ஆர். அபிலாஷின் கல்வி சார்ந்த கட்டுரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு கல்வியாளராக சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து விலகி நடைமுறை சார்ந்தும் தத்துவார்த்தமாகவும் கல்வி குறித்து அவர் வைக்கும் வாதங்கள் முக்கியமானவை. தமிழகத்தில், கல்வி குறித்தான விவாதங்களில், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாதங்களாக எதிர்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு எதிர்தரப்பினர் செய்யும் ரொமாண்டிஸைஸத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய்வதும் கேள்விக்குள்ளாக்குவதன் அவசியங்களைக் கூறுவதுமே இந்நூலின் சாராம்சம். ஆங்கில ஹிந்துவில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை முன்வைத்து கல்வி எவ்வாறு பணத்தைக் கடந்த அதிகார மதிப்பை கொண்டுள்ளது, தேர்வுமுறைக்கும் சாதி அதிகாரத்திற்கும் இருக்கும் தொடர்பு, அதன் பொருட்டு ஏன் மக்களால் கல்வி பட்டங்களைப் பெறுவதில் இருந்து தப்பிக்க இயலாது என்று விளக்கியிருக்கும் ‘கல்விப் பண்ணைகளால் உருவான புதிய இந்தியா’ கட்டுரை முக்கியமானது. கல்வி என்பது நிச்சயமாக இன்று வியாபாரம் தான். கல்வி இலவசமாக இருந்த பொழுது இல்லாத பிரச்சனை இப்பொழுது என்னவெனில், இத்தனை லட்சங்களைச் செலவழித்...