தோழியொருத்தி அளித்த பேய்க்கதையின் உபயத்தால், இரவு முழுவதும் மணிக்கொருமுறை விழிப்பு வந்து அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தேன். விடியற்காலையில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழிப்பு வந்து, கதவைத் திறந்தேன். ஒரு கையில் பேகுடன், இன்னொரு கையில் டிராலியை இழுத்துக் கொண்டு ஒருவள் அறையினுள் நுழைந்தாள். "அந்தக் காட் எனக்குக் குடுத்திருக்காங்க" என்றாள். அந்தக் கட்டில் மற்றும் இன்னொரு கபோடினில் பரப்பி வைத்திருந்த என்னுடைய பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கையில் என்னமோ கேட்டாள் அவள். தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் என்னமோ உளற, தேமே என்று விழித்தாள். "நான் ஃப்ரெஷ் ஆய்ட்டு வரேன்" என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தேன். "நல்ல வேல, நைட்டு ஃபுல்லா இன்னும் எத்தனை நாளைக்கு ரூம்மேட் இல்லாம தனியா நேத்து மாரி பயந்துகிட்டு இருப்பமோனு நெனச்சிட்டிருந்தோம். எப்பிடியோ காலைலே ஒருத்தி வந்து சேந்துட்டா. பாக்க ஓரளவுக்கு நல்ல புள்ளயாதான் தெரியுறா. செட் ஆய்டும்" என பல யோசனைகளுடன் முகத்தைக் கழுவிவிட்டு, குளியலறையைக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். "நான் இங்க ஒரு நாள் தான் தங்...