடங்களில் நாயகனின் குணாம்சத்தை விளக்க மிகக் கச்சிதமாகக் காட்சிகளை அமைத்திருந்தனர். படத்தில் நாயகனான டாம் ஹேன்க்ஸின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. இப...